தமிழ்மணி

மாறனோ? ஆறனோ?

திருவெண்ணெய்நல்லூரில் இறைவனால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார் திருநாவலூரையும், திருத்துறையூரையும் வழிபட்ட பின் திருவதிகை நோக்கிச் சென்றார்.

முனைவர் தெ.ஞானசுந்தரம்

திருவெண்ணெய்நல்லூரில் இறைவனால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார் திருநாவலூரையும், திருத்துறையூரையும் வழிபட்ட பின் திருவதிகை நோக்கிச் சென்றார்.

அஃது அப்பரடிகள் கைத்தொண்டு புரிந்த தலம் என்பதனால் அதனை மிதிக்க அஞ்சிச் சித்தவடமடத்தில் தங்கியிருந்தார்.

அதிகைப் பெருமான் திசையறியா மூப்பினராய் வந்து உறங்கும் அவரது தலையில் திருவடி வைத்து ஆட்கொண்டார். அப்போது அவர் உருகிப் பாடிய பதிகமே 'தம்மானை அறியாத சாதியார் உளரே' என்பது. அதன் எட்டாம் பாடல்,

பொன்னானை மயிலூர்தி முருகவேள் தாதை

பொடியாடு திருமேனி நெடுமாறன் முடிமேல்

தென்னானைக் குடபாலின் வடபாலின் குணபாற்

சேராத சிந்தையான் செக்கர்வான் அந்தி

அன்னானை அமரர்கள்தம் பெருமானைக் கருமான்

உரியானை அதிகைமா நகருள்வாழ் பவனை

என்னானை எறிகெடில வடவீரட் டானத்து

உறைவானை இறைபோதும் இகழ்வன்போல் யானே

என்பது.

இதில் வரும் 'நெடுமாறன் முடிமேல் தென்னானை' என்னும் தொடருக்கு அறிஞர்கள் கொண்டுள்ள பொருள்கள் வருமாறு: தருமை ஆதீன வெளியீட்டில், 'ஞானசம்பந்தரால் திருநீற்றில் மூழ்கிய திருமேனியையும், 'மேற்கு, வடக்கு, கிழக்கு என்னும் திசைகளில் உள்ள பிற நாடுகளின் மேற்செல்லும் மண்ணாசை அற்ற மனத்தையும் உடையனாய்ச் சிறப்பெய்திய நெடுமாறனது முடிமேல் நின்ற தென்னாட்டவனும்' என்று பொழிப்புரை தந்துள்ளார்

அறிஞர் சி.அருணைவடிவேல் முதலியார்.

'சைவ சித்தாந்தப் பெருமன்றம் வெளியீட்டுள்ள ஏழாந்திருமுறையில், 'நெடுமாறன் முடிமேல் தென்னானை பாண்டியன் முடியை ஏற்றுத் தென்னாட்டை ஆண்ட சுந்தரனை' என்று குறித்துள்ளார் அ. சோமசுந்தரம் செட்டியார்.

இங்கு நெடுமாறனைப் பற்றிய குறிப்புள்ளதாகக் கருதுவது பொருந்தமாக அமையவில்லை. இதனால்தான் போலும் நெடுமாறன் என்பதனை நெடுமால் தன் என்று முனைவர் ப. பாண்டிய ராஜா தம் சொல்லடைவில் பிரித்துள்ளார். இலக்கணப்படி இப்பிரிப்புச் சரியே.

ஆனால் பொருளோடு பொருந்தவில்லை. நெடுமாறன் என்பதனை அடுத்துள்ள 'முடிமேல்' என்பது இச்சிக்கலைத் தீர்க்கத் துணைபுரிகிறது.

'நீடும் புனல்கங்கையும் தங்க முடிமேல்'

(சம்பந்தர் 353)

'பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்'

(சம்பந்தர் 944)

'ஆறு ஏறு சடைமுடிமேல் பிறைவைத்தானே'

(அப்பர் 6277)

மதியம் வைத்த ஆறன் ஆரூர்

(சம்பந்தர் 2330)

என்று வருவதனை நோக்கினால் நெடும் ஆறன் என்று பிரித்துப் பொருள் கொள்வதே தக்கதாகத் தோன்றுகிறது. இவ்வெடுத்துக்காட்டுகளில் கங்கையின் நெடுமை பற்றிய குறிப்பும் ஆறன் என்னும் சொல்லாட்சியும் இருத்தல் காணலாம்.

இத்தொடருக்கு முடிமேல் நெடிய கங்கை ஆற்றை உடையவன் என்பது பொருளாகும். இதனால் முடி என்பதற்குக் கிரீடம் என்று பொருள் கொள்வது சரியன்று.

இப்பாட்டிற்கு உரைகண்டவர்கள் நெடும் ஆறன் என்று பிரித்துப் பொருள் காணாமைக்குக் காரணம் உண்டு. நெடுமை என்பது பண்புப்பெயர். அது வல்லினம் வரும்போது மை விகுதி கெட்டு இன எழுத்து மிக்கு நெடுங்கடல், நெடுஞ்சுடர், நெடுந்தெரு, நெடும்போர் என்று வரும். மெல்லினமும் இடையினமும் வரும்போது மை விகுதி கெட்டு, நெடுநெறி, நெடுமார்பு, என்றும், நெடுவழி என்றும் வரும். உயிரினம் வரும்போது மை விகுதி கெட்டு ஒற்று இரட்டி நெட்டிரா என்று வரும்.

'நெட்டிரா உடைத்தே' (145) என்பது குறுந்தொகை. இங்கு நெட்டாறன் என்று வாராமல் நெடும் ஆறன் என்று வந்துள்ளதால் அவர்கள் நெடுமாறன் என்பதனைப் பிரிக்காமல் 'நெடுமாறன் முடிமேல் தென்னானை' என்று

இயைத்துப் பொருள் கொண்டுள்ளனர்.

ஒரோவழி சிறுமை, நெடுமை போன்ற பண்புப்பெயர்கள் உயிர் எழுத்துகள் வரும்வழி மை விகுதி கெட்டுத் தன் ஒற்று இரட்டிச் சிற்றிலை, நெட்டிருங்குன்றம் என்று வாராமல் சிறிய என்றும் நெடிய என்றும் பெயரெச்சமாகி, யகரம் கெட்டுச் சிறியிலை, நெடி இருங்குன்றம் என்று விகாரமாய் வருதல் உண்டு.

'புன்புறத் தமன்ற சிறியிலை நெருஞ்சி' (குறுந். 202) என்றும், 'நெடி இருங்குன்றத்து' (அகம் 288) என்றும் வருதல் காணலாம். பெருமை, நெடுமை என்பவை உயிரினம் வரும்போது மை விகுதி கெட்டு முதல் நீண்டு பேருலகம், பேரின்பம் என்று வாராமல் மை விகுதியில் ஐகாரம் மட்டும் கெட்டு,

'என்பெரும் உலகம் எய்தி

(பெரி.பு. இளையான்குடி 26)

'ஊழி ஒருபெரும் இன்பம் ஓர்க்கும்

( சம்பந்தர் 3944)

என்றும், மை விகுதி முற்றும் கெட்டு,

'நெடுஅண்டம் மூட நிலம்நின்று'

(அப்பர் 4293)

'நெடுஎரி நடுவெயொர் நிகழ்தர'

(சம்பந்தர் 3731)

என்றும் திருமுறைகளிலேயே வருதல்

காணலாம்.

இப்பாட்டிலும் அவ்வாறே 'நெடும் ஆறன் முடிமேலே' என்று வந்துள்ளது. 'உமை கூறன்' (சம்பந்தர் 2821) நுண்ணிடையாள் கூறன் சுந்தரர் 8072) என்று வருவது போல் ஆறன்

என்பது அமைந்துள்ளது. அடுத்து, நெடுமாறன் முடிமேல் என்பதனைத் தென்னானை என்பதனோடு இயைத்துப் பொருள் கொள்வதும் இயல்பாக அமைய வில்லை. சிவபெருமான் எங்கும் இருந்தாலும் தென்னாட்டில் உகந்து உறைகிறான்; மற்ற இடங்களில் உறைகிறான். மாணிக்கவாசகரும் 'அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடு என்றும் தென்பாண்டி நாடே தெளி' (திருத்தசாங்கம், 2) என்கிறார்.

'தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி (போற்றித் திருஅகவல் 164-165) என்பதும் இக்காரணத்தினாலேயே ஆகும். சுந்தரமூர்த்தி நாயனார் தென்னாட்டில் பிறந்ததற்குக் காரணம் யாது என்று வினவிய முனிவர்களுக்கு உபமந்யு முனிவர் அதுவே புனித பூமி என்றும் அங்கு தான் தில்லை, திருவாரூர், திருக்கச்சி, திருவையாறு, திருக்கழுமலம் போன்ற திருத்தலங்கள் இருக்கின்றன என்றும் தெரிவித்ததாகச் தெய்வச் சேக்கிழார் பாடியுள்ளார்.

இதனால் இரண்டாவது அடிக்கு, 'தென்னாட்டை விரும்பியிருப்பவன் என்றும், மேற்கிலும் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள நாடுகளில் சென்று உறைதற்குத் திருவுள்ளம் கொள்ளாதவன் என்றும் பொருள் கொள்வதே பொருத்தமாக அமையும். இதனால், இப்பாட்டில் பாண்டியன் மாறன் குறிக்கப்பட வில்லை என்பதும் கங்கை ஆறனே குறிக்கப்படுகிறான் என்பதும் தெளிவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

SCROLL FOR NEXT