தமிழ்மணி

கம்பனின் தமிழமுதம் - 38: தவறு செய்தவன் நீ...

'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்' என்கிறான் வள்ளுவப் பேராசான்.

த.இராமலிங்கம்

'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்' என்கிறான் வள்ளுவப் பேராசான். அனைத்து அதிகாரங்களும் குவிந்து கிடக்கும் அரசன், தவறு செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்போது, 'நீ செய்வது பிழை' என்று இடித்துரைப்பதற்கு அவனுக்கும் துணை வேண்டும். அதிகாரம் தரும் போதையில், 'என்னிடம் யாரும் பிழை காண முடியாது; நான் சொல்வதும் செய்வதுமே சரியாக இருக்கும்' என்று ஒருவன் எண்ணினால், அவனைக் கெடுப்பதற்கு மற்றவன் தேவையில்லை; அவனே அழிந்துபோவான்' என்று வள்ளுவன் சொல்வது, அரசனுக்கும் மட்டுமல்ல; நமக்கும் சேர்த்துத்தான். 'நீ தவறு செய்தாய்' என்று முகத்துக்கு நேரே சொல்பவர்களே தேவை என்கிறான் கம்பன். எதிர்பாராத இடத்தில், ஒரு காட்சியில் இந்தக் கருத்தை மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறான்.

ஏமாற்றும் நோக்கில், மிக அழகான, பொய்மான் தோற்றத்தில் வந்தான் மாரீசன். அவன் நோக்கம் எளிதாக நிறைவேறியது. அந்த மானின் அழகில் மயங்கிய சீதை விரும்பியபடியே, இராமன் மானைப் பிடிக்கச்சென்றான்.

அழகான மானாக ஏமாற்ற வந்தவன் அரக்கன்தானே... கடைசியில் இராமன் அம்பால் தாக்கப்பட்டு, 'இலக்குவா... சீதா..' என்று இராமன் குரலில் அலறி வீழ்ந்தான். இராமனே ஆபத்தில் இருப்பதாகத் தவறாக எண்ணிய சீதை, மிகுந்த அழுத்தம் கொடுத்து இலக்குவனையும் அனுப்பிவிட்டாள். அவர்கள் இருவரும் திரும்புவதற்குள், முனிவன் வேடத்தில் வந்த இராவணன், சீதையைக் கவர்ந்து சென்றான். வழியில் குறுக்கிட்ட ஜடாயு, இராவணனை எதிர்த்து, அவனுடன் போரில் ஈடுபட்டான். தன்னிடம் இருந்த தெய்வ வாளினால் ஜடாயுவினை வெட்டி வீழ்த்தினான் இராவணன். குருதி வெள்ளத்தில் வீழ்ந்தான் ஜடாயு.

குடிலுக்குத் திரும்பிய இராம, இலக்குவர் இருவரும் சீதையைக் காணாமல் அதிர்ந்தனர். தேடிக்கொண்டே வந்தவர்கள், ஓரிடத்தில் இரத்தம் சிந்தி சோர்ந்து கிடந்த ஜடாயுவைக் கண்டனர். இராவணன், சீதையைத் தூக்கிச் சென்றதை, வீழ்ந்து கிடந்த ஜடாயு கூறியதும், இராமன் கடுமையான கோபம் கொண்டான்.

'தனித்திருந்த ஒரு பெண்ணை, வஞ்சகமாக ஒருவன் தூக்கிச் சென்றிருக்கிறான். அதனைத் தடுக்காமல், பார்த்துக் கொண்டிருந்த இந்த உலகத்தையே அழிப்பேன்' என்று சீறிய இராமனைக் கண்டு இலக்குவனே அஞ்சினான் என்று எழுதினான் கம்பன்.

பாதி மயங்கிய நிலையில் சோர்ந்து கிடந்த ஜடாயு, இராமனைக் கூர்ந்து பார்த்தான். பின்னர் மெதுவாகப் பேசத்தொடங்கினான். ''ஓர் இளம்பெண்ணைக் கூட்டிக்கொண்டு கானகம் வந்திருக்கும் நீங்கள் இருவரும், அந்தப் பெண்ணைத் தனியே விட்டுவிட்டு, ஒரு மானைத் தேடிக்கொண்டு ஏன் ஓடினீர்கள்? யோசித்துப் பார் இராமா... தவறு செய்தவன் நீ... இந்த உலகின் மீது நீ கோபப்பட என்ன இருக்கிறது? '' என்றான் ஜடாயு. இராமன் உடனே சினம் தணிந்தான்.

வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக,

கொம்பு இழை மானின் பின் போய், குலப் பழி கூட்டிக் கொண்டீர்;

அம்பு இழை வரி வில் செங் கை ஐயன்மீர்! ஆயும் காலை,

உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ?

'இது உன் தவறு. நீ கோபப்படுவதில் நியாயமில்லை' என்று இராமனிடமே சொன்ன ஜடாயுவின் செயல், நமக்கு வழிகாட்டி நிற்கிறது. நாம் தவறு செய்யும்போது, முகத்துக்கு நேரே, 'இது உன் தவறு' என்று தயங்காமல் சொல்லும் உறவுகள் அருகே இருப்பது ஒரு வரம் என்று சுட்டிக்காட்டுகிறான் கம்பன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT