தமிழக அரசு நான் தெரிவிக்கும் கருத்தைத் தவறாக கருதிடலாகாது. இதைத் தெரிவிக்க நேர்ந்ததற்கு ஒரு பின்னணி உண்டு.
திருவள்ளுவர் திருநாளையொட்டி, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்மொழிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழின உயர்வுக்கும் பெருமை சேர்த்தவர்கள் விருது வழங்கி கெüரவிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு விருது பெற்றவர்களில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலும் ஒருவர். அவருக்கு காமராஜர் விருது வழங்கப்பட்டது.
அவருடன் புலவர் மு.படிக்கராமு (திருவள்ளுவர் விருது), எல்.கணேசன் (அண்ணா விருது), கவிஞர் கபிலன் (பாரதியார் விருது), கவிஞர் பொன்.செல்வகணபதி (பாரதிதாசன் விருது), மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் (திரு.வி.க. விருது), விமர்சகர் வே.மு.பொதியவெற்பன் (கி.ஆ.பெ.விசுவநாதம் விருது) ஆகியோரும் கெளரவிக்கப்பட்டனர். விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ.2 லட்சத்துக்கான காசோலையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டன.
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலர் விடுதலை ராஜேந்திரனுக்கு பெரியார் விருதும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலர் து.ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருதும் வழங்கப்பட்டன. விருதாளர்களுக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டன.
இதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட கலைஞர் விருது முதல் முறையாக புலவர் முத்துவாவாசிக்கு வழங்கப்பட்டது. விருதாளருக்கு விருதுத் தொகையாக ரூ.10 லட்சமும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டன.
எனக்கும் கே.வி.தங்கபாலுக்குமான தொடர்பு ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் நீடித்து நிற்பது. காங்கிரஸின் இன்றைய முன்னணித் தலைவர்கள் பெரும்பாலானோரைப் போலல்லாமல், தனது தொடக்க காலம் முதல் கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் தொடர்ந்து விசுவாசமாக இருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் அவர்.
எனக்கும் காமராஜர் விருது பெற்ற கே.வி.தங்கபாலுக்கும் இடையேயான தொடர்பு குறித்து நன்றாகத் தெரிந்த திருச்சியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தொலைபேசியில் என்னை அழைத்தார். காமராஜர் விருதை தங்கபாலு ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்று அவர் தெரிவித்தபோது நான் திடுக்கிட்டேன். அவர் சொன்ன கருத்தை, தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.
தமிழுக்கும் தமிழினத்துக்கும் தொண்டாற்றிய மாபெரும் தலைவர்களின் பெயர்களில் விருதுகள் ஏற்படுத்துவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில் விருதுத் தொகையில் பாகுபாடு என்பது தவிர்க்கப்பட வேண்டும்.
திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், காமராஜர், அண்ணா, திரு.வி.க., கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் பெயரிலான விருதுகளுக்கான பரிசுத் தொகை ரூ.2 லட்சம்; பெரியார், அம்பேத்கர் பெயரிலான விருதுகளுக்கு பரிசுத் தொகை ரூ.5 லட்சம்; கலைஞர் விருதுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை என்பது அந்த ஆளுமைகளின் புகழையோ, பெருமையையோ எள்ளளவும் கூட்டவோ, குறைக்கவோ செய்துவிடாது. ஆனால், என்னைத் தொலைபேசியில் அழைத்த அந்த காங்கிரஸ் தொண்டர் போன்ற சாமானியர்கள் தங்களது தலைவர் குறைத்து மதிப்பிடப்படுகிறார் என்று கருத வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
மத்திய அரசு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், பாரத ரத்னா என்று நான்கு அடுக்கு விருதுகளை வழங்குவதுபோல, பொதுப் பெயர்களில் தமிழறிஞர்களையும், தமிழினத்துக்குத் தொண்டாற்றியவர்களையும் பாராட்டி கெüரவிக்க முற்பட்டால் சிறப்பாக இருக்கும்.
ஏற்கெனவே பாரத ரத்னாவுக்கு நிகராக ஆண்டுதோறும் 'தகைசால் தமிழர்' விருது தமிழக அரசால் நிறுவப்பட்டிருக்கிறது. அதுபோல, ஏனைய விருதுகளையும் பொதுப் பெயரில் நிறுவும் முறைக்கு தமிழக அரசு மாற வேண்டும் என்பது எனது வேண்டுகோள். தலைவர்கள் பெயரிலான விருதுகளை அந்தந்த அரசியல் கட்சிகள் வழங்கட்டும். தமிழ்நாடு அரசு தவிர்க்கலாமே...
புத்தகக் காட்சிக்கு சென்றிருந்தபோது முனைவர் சே.கரும்பாயிரத்தைச் சந்தித்தேன். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இளநிலை ஆராய்ச்சி அலுவலராக இருக்கும் முனைவர் சே.கரும்பாயிரம் 'தமிழ்மணி' வாசகர்களுக்கு நன்றாக அறிமுகமானவர். தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர்.
அவர் பதிப்பாசிரியராக இருந்து புல்லங்காடனாரின் கைந்நிலையை செம்பதிப்பாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். 'கைந்நிலை' குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, அதற்கு மேல் தெரிந்திராத எனக்கு முனைவர் கரும்பாயிரம் புதிய பல தகவல்களை இதன் மூலம் கற்றுத் தருகிறார்.
நாலடியார் முதலாக கைந்நிலை ஈராக பதினெட்டு நூல்கள் 'பதினெண் கீழ்க்கணக்கு' என்ற தொகுப்பில் இடம்பெறுகின்றன. அவற்றுள் கைந்நிலை, இன்னிலை ஆகிய இரு நூல்களில் எது பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்கிற ஐயம் சி.வை.தாமோதரம்பிள்ளையால் 19-ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது.
செல்வக் கேசவராய முதலியார், இரா.இராகவையங்கார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, வா.மகாதேவ முதலியார், ச.வையாபுரிப் பிள்ளை, மயிலை சீனி.வேங்கடசாமி உள்ளிட்ட அறிஞர்கள் அது குறித்து இருவேறு கருத்துகளைக் கொண்டிருந்தனர். பெரும்பான்மையான ஆய்வறிஞர்கள் பதினெண் கீழ்க்கணக்கின் 18-ஆவது நூல் 'கைந்நிலை' என்பதை ஏற்றுக்கொண்டனர். 1931-ஆம் ஆண்டு இ.வை.அனந்தராமையர் என்பவர் முதல் முதலில் கைந்நிலையைப் பதிப்பித்தார். அதைத் தொடர்ந்து பல பதிப்புகள் வெளிவந்திருந்தன.
முனைவர் கரும்பாயிரம் இதுவரை கிடைத்துள்ள ஓலைச்சுவடிகள், சுவடிப் பதிப்புகள், உரையாசிரியர்களின் மேற்கோள் செய்யுள்கள், அடிக்குறிப்புகள் ஆகியவற்றின் துணையோடு முதல் முறையாக கைந்நிலையை மூலப் பாடத்தை உறுதி செய்து, ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் வகையில் செம்பதிப்பாகப் பதிப்பித்திருக்கிறார்.
காலம் அசுர வேகத்தில் ஓடுகிறது. நண்பர் 'கழுகு' ராமலிங்கம் மறைந்து சில ஆண்டுகளாகிவிட்டன. அவரும் அவரது மனைவி தேவகி ராமலிங்கமும் இலக்கிய ஆர்வலர்கள். நிவேதிதா பதிப்பகம் தொடங்கினார்கள். நண்பர் ராமலிங்கத்தின் மறைவுக்குப் பிறகு திருமதி தேவகி அதை நடத்தி வருகிறார்.
கவிஞர் பல்லவி குமாரை ஆசிரியராகக் கொண்டு விருத்தாசலத்தில் இருந்து வெளிவரும் அக்டோபர்-டிசம்பர் 2024 'தமிழ்ப் பல்லவி' காலாண்டு இலக்கிய இதழைப் புரட்டிப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் தேவகி ராமலிங்கத்தின் ஹைக்கூ கவிதைகள் வெளிவந்திருந்தன. வெளியாகியிருந்த தேவகி ராமலிங்கத்தின் கவிதைகளில் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
அருகருகே வீடுகள்
தூரமாய் மனிதர்கள்
அடுக்குமாடிக் குடியிருப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.