முனைவர் ப.ஜீவகன்
மனித மனம் ஆசைவயப்படுவது. ஆசைதான் துன்பத்துக்குக் காரணம் என்பதை புத்தரும் மகாவீரரும் இன்னும் பல மகான்களும் நமக்கு அறிவு புகட்டியுள்ளனர்.
இந்த உலகம் நிலையற்றது. நாம் ஐம்பொறி வாயிலாக அனுபவிக்கும் இன்பம் நிலையற்றது. இளமை, செல்வம், யாக்கை என நிலையாமையை நாலடியாரும் வலியுறுத்துகிறது.
திருக்குறளும்
'நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு
எனக் கூறுகிறது. பிறப்பும் இறப்பும், உறங்குவதும் விழிப்பதும் போல்வது. நாம் வாழ்நாள் கணக்கைக் காண்பிக்கவே இரு சுடரும் தோன்றுகிறதோ என எண்ண வேண்டும்.
சங்க இலக்கியம் காதலையும் வீரத்தையும் பரக்கப் பாடினாலும், நிலையாமையையும் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளது. நிலையாமையை வலியுறுத்தியே புறத்திணையில் வரும் திணைப் பகுப்பும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்மை எனும் போர் முறைகளை வைத்து பகுக்கப்பட்டாலும் 'வாகை' எனும் வெற்றித் திணைக்கு அடுத்தாற்போல 'காஞ்சி' என்ற நிலையாமையை உணர்த்தும் திணையையும் பகுத்துள்ளனர்.
நிலையாமையை உணர்ந்தால் வாழ்வு உயர்வு பெறும் என்கிற நோக்கில் ஆடைக்கு வரம்பு காட்டி வாழ முற்படுவர் என்ற நோக்கில் நம் முன்னோர் நிலையாமையை வலியுறுத்தியுள்ளனர்.
சோழன் நலங்கிள்ளியிடம் மறத்தை விடுத்து அறத்தை வலியுறுத்த நிலையாமையை வலியுறுத்தும் விதமாக,
'தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்'
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்'
- (புறம் பா. 27)
எனும் நிலையாமை நல்லறத்தை வலியுறுத்தும் புறநானூற்றுப் பாடல்வழி அறியமுடிகிறது போலும்.
'நில்லா உலகத்து நிலையாமை நீ
சொல்ல வேண்டா தோன்றல் முத்து அறிந்த
முழுது உணர் கேள்வியான்'
-கயமனர் (புறம் 361)
என்ற பாடல் மூலமும் உலகம் நிலையாமையை எடுத்துரைத்து நம்மை நல்வழிப்படுத்துகிறது. அதைப்போலவே தோலாமொழித் தேவர் இயற்றிய சூளாமணியும் நிலையாமையை வலியுறுத்துகிறது.
எதிர்பாராத சூழலில் ஒருவனை மதம் பிடித்த யானை கொலைவெறித் தாக்குதலோடு துரத்துகிறது; அவனோ உயிர்பயத்துடன் விரைந்து ஓடுகிறான். அவ்வாறு தலைகால் தெறியாமல் வெறிக்க ஓடியவன் எதிர்பாராமல் புதர் மண்டிய பாழுங்கிணற்றில் வீழ்கிறான். எதிர்பாராமல் அக்கிணற்றில் தொங்கிய நாணல் புற்களைப் பற்றித் தொங்குகிறான். அக்கிணற்றிலோ விஷம் நிறைந்த பாம்புகள் படமெடுத்தபடி கிணற்றின் கீழ்பகுதியில் இருப்பதைக் காண்கிறான். அவன் பற்றியிருக்கும் நாணல் புல் அறுந்துகொண்டே இருக்கிறது. எந்நேரமும் கைப்பிடி தளர்ந்து பாம்புக்கு இரையாகலாம் என்ற பயத்துடனே நிமிர்ந்து பார்க்கிறான்.
அப்போது, கிணற்றின் மேலுள்ள ஒரு மரக்கிளையிலிருந்த தேனடையிலிருந்து தேன் சொட்டுகிறது. அந்த நேரத்தில் ஒரு சொட்டுத் தேன் அவன் நாவில் விழுகிறது. இத்தனை உயிர் பயத்திற்கிடையிலும் அவன் சுவைத்த ஒருசில நிமிட இன்பம் போன்றது நீர்க்குமிழி, வானவில் போன்ற நிலையற்ற இன்பத்தை எண்ணி மகிழ்ந்திராமல் அடுத்த பிறவிக்கேற்ற நல்லறத்தை நாடிக் கொள்க' என வலியுறுத்துகிறது இப்பாடல்.
'ஆனை துரப்ப அரவுறை ஆழ்குழி
நானவிர் பற்றுபு நாலும் ஒருவன் ஓர்
தேனின் அழிதுளி நக்கும் திறத்தது
மாநுடர் இன்பம் மதித்தினை கொள்நீ'
(சூளாமணி -துறவு சருக்கம்)
என மனிதப் பிறவியின் நிலையற்ற வாழ்வினை படம்பிடித்துக் காட்டுகிறது. மனிதப் பிறவியின் மாண்பினை உணர்ந்து 'இனியனவே இனி செய்வேன்' என்று அடங்கி நோற்று இன்னுயிர்க்கு உறுதிபயப்பனவே நாடவேண்டும் என்கிறது.
வாழுயிர் வாங்கும் காலன் வருவதற்குள் நிலையாமையை உணர்ந்து தவமியற்றி உய்வடையச் செய்கிறது.
'பிறந்தனர் பிறந்து சாலப் பெருகினர்
பெருகிப் பின்னை
இறந்தனர் என்ப தல்லால் யாவரும்
இன்று காறும்
மறைந்து உயிர் வாழா நின்றார்
இல்லையால் வாழி நெஞ்சே
சிறந்தது தவத்தின் மிக்கது இன்மையே
சிந்தி கண்டாய்
(சூளாமணி -துறவு சருக்கம்)
என காப்பியத்தில் வரும் பயாபதி மன்னனுக்கு கூறும் நிலையாமையை நமக்குமாக உணர்த்துகிறார் இக்காப்பிய ஆசிரியர் தோலாமொழித் தேவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.