மகாகவி பாரதியாரை சிலர் விமர்சனத்துக்கும், விவாதத்துக்கும் உள்ளாக்க முற்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அவருக்குப் பெருமை சேர்த்தார்.
அப்படி இருக்கும் போது, தங்களை திமுகவினர் என்று சொல்லிக் கொள்ளும் சிலர், பாரதியார் குறித்து விமர்சனங்களை முன்வைப்பதுடன், அவரை ஜாதியின் பெயராலும், கீழ்த்தரமாகவும் சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவிப்பதும், அவரை இழிவுபடுத்தும் விதத்தில் அவதூறுகளை அள்ளி வீசுவதும் முதல்வரின் கவனத்துக்கும், திமுக தலைமையின் பார்வைக்கும் ஏன் வரவில்லை என்று தெரியவில்லை.
ஆர்.எஸ்.எஸ். சார்புடைய 'விஜில்' என்கிற அமைப்பின் அழைப்பை ஏற்று 'நாம் தமிழர்' கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாரதியார் குறித்து உரையாற்றினார் என்பதற்காக, பாரதியாரின் மீது தங்களது காழ்ப்புணர்வை வெளிப்படுத்துவது, பனை மரத்தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெரி கட்டுவதுபோல அல்லவா இருக்கிறது. சீமான் பாராட்டினார் என்பதற்காக பாரதியார் இகழப்படுவது என்பது அறிவார்ந்த செயலாகத் தெரியவில்லை.
தமிழகத்தில் புதியதொரு கூட்டம் உருவாகியிருக்கிறது. மார்க்ஸ், எங்கல்ஸ், பொருளியல் வாதம் குறித்து எதையுமே படிக்காத பலர் 'இடதுசாரிகள்' என்று வலம் வருகிறார்கள். டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் எழுத்தையோ, பேச்சையோ தெரிந்து கொள்ளாமல் அம்பேத்கரிஸம் பேசுபவர்களும் அதிகரித்து விட்டனர். அதேபோலத்தான், 'ஈரோட்டு பகலவன் பெரியாரின் பாசறையில் இருந்து வந்தவர்கள்' என்று தங்களைத் தாங்களே பறைசாற்றிக்கொள்ளும் கூட்டத்தினரும். இவர்களில் 90% பெரியாரின் பேச்சுகளைக் கேட்டவர்களோ, எழுத்துகளைப் படித்தவர்களோ அல்லர்.
பெரியார் 1925-இல் 'குடியரசு' இதழைத் தொடங்கியபோது, ஆரம்ப காலத்தில், முகப்பில் பாரதியார் பாடல்களை பொறித்து வெளியிட்டார் என்பது இவர்களுக்கு எப்படித் தெரியும்? பெரியார் பாரதியாரை விமர்சித்தபோதுகூட கண்ணியக் குறைவாகப் பேசியதில்லை.
பாரதியார் குறித்து 1948-இல் அண்ணா என்ன சொன்னார் என்பதும், மகாகவியைத் தோழர் ஜீவா உள்ளிட்ட பொதுவுடமைத் தோழர்கள் எப்படித் தோளில் தூக்கிக் கொண்டாடினார்கள் என்பதும் இவர்களுக்குத் தெரியாது. தமிழ், தீண்டாமை, மகளிர் விடுதலை, பொதுவுடமைச் சிந்தனை என்று எந்தவொரு புரட்சிகரமான கருத்து குறித்துப் பேசுவதாக இருந்தாலும் தமிழகத்தில் அதற்கு முன்னோடி மகாகவி பாரதிதான்.
இவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டால் கொதித்துப் போயிருப்பார் பாவேந்தர் பாரதிதாசன். அவர் இல்லாமல் போய் விட்டாரே இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல!
மகாகவி பாரதியார் என்கிற கவிஞனும் சரி, எழுத்தாளனும் சரி,சமூக சீர்திருத்தவாதியும் சரி உலகளாவிய ஆளுமையாக வளர்ந்து பல ஆண்டுகளாகிவிட்டன. சிறுமதியாளர்களின் விமர்சனங்கள் கிணற்றுத் தவளைகளின் கூச்சலாகத்தான் இருக்கும். ஆனாலும், முதல்வரும் அரசும் இதுபோன்ற கீழ்த்தரமான செயல்பாடுகள் அவர்கள் பெயரால் நடப்பதை வேடிக்கை பார்ப்பது சரியல்ல!
எழுத்தாளர் மாலன் 'கலைமகள்' பருவ இதழில் தொடராக எழுதி வந்த 'உண்மை நின்றிட வேண்டும்' புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. அந்தப் புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பு மாலனால் எனக்கு வழங்கப்பட்டது.
தில்லி சென்றிருந்தேன். நல்ல குளிர். அலுவலக வேலைகள் முடிந்து நள்ளிரவுக்குப் பிறகுதான் அந்தப் புத்தகத்தைப் படிக்க உட்கார்ந்தேன். கீழே வைக்கத் தோன்றவில்லை. ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். இப்படியொரு முயற்சியில் இதற்கு முன்னர் யாரும் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்று நினைத்ததை உடனடியாக அவருக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டேன்.
'பாரதி பற்றிய புனைவுகளை, கட்டுக் கதைகளைத் தரவுகளோடு தகர்க்கும் நூல்' என்று புத்தகத்தின் முகப்பிலேயே கூறப்பட்டிருக்கிறது. 17 ஆண்டுகளே எழுதி, அந்தக் குறுகிய காலத்தில் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் மட்டுமல்ல, அரசியல், சமூகம், இதழியல் என்று பல துறைகளுக்கும் பாரதியாரின் பங்களிப்பு என்பது எண்ணில் அடங்காது. நூற்றாண்டு கடந்தும், சற்றும் வீரியம் குறையாமல் உயர்ந்து நிற்கும் அந்த
ஆளுமையின் வாழ்க்கை குறித்த
முழுமையான தகவல்கள் இன்னும்
கிடைத்தபாடில்லை என்பது
வியப்பாக இருக்கிறது.
பாரதியாரின் இளமைப் பருவம் குறித்து எந்தவித ஆதாரபூர்வ செய்திகளும் கிடைத்தபாடில்லை என்கிறார் மாலன். குறிப்பாக, அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த காசிவாசம் குறித்த சரியான தகவல்கள் கிடைத்தபாடில்லை என்று மாலன் பதிவு செய்கிறார். அவரது மனைவி செல்லம்மா பாரதி தனது நூலில் பாரதியாரின் காசிவாசம் குறித்து ஓர் அத்தியாயம் எழுதியிருக்கிறார் என்றாலும்கூட, அது குறிப்பிடும்படியாக இல்லை. மற்றவர்களின் பதிவுகளில் இருந்து வேறுபடுகின்றன.
அதேபோலத்தான், பாரதியாருக்கும் அவர் 'ஞானகுரு' என்று கருதிய சகோதரி நிவேதிதாவுடனான சந்திப்பு, காசி காங்கிரஸ் மாநாட்டின்போதா அல்லது கல்கத்தா மாநாட்டின்போதா என்கிற கேள்வியை நுணுகி ஆய்ந்து தேர்ந்த முடிவைத் தெரிவிக்கிறார் மாலன்.
பாரதியார் - அரவிந்தர் இடையேயான நட்பும் உறவும், பாரதியார் பட்டம் சூட்டப்பட்ட விதம், அவரது மரணம் ஆகியவை குறித்துத் தெளிவின்மை காணப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார் மாலன். ''தமிழ்ச் சமூகத்தில் புதிய ஒளி பாய்ச்சிய ஒரு மாமனிதனின் வரலாறு அலட்சியமாகவும், முரண்பாடுகளோடும், பிழைகளோடும் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது''
என்று மாலன் முடிக்கும்போது, அவரைப்போலவே நாமும் வேதனைப் பெருமூச்சு விடுகிறோம்.
நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு ஹிந்தி பத்திரிகையில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் எழுதிய கவிதையைப் படித்தபோது, அதைத்
தமிழில் மொழிபெயர்த்து, அவரது பிறந்த நாளின்போது (டிச.25) வெளியிட வேண்டும் என்று வைத்திருந்தேன்.
அந்தக் கவிதை இதுதான்-
வீட்டின் மூலையில்
சுதந்திரமாகச் சிரிக்க
ஓர் இடம்...
தூரத்து சூரியன்
தனது கிரணங்களை நீட்டி
வீட்டுக்குள் வருவதற்கு ஒரு வழி...
வீட்டிற்கு முன்னால் ஒரு மரம்
அதில் அமர்ந்திருக்கும் பறவைகள்
அவற்றின் உரையாடல்கள்...
வாழ்க்கையின் ஒவ்வொரு
கட்டமும் வேடிக்கையானது
சந்தோஷமானது
அனுபவியுங்கள்...
நேரம் குறுகியது
வயதும் அப்படித்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.