சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறையின் திருமதி சொர்ணம்மாள் அறக்கட்டளை சார்பில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்ற இருந்தார் முனைவர் தெ.ஞானசுந்தரம். 'சொல்லின் செல்வர்' ரா.பி.சேதுப்பிள்ளை தனது தாயாரின் பெயரில் நிறுவிய அறக்கட்டளைச் சொற்பொழிவு அது. காலன்(ம்) அதற்கு அனுமதிக்கவில்லை. முனைவர் தெ.ஞா. மறைந்து விட்டார்.
அந்த அறக்கட்டளை சொற்பொழிவு அறிஞர் தெ.ஞா.வின் பன்முகப் பங்களிப்புகள் குறித்த கருத்தரங்கமாக மாற்றப்பட்டது. ஞானசுந்தரம் ஐயாவின் படத் திறப்பு விழாவுடன் நடந்த இரண்டு நாள் கருத்தரங்கின் தொடக்க விழாவில் நானும் கலந்து கொண்டேன். முனைவர் தெ.ஞா.வின் உரையைக் கேட்க ஆர்வமாக இருந்தவர்கள், அவரது பன்முக இலக்கியப் புலமை குறித்த பதிவுகளைக் கனத்த இதயத்துடன் கேட்க நேர்ந்தது.
அன்று தெ.ஞா. ஐயா குறித்த சிறப்புப் பொழிவில் வழக்குரைஞர் சுமதி ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதற்காகத்தான் இந்தப் பதிவு.
ஆண்டுதோறும் 'தினமணி' நாளிதழுடன் இணைந்து முனைவர் தெ.ஞானசுந்தரம் ஐயாவின் பெயரில் கம்பகாதை குறித்த கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்த முன்வந்திருக்கிறார் வழக்குரைஞர் சுமதி. இளைஞர்கள், மாணவர்கள், அடுத்த தலைமுறை இலக்கியப் பேச்சாளர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். அதற்கான அறிவிப்பை விரைவிலேயே வெளியிடுகிறோம்.
எந்த விளம்பரமும் தேடாமல், எத்தனையோ அமைப்புகள் அமைதியாகப் பல சமுதாயப் பணிகளில் ஈடுபடுகின்றன. அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் பணிகள்தான் தமிழையும், இளம் தளிர்களின் இலக்கிய ஆர்வத்தையும் பாதுகாத்தும் வளர்த்தும் வருகின்றன. 'எழுதுக' என்கிற புத்தகம் எழுதும் இயக்கம் ஒன்று பள்ளி மாணவர்களைப் படிக்கவும், எழுதவும் ஊக்குவித்துக் கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டபோது நான் ஒரு நிமிஷம் வியப்பில் சமைந்தேன்.
இத்தனை நாள்கள் இப்படியொரு அமைப்பு இயங்கிக் கொண்டிருப்பதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் இருந்த குற்ற உணர்வு என்னைத் தாக்கியது. முனைவர் வெ.இறையன்பு சொல்லி இருப்பது போல, சிறுவர்களை எழுத்தாளர்களாக மாற்றுகிற இமாலய முயற்சியை இம்மியும் சுயநலமில்லாமல் பரோபகாரத்தின் வடிவமாகச் செய்கிற இயக்கம் 'எழுதுக!'
காஞ்சிபுரம், பாண்டவ பெருமாள் கோவில் தெருவில் இருந்து இயங்குகிறது 'எழுதுக' என்கிற புத்தகம் எழுதும் இயக்கம். தமிழகமெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதுடன் நின்று விடாமல், புத்தகம் எழுதவும் பயிற்சி அளிக்கிறார்கள். இந்த இயக்கத்தின் மூலம் இதுவரையில் 351 மாணவர்கள் இளம் படைப்பாளிகளாக உயர்ந்துள்ளனர். அவர்களில் 244 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள்.
'எழுதுக' என்பது வெறும் புத்தகம் படிக்கவும், எழுதவும் ஊக்குவிக்கும் அமைப்பு என்று நினைத்துவிடக்கூடாது. பள்ளியில் படிக்கும்போது அந்த மாணவர்களின் சிந்தனையை நெறிப்படுத்தித் துணிந்து பேசவும், எழுதவும் வழிகாட்டும் இயக்கம். அந்த மாணவர்கள் படைக்கும் புத்தகங்கள் அவர்களது முதல் படைப்பு என்பதுடன் நின்று விடுவதில்லை. தமிழ் எழுத்துலகின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு இடப்படும் பாதை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
'செட்டியார் அகரம்' என்கிற சென்னை நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவி அ.அஸ்வினி. 'எழுதுக' இயக்கம் மூலம் அவரது பள்ளியில் வாராவாரம் வழங்கப்பட்ட கதைப் புத்தகங்களைப் படித்ததால் கிடைத்த ஆர்வம், அவரையும் கதை எழுதத் தூண்டியது. இப்போது, அவரது 15 சிறுகதைகளைத் தொகுத்து 'தடக் தடக் ரயில் வண்டி' என்கிற பெயரில் புத்தகமாக வெளிக் கொணர்ந்திருக்கிறது 'எழுதுக' இயக்கம்.
பள்ளி மாணவர்களைப் படைப்பாளிகளாக்கும் பயிற்சியை வழங்கும் 'எழுதுக' என்கிற இயக்கத்தை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. உங்கள் இயக்கத்தில் தினமணியும் இணைய வேண்டுமே... எந்த வகையில் உதவலாம் என்று சொல்லுங்கள் காத்திருக்கிறோம்...!
என் இனிய நண்பர், எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் தங்கர் பச்சானுக்கு அறிமுகம் தேவையில்லை. அவரது புதல்வர் விஜித் பச்சான் திருமணத்துக்கும், வரவேற்புக்கும் அழைத்திருந்தார். கலந்துகொள்ள இயலவில்லை. இருந்த இடத்திலிருந்து மணமக்களை மனதார வாழ்த்தினேன்.
திருமண அழைப்பிதழுடன், திருமணத்தை முன்னிட்டு தங்கர் பச்சான் தனது தேர்ந்தெடுத்த சிறுகதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக அனைவருக்கும் வழங்கினார். தங்கர்
பச்சான் என்கிற கதை சொல்லிக்கு சான்றிதழ் தேவையா என்ன? தமிழகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிறந்த கதை சொல்லிகளில் அவரும் ஒருவர்.
அந்தத் தொகுப்பில் இடம்பெறும் ஒவ்வொரு சிறுகதையும், தேசிய விருது பெற வேண்டிய திரைப்படத்தின் மூலக்கதை. அவரது 'அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு' உள்ளிட்ட திரைப்படங்களைப் போலவே, ஒவ்வொரு கதையும் உள்ளத்தைத் தொட்டு சிலிர்க்க வைக்கின்றன.
அன்பளிப்புக்கான தொகுப்பாக இது இருந்துவிடக் கூடாது. எல்லோருக்குமான தொகுப்பாக வெளிக் கொணருங்கள் தங்கர் பச்சான்.
'கல்வெட்டு' சிறுகதை 'தனலட்சுமி' கதாபாத்திரம் எனது நினைவில் கல்வெட்டாகப் பதிந்து விட்டது, தங்கர்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர், பல திரைப்படங்களுக்குப் பாடல்கள், வசனங்கள் எழுதி இருப்பவர், எல்லாவற்றையும்விட நல்ல கவிஞர். இப்போது வெளிவந்திருக்கும் ராஜா சந்திர சேகரின் கவிதைத் தொகுப்பு 'மழைக்காளி'. இது அவரது பத்தாவது நூல். அதில் நான் ரசித்துத் தேர்ந்தெடுத்திருக்கும் கவிதை இது:
எல்லாக் கதவுகளும்
அடைக்கப்பட்டன
நினைவுகளைத் திறந்து
வெளியேறினான்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.