மார்கழி பிறந்துவிட்டால் சென்னை மாநகரம் விழாக்கோலம் பூண்டுவிடுகிறது. ஒருபுறம் சபாக்களில் இசை விழாக்கள் என்றால், இன்னொருபுறம் நந்தனம் உடல்கல்வியியல் கல்லூரித் திடலில் சென்னைப் புத்தகக் காட்சி. இதற்காகவே காத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது, இசையின் மீதும், வாசிப்பின் மீதும் மக்களுக்கு ஆர்வம் குறைந்துவிடவில்லை என்கிற மகிழ்ச்சி ஏற்படுகிறது.
டிசம்பர் 27-ஆம் தேதி தொடங்கிய 48-ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் இந்த ஆண்டு 900-க்கும் அதிகமான அரங்குகள் நிறுவப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கான பதிப்பகத்தினர் தங்கள் பிரசுரங்களைக் காட்சிப்படுத்தி வாசகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். தலைவர் 'கவிதா பதிப்பகம்' சேது சொக்கலிங்கமும், செயலர் 'நாதம் கீதம் பப்ளிகேஷன்ஸ்' முருகனும் இந்த ஆண்டு புத்தகக் காட்சியை ஒருங்கிணைத்திருக்கிறார்கள்.
அரங்குகளை முறைப்படுத்தி வழங்குவது, பார்வையாளர்களுக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பது மக்களை ஈர்ப்பதற்காக விளம்பரங்கள் செய்வது உள்ளிட்டவை மட்டுமல்லாமல், தினந்தோறும் நிகழ்ச்சிகளை நடத்துவது என்பது லேசுப்பட்ட பணியல்ல. என்னதான் கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டாலும் குறைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்பது அனுபவபூர்வ உண்மை.
48 ஆண்டுகள் கடந்தும்கூட சென்னையில் புத்தகக் காட்சிக்கான நிரந்தர மையம் இன்னும் அமையவில்லை என்பது மிகப் பெரிய குறை. இது குறித்து ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் காட்சி நடைபெறும்போது பேசுவதும், முடிந்த பின் மறந்துவிடுவதும் வழக்கமாகவே மாறிவிட்டது. நிரந்தரக் கட்டடம் இல்லாததால், ஆண்டுதோறும் அரங்கம் அமைத்து புத்தகக் காட்சியை நடத்துவதில் ஏற்படும் பொருள் விரயமும், சிரமங்களும் சொல்லி மாளாது.
எனக்குத் தெரிந்து இதுவரை மூன்று முதல்வர்கள் சென்னைப் புத்தகக் காட்சிக்கு நிரந்தரமான இடம் ஒதுக்கித்தந்து, ஆண்டு முழுவதும் அங்கே விற்பனைக்கு புத்தகங்களைக் காட்சிப்படுத்த வழிவகை செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். அவை தேர்தல் வாக்குறுதியாக மாறிவிட்டன என்பதை இங்கே வேதனையுடன் பதிவு செய்யத் தோன்றுகிறது.
சென்னை புத்தகக் காட்சியில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன; பல முன்னணி எழுத்தாளர்களை அவர்களது வாசகர்கள் சந்தித்துப் பேசவும், அவர்களிடம் கையொப்பமிட்ட படைப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் முடிகிறது; பெற்றோர் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து பிஞ்சு நெஞ்சங்களில் வாசிப்பு ஆர்வத்தை விதைப்பதற்கு புத்தகக் காட்சி உதவுகிறது; பல புதிய படைப்புகளை வெளிக்கொணரவும், படைப்பாளர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் இடையேயான உறவை ஏற்படுத்தவும் இது நல்லதொரு வாய்ப்பாக அமைகிறது.
இவை மட்டுமே போதாது. ஒவ்வொரு ஆண்டும் பிற இந்திய மொழிப் படைப்பாளிகளை அழைத்து வந்து அவர்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழாவாகவும் நமது சென்னை புத்தகக் காட்சி அமைய வேண்டும். அப்போதுதான், நமது படைப்பாளிகளும் பிற மொழி வாசகர்களுக்கு அறிமுகமாவார்கள். கருத்தரங்கம், ஆய்வரங்கம், கவியரங்கம் உள்ளிட்டவை ஆண்டுதோறும் புத்தகக் காட்சியுடன் நடத்தப்பட வேண்டும்.
அதற்கெல்லாம் நிரந்தரமான புத்தகக் காட்சி மையம் உருவாக வேண்டும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!
புத்தக விமர்சனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது டாக்டர் சுதா சேஷய்யன் எழுதிய 'ஆதிசங்கரரும் அபிராமி பட்டரும்' என்கிற புத்தகம். அந்தத் தலைப்பேகூட ஒரு நொடி சிந்திக்க வைத்தது. இருவருமே தென்னகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும்கூட, காலத்தால் வேறுபட்டவர்கள். முன்னவர் வடமொழி வித்தகர் என்றால் பின்னவரான அபிராமி பட்டரோ அந்தாதித் தமிழுக்கு அடையாளம். எனது சந்தேகத்துக்கு விடை பின்னட்டைக் குறிப்பில் இருந்தது.
'பிரபஞ்ச ஆற்றல் சக்திக்குப் பெண் வடிவம் தந்து வணங்குகிற வழக்கம், பாரதத்தின் பெருமை. இந்தப் பெருமைக்குப் பெருமிதம் சேர்த்த காளிதாசர் முதல் காளமேகம் வரை, இராமகிருஷ்ண பரமஹம்சர் முதல் பாரதியார் வரை, அனைவரும் அம்பிகை உபாசகர்கள். அம்பிகைக்குப் பாமாலைகள் சூட்டிய இருவருடைய இணையற்ற மலரணிகள் இரண்டினை இணைத்துப் பார்த்து அம்பிகையின் தாள்பணியும் முயற்சியே இது'' என்பதுதான் டாக்டர் சுதா சேஷய்யனின் விளக்கம்.
'அபிராமி என்னும் சொல்லுக்குப் 'பேரழகு உடையவள்' என்று பொருள். ஆதிசங்கரர் அழகின் பெருக்கையும், ஆனந்தப்பெருக்கையும் பாடினார் என்றால், அபிராமி பட்டர் அந்தாதியின் மூலமாகப் பேரழகின் வடிவத்தைப் பாடினார். அன்னையின் அழகின் பெருக்கத்தைத்தான் இருவரும் பாடினார்கள் என்னும் காணத்தால், ஆதிசங்கரரும் அபிராமி பட்டரும் என்னும் ஒப்புமை சாலப் பொருந்துகிறது'' என்கிறார் அணிந்துரை வழங்கி இருக்கும் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதியும், தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவருமான நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன்.
சென்னை நாரதகான சபாவில் டாக்டர் சுதா சேஷய்யன் நிகழ்த்திய ஐந்து நாள் 'செளந்தர்ய லஹரி' விளக்கத்தை யூட்யூபில் கேட்டு மகிழ்ந்தவன் நான். அம்பாளின் செளந்தர்யத்தை (அழகை) ரசித்து, வர்ணித்து பக்திப் பரவசத்தில் மூழ்கியவர் ஆதிசங்கரர் என்பது டாக்டர்
சுதா சேஷய்யனின் அந்த விளக்கத்தைக் கேட்டவர்களுக்குத் தெரியும். இந்தப் புத்தகத்தில், செளந்தர்ய லஹரியின் பல வர்ணனைகளும், அபிராமி பட்டரின் வர்ணனைகளுடன் ஒத்துப்போவதைச் சுட்டிக்காட்டி, இரண்டுக்கும் இணைப்புப் பாலம் போடுகிறார் அவர்.
என்னைப்போல சம்ஸ்கிருதம் படிக்காத இறை நம்பிக்கையாளர்களும் படித்து மகிழும் விதத்தில் எழுத்துப் பதிவு செய்திருப்பதற்கு நன்றி!
கணவனைப் பிரிந்து மனைவி வாழ்ந்துவிட முடியும்; ஆனால், மனைவியை இழந்த கணவர்கள் அனுபவிக்கும் வேதனையைச் சொல்லி மாளாது. 'ஆண் உடல்; பெண் உயிர்' என்கிற 'மாதொருபாகன்' தத்துவம் எத்துணை உண்மை என்பதை மனைவியைப் பிரிந்த கணவன்மார்களிடம் கேட்டால் சொல்வார்கள்.
மெஹராஜ் இஸ்மாயில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு 'நீ மழை, நான் மழலை'. அதில் இடம் பெறுகிறது இந்தக் கவிதை-
வேண்டிய எதையும்
விருந்தாளியைப் போலவே
கூச்சத்துடன் கேட்கிறார்
அம்மாவின் மறைவிற்குப் பிறகு
அப்பா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.