சீரான உணவுப் பழக்கம், உடற்பயிற்சிகளால் நமது உடலைப் பாதுகாத்துக் கொள்வது மிக அவசியம். இறந்துவிட்ட ஒருவரின் உடலை சில காலம் பாதுகாத்து வைக்கவேண்டிய அவசியமும் சில நேரங்களில் இருக்கவே செய்கிறது. எகிப்து நாட்டின் பிரமிடுகள் பற்றியும், அங்கு பதனப்
படுத்தி வைக்கப்பட்டுள்ள 'மம்மி' என்று குறிப்பிடப்படும் இறந்த உடல்களைப் பற்றியும் நாம் அனைவருமே அறிவோம்.
உரிய மருத்துவ மூலிகைகளைக் கொண்டு பாதுகாக்கப்பட்ட உடல்களே இந்த மம்மிகள். அறிவியல் வளர்ந்த இன்றைய நிலையில், தேவை கருதி இறந்த உடல்கள் பதனப்படுத்தி வைக்கப்படுகின்றன. தலைவர்கள் இறந்துவிட்டால், மக்களின் அஞ்சலிக்காக ஓரிரு நாள்கள் உடல்கள் பாதுகாத்து வைக்கப்படுகின்றன.
Embalming என்று ஆங்கிலத்திலும், 'பிணச்சீரமைப்பு' என்று தமிழிலும் கூறப்படும் இந்த முறையில், இறந்த உடலில் இருந்து குருதி முழுவதுமாக வெளியேற்றப்பட்டு, மருத்துவக் கரைசல் ஒன்று உடலில் ஏற்றப்படுகிறது. அதன் பயனாக, இறந்த உடலில் மாற்றம் ஏற்படுவதில்லை.
உடலைப் பாதுகாத்து வைத்திருப்பது பற்றி கம்பன் மிக இயல்பாகக் குறிப்பிடுகிறான். தயரதன் இறந்துவிட்டான். அவனது மகன்களான இராமன், இலக்குவன் இருவரும் சீதையுடன் ஏற்கெனவே காட்டுக்குப் போயாகிவிட்டது. தயரதனின் மற்ற இரு மகன்களான பரதனையும் சத்துருக்கனையும் தயரதனே கேகய நாட்டுக்கு அனுப்பியிருந்தான்.
இப்போது, தயரதனுக்கு இறுதிக்கடன் செய்ய ஆளில்லாமல் இருந்தது. வெளிநாட்டில் இருக்கும் பரதன் வந்துதான் அடுத்தக்கட்ட வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். அனைத்தையும் முடிவு செய்ய வேண்டிய நிலையில் குலகுருவான வசிட்டர் இருந்தார்.
பரதனையும் சத்துருக்கனையும் அழைத்துவர, தூதுவர்களை அனுப்ப வேண்டும். ஏழு நாள்கள் பயணத்தின் பின்னரே அவர்கள் கேகய நாட்டை அடைய முடியும். உடனே பரதன் கிளம்பினாலும், இங்கு வந்து சேர, இன்னும் ஏழு நாள்கள் ஆகும். குறைந்தது பதினான்கு நாள்களுக்குப் பின்னரே இறுதிக் கடன்கள் செய்ய முடியும். தயரதனின் அறுபதினாயிரம் மனைவியரும் அவன் உடலைச் சூழ்ந்து நின்று அழுதுகொண்டிருந்தனர். பரதனையும் சத்துருக்கனையும் அழைத்துவரத் தூதுவரை அனுப்பிவிட்டு, அவர்கள் வரும்வரை தயரதன் உடலைப் பதனப்படுத்தி வைக்க முடிவு செய்தார் வசிட்டர். இதுதான் கம்பன் பாடல்;
செய்யக் கடவ செயற்கு உரிய சிறுவர், ஈண்டையார் அல்லர்;
எய்தக் கடவ பொருள் எய்தாது இகவா' என்ன, இயல்பு எண்ணா,
'மையற் கொடியாள் மகன் ஈண்டு வந்தால் முடித்தும் மற்று, என்னத்
தையற் கடல்நின்று எடுத்து, அவனைத் தயிலக் கடலின்தலை உய்த்தான்.
'கடல்போல் இருந்த பெண்களின் கூட்டத்தில் இருந்து தயரதன் உடலை எடுத்த வசிட்டன், அதைப் பாதுகாத்து வைப்பதற்காக, கடல்போல் மிகுந்திருந்த தயிலத்தில் கிடத்தி வைத்தான்' என்பது பாடலின் பொருள். இறந்த உடலைப் பதனப்படுத்தி வைப்பதற்கான தயிலம் ஒன்று இருந்தது என்பதை, மற்றொரு காட்சியிலும் உறுதிப்படுத்துகிறான்
கம்பன். இந்திரசித்தனின் தலையைத் தனியே எடுத்து அவனைக் கொன்றான் இலக்குவன். இராமனிடம் காட்ட, அந்தத் தலையை வானர வீரர்களும் மற்றவர்களும் எடுத்துச் சென்றுவிட்டார்கள். செய்தி கேள்விப்பட்டு சோகத்தில் மூழ்கிய இராவணன், தலையற்ற இந்திரசித்தன் உடலை அரண்மனைக்குத் தூக்கிச் சென்றான்.
மண்டோதரி ஓடிவந்து மகன் உடல் தலையற்று கிடந்ததைப் பார்த்து, ஓங்கிக் குரலெடுத்து அழுது பலவாறு புலம்பினாள். அதைக் கேட்ட இராவணன், 'இப்போதே போருக்குக் கிளம்புகிறேன்; என் மகனின் தலையையும், இவனைக் கொன்ற இலக்குவனின் தலையையும் எடுத்துக்கொண்டுதான் மீண்டும் அரண்மனைக்குள் நுழைவேன். அதுவரை, இவன் உடலைத் தயிலத்தில் பாதுகாத்து வையுங்கள்' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். பாடலைப் பார்க்கலாம்:
என்னலும், எடுத்த கூர் வாள் இரு நிலத்து இட்டு, மீண்டு,
மன்னவன், 'மைந்தன் தன்னை மாற்றலார் வலிதின் கொண்ட
சின்னமும், அவர்கள் தத்தம் சிரமும் கொண்டு அன்றிச் சேர்கேன்;
துன்னரும் தயிலத்தோணி வளர்த்துமின்' என்னச் சொன்னான்.
இறந்த உடலைப் பதனப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பதனை தனது காப்பியத்தின் வழி உறுதிப்படுத்துகிறான் கம்பன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.