தமிழ்மணி

எரி நட்சத்திரம்... எரி கொள்ளி!

ஒரு மலைச் சாரல். அந்த மலைச்சாரலில் மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ளன.

முனைவர் முகிலை இராச. பாண்டியன்

ஒரு மலைச் சாரல். அந்த மலைச்சாரலில் மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ளன. அவற்றின் நடுவே உள்ள வயல்வெளியில் தினைப் பயிர் வளர்ந்துள்ளது. அதில் தினைக் கதிர்கள் முற்றி வளைந்து நிற்கின்றன.

அந்த மலைச்சாரலின் இன்னொரு பக்கத்திலும் நீண்ட மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்துள்ளன. அந்த மூங்கில் நிழலில் ஒரு பெண் யானை, கன்றை ஈன்றுள்ளது. கன்றை ஈன்று உதிரப் போக்கினால் களைத்த அந்தப் பெண் யானையால் எங்கும் சென்று உணவு உண்ண இயலவில்லை.

பசி வாட்டியது. அதனுடைய வாட்டத்தைக் கண்ட ஆண் யானை பெண் யானையின் பசியைப் போக்குவதற்காக, மலைச்சாரலில் உள்ள அந்தத் தினை வயலுக்கு வந்து அங்கே நன்கு முற்றிய தினைக் கதிர்களைக் கொய்தது.

தினை வயலைக் காவல் புரிந்த கானவனால் ஆடு, மாடுகளை விரட்டுவதுபோல் யானையை அருகில் சென்று விரட்ட முடியாது. யானையை விரட்டுவதற்காக ஓர் எரி கொள்ளியை எடுத்துச் சுழற்றி எறிந்தான்.

அந்த எரிகொள்ளியானது சுற்றிச் சுழன்று யானையை நோக்கிச் செல்லும்போது அதன் நெருப்புப் பகுதியிலிருந்து நெருப்புப் பொறிகள் பறந்தன. அவ்வாறு பறந்த நெருப்புப் பொறிகளைப் பார்க்கும்போது அது, எரி நட்சத்திரம் ஒன்று காற்று மண்டலத்தில் எரிந்தபடி வீழ்வதுபோல் காட்சியளித்தது என்று பாடியுள்ளார் கோவூர் கிழார்.

நெடுங் கழை நிவந்த நிழல்படு சிலம்பின்

கடுஞ்சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க

பால் ஆர் பசும்புனிறு தீரிய, களி சிறந்து

வாலா வேழம் வணர்குரல் கவர்தலின்

கானவன் எறிந்த கடுஞ் செலல் ஞெகிழி

வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி,

நிலை கிளர் மீனின் தோன்றும்

(நற்றிணை 393 : 1-7)

என்னும் அடிகளில் எரி நட்சத்திரம் சென்ற காட்சியைக் கண்முன் கொண்டுவந்து காட்டியுள்ளார்.

எரி நட்சத்திரம் என்பது விண்ணிலிருந்து விழும் கல். அது பூமிக்கு அருகில் காற்று மண்டலத்தில் வரும்போது ஏற்படும் உராய்வினால் நெருப்புப் பந்தாக மாறுகிறது. அவ்வாறு நெருப்புப் பந்தான அந்த எரி கல் மிகவும் விரைவாகப் பாய்வதால் அது செல்லும் பாதையில் நெருப்புப் பொறிகள் வால் போல் பறக்கும் காட்சியை நாம் வெறுங்கண்களால் பார்த்திருக்கிறோம். இன்றுவரை அதை எரிநட்சத்திரம் என்றே நாம் குறிப்பிடுகிறோம். அந்த எரி நட்சத்திரத்தை நற்றிணையில் புலவர் கோவூர்கிழார், கானவன் எறிந்த எரி கொள்ளி, சுற்றிச் சுழன்று சென்ற காட்சியுடன் ஒப்புமைப்படுத்தியுள்ளார்.

யானை ஐந்தறிவு கொண்ட விலங்கு. அந்த ஐந்தறிவு விலங்கு, கன்றை ஈன்ற பெண் யானைக்குத் தேவையான உணவை வழங்குவது தனது கடமை எனக் கருதுவதையும், அது தினைக்கதிரைக் கொய்வதையும் உணர்வு பொங்கும் வகையில் படமாக்கியுள்ளார் கோவூர் கிழார்.

நெருப்புக்கு யானை அஞ்சும் என்பதைக் குறிஞ்சி நிலக் கானவன் தெரிந்திருந்த காரணத்தால் அவன் எரி கொள்ளியைப் பயன்படுத்தி, யானையை விரட்டியுள்ளான். யானையை விரட்டுவதற்காகவே எரி கொள்ளிகளைக் கானவன் தயாராக வைத்திருக்கிறான் என்பதையும் இந்தப் பாடல் அடிகள் உணர்த்துகின்றன.

இந்தப் பாடலில் மனிதர்களின் குடும்ப அமைப்பு முறையையும் பாசப் பிணைப்பையும் விலங்கிடமும் கண்டு எழுதியுள்ளார் கோவூர் கிழார்.

ஒரு பாடலின் சில அடிகளிலேயே மலைக் காட்சியையும், மலையில் உயர்ந்து வளர்ந்துள்ள மூங்கிலையும், மூங்கிலுக்கு நடுவே வளர்க்கப்படும் தினைப் பயிரையும், மூங்கில் நிழலில் கன்றை ஈன்ற பெண் யானையையும் காட்சிப்படுத்தியுள்ளதுடன், எரி நட்சத்திரம் நெருப்புப் பந்துபோல் நெருப்புப் பொறி பறக்கும்படியாக வேகமாக வரும் என்னும் அறிவியல் உண்மையையும் இணைத்துப் பாடியுள்ள தன்மையைக் கண்டு இன்புற முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT