தமிழ்மணி

திவ்வியப் பிரபந்த உரைகளில் திருக்குறள்

தொகை நூல்களைக் காட்டிலும் திருக்குறள் ஆட்சியே திவ்வியப் பிரபந்த உரைகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

தொகை நூல்களைக் காட்டிலும் திருக்குறள் ஆட்சியே திவ்வியப் பிரபந்த உரைகளில் அதிகமாகக் காணப்படுகிறது. தமிழறிந்த எல்லாப் பிரிவினரையும் ஈர்த்தது போலவே வைணவ உரையாசிரியர்கள் மனத்தையும் திருக்குறள் ஈர்த்ததற்கான சான்றுகள் பலப்பல.

தான் கருதிய பொருளுக்குச் சான்றாதாரமாகக் குறளை முழுமையாகக் காட்டுதல், முதற்குறிப்பை மட்டும் சுருங்கச் சுட்டிக் குறள் முழுமையும் நினைவுக்குவரச் செய்து கருத்து விளக்கம் தருதல், கருத்து வாங்கி எழுதுதல், இவ்வாறன்றி எழுதுகிற உரைப் போக்கால் இன்ன குறளை நினைந்து எழுதிய விளக்கம் என்று ஊகிக்கவைத்தல், அந்நாளில் குறளுக்கு வழங்கிய பாட பேதங்களைக் காட்டுதல், குறளுக்கு அந்வயம் (கொண்டு கூட்டி) காட்டி மணிப்பிரவாள நடையில் பொருள் கூறுதல், காமத்துப் பால் குறளாயின் தலைவன், தலைவி, தோழி இருவள், அது யார் கூற்று என விளக்குதல் எனப் பல நிலைகளில் திருக்குறள் இவ்வுரைகளில் இடம் பெற்றுள்ளது; எடுத்தாளப்பட்டுள்ளது.

கண்ணனின் பிள்ளைமைக் குறும்புகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பலை ஒரு திருமொழியிற் பாடுவார் குலசேகராழ்வார். அப்பதிகம் முழுவதும் 'சேய்வளர் காட்சியின் சீர்மையை, பெற்ற தாயான தேவகி கண்டு களிக்காத' அவலமே பேசப் பெறும்.

அதில், தண்ணந் தாமரைக் கண்ணனே! கண்ணா (713) எனத் தொடங்கும் ஒரு பாசுரத்தில், தெருவில் நீ புழுதி யாடி வந்து என்மார்பில் பொருந்திடப் பெற்றிலேன்; வண்ணச் செஞ்சிறு விரல்களால் நீ வாரியுண்ட அடிசிலின் மிச்சிலை உண்ணவும் பெற்றிலேன்; ஓ! கொடுவினையேன் என வருந்துகிறாள் ஈன்ற தாயான தேவகி.

இப்பாசுர விளக்கத்தில்,

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ் (64)

மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்; மற்றுஅவர்

சொல்கேட்டல் இன்பம் செவிக்கு (65)

என்னும் குறட்பாக்களைக் காட்டுகிறார் பெரியவாச்சான் பிள்ளை.

இவற்றில் முறையே 'அமுதினும்' (64), 'மற்றவர் தம்' (65) என்பன அவர் கொண்ட பாடமாகவுள்ளன.

திருவாய்மொழியில் அன்னத்தைத் தூது விடும் தலைவி, அவ்வன்னப் பறவைகளை நோக்கி,

உணர்த்தல் ஊடல் உணர்ந்து

உடன்மேயும் மட வன்னங்காள்!

..............

புணர்த்த கையினராய் அடியேனுக்கும்

போற்றுமினே (3231)

என்கிறாள்.

உணர்த்தலின் அருமையும் ஊடலின் அருமையும் உணர்ந்து பிரியாமல் சேர்ந்தே மேய்கின்ற இளமை பொருந்திய அன்னங்களே! (திருவண்வண்டூரில் எழுந்தருளியிருக்கும்) நம்

பெருமானைக் கண்டு குவித்த கையினராய் அடியேனுக்காகவும் துதியுங்கள் என்பது இதன் பொருளாகும்.

இதில், 'உணர்த்தல் ஊடல்' எனத் தொடங்கும் முதலடிக்கான பொருளைப் பின்வருமாறு விளக்குகிறார் நம்பிள்ளை.

அன்னங்கள் ஊடி உணர்ந்து (ஊடல்

நீங்கிப்) புணர்ந்து இன்பம் துய்க்கின்றன. ஊடல், உணர்தல், புணர்தல் ஆகிய மூன்றும் இன்ப நுகர்ச்சிக்கான முறைகள் (போகப்ரகாரம்) என்று குறிப்பிடும் அவர்,

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியார் பெற்ற பயன் (1109)

என்னும் குறட்பாவைச் சிறிய மாற்றத்துடன் எடுத்தாள்கிறார். 'இவை காமம்' என்னுமிடத்து 'இவை மூன்றும்' என்றும், 'கூடியார்' என்னுமிடத்துக் 'காமத்தால்' என்றும் நம்பிள்ளையின் பாடம் வேறுபட்டுள்ளது. இவை அவர் காலத்தில் அவர் வாழ்ந்த பகுதியில் வழங்கிய பாடபேதமா? அல்லது அவர் நினைவிலிருந்து எழுதியதால் இங்ஙனம் நேர்ந்ததா? என்று தெரியவில்லை.

உண்ணும் சோறு பருகுநீர் தின்னும்

வெற்றிலையுமெல்லாம்

கண்ணன் எம்பெருமான் (6-7-1)

என்னும் திருவாய்மொழிப் பாசுரத்தில் தனக்கு வாழ்முதல் (தாரகம்) ஆகிய சோறு போலவும் உடல் வளர்ச்சிக்கு (போஷகம்) காரணமான நீர் போலவும் இனிமைக்கு இடமான (போக்கியம்) வெற்றிலை போலவும் இருப்பவன் இறைவன் என்கிறார் நம்மாழ்வார்.

சோறு, நீர், வெற்றிலை என்று மட்டுமே சொல்லாமல் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை என்று அடை மொழி கொடுத்துச் சொன்னதற்குக் காரணம் என்ன என்று வினா எழுப்பி, அதற்கு விடையும் தருகிறார் திருவாய்மொழி உரையாசிரியர்களுள் ஒருவரான நம்பிள்ளை.

இங்கு குறித்த சோறு, நீர் முதலானவை பசிதாகம் இல்லாத வேளைகளில் விருப்பம் இல்லாதவைகளாகவும் இருக்கும் அல்லவா?

எனவேதான் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை என நிகழ்காலத்தாலே குறித்தார். விரும்புகிற சமயத்தில் தெவிட்டாமலும், தொடர்ந்து மாறாமலும் உண்ணுகிற சோறு போலவும், பருகும் நீர் போலவும் ஆழ்வாரின் இறையனுபவம் மாறாதே இருக்கிறது என்பது கருத்து.

இதன் விளக்கமாகவே,

வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள் (1105)

என்னும் குறளை முழுதுமாக மேற்கோள் காட்டுகிறார் நம்பிள்ளை. எனினும் இக்குறளில், 'வேட்டப் பொழுதில்' என்பது அவர் கொண்ட பாடம். 'வேட்ட அப்பொழுதின்' என்று அவர் கொண்டதன் விளைவு இது.

பரிமேலழகர் உள்ளிட்ட பழைய உரையாசிரியர்கள் இக்குறளுக்கு அவரவர் நோக்கில் மிகவும் நயம்பட உரை கூறியுள்ளனர்.

எனினும், ஈட்டுரைகாரர், 'வேட்ட பொழுதின்' என்னும் இக்குறளைத் துணைக்கொண்டு, 'உண்ணும் சோறும்' என்னும் பாசுரத்திற்குத் தரும் விளக்கம் எண்ணும் தோறும் சுவைபயப்பதாய் இருக்கிறது.

கற்றிலனாயினும் கேட்க

கற்பார் இராமபிரானை அல்லால்

மற்றும் கற்பரோ (7-5-1)

என்று வினவிய நம்மாழ்வார், அதே திருவாய் மொழிப் பாசுரம் ஒன்றில், கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல்லால் மற்றுங் கேட்பரோ என்றும் பாடுகின்றார்.

இப்பாசுரத்திற்கு விளக்கம் தரும் நம்பிள்ளை, 'கல்லாதவனுக்குக் கேட்பதற்கான அதிகாரம் உண்டோ?' என்னும் வினாவெழுப்பி, அதற்கு விடையாக, 'கற்றிலனாகிலும் கேட்கவேண்டுவதுண்டிறே என்று எழுதுகிறார். மேலும் 'கற்றுத் தெளியக் கண்ட பொருளைக் கேட்டு நம்பியிருத்தல்' என்று அதற்கு விளக்கமும் தருகிறார். இவ்விடத்துக் கற்றிலனாயினும் கேட்க' (414) என்று குறளின் முற்பகுதியை நினைந்து அவர் உரை வரைந்திருப்பதை அறியலாம்.

இவ்வுரையாசிரியர்கள் காலத்திலும் (கி.பி. 11 முதல் 15 வரை) திருக்குறள் அனைவராலும் விரும்பிப் பயிலும் பெருநூலாக விளங்கியிருத்தல் வேண்டும். கற்றோரிடையே அதற்கு இருந்த மிகுதியான பயிற்சி கருதியே குறள் முழுவதையும் காட்டாமல், சிறுகுறிப்பாகவோ, சிறு தொடராகவோ எடுத்தாண்டனர் எனலாம். மின்னல் கீற்றுப் போல உள்ள அச்சிறிய குறிப்புகளே முழுக் குறளையும் நினைவுக்குக் கொண்டு வரப் போதுமானவை என்று அவர்கள் கருதியிருக்கலாம். திருக்குறட் செல்வாக்கின் அடையாளம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அலிசா ஹீலி அதிரடி சதம்: ஆஸி. மகளிரணி ஆறுதல் வெற்றி!

புதிய துப்புரவு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அறிக்கை

உதகையில் பத்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கேபிள் காா் திட்டம்

பட்டானூரில் கூட்டப்பட்டது பாமக பொதுக்குழு அல்ல: கே.பாலு

திரிபுரா: சமூக வலைத்தளங்களில் தனிப்பட்ட ஆடியோக்களைப் பகிா்ந்த பாஜக நிா்வாகி நீக்கம்!

SCROLL FOR NEXT