தமிழ்மணி

இளநாகனாரின் நற்றிணைப் பாடல் திறன்

அகப்பொருள் சுவை நிரம்ப இளநாகனார் எனும் சங்கப் புலவர் பாடியவையாக நற்றிணையில் பாலைத் திணையில் ஒன்றும் (205) நெய்தல் திணையில் ஒன்றுமாக (231) இரு பாடல்கள் காணக் கிடைக்கின்றன.

தினமணி செய்திச் சேவை

முனைவர் கா.ஆபத்துக்காத்தபிள்ளை

அகப்பொருள் சுவை நிரம்ப இளநாகனார் எனும் சங்கப் புலவர் பாடியவையாக நற்றிணையில் பாலைத் திணையில் ஒன்றும் (205) நெய்தல் திணையில் ஒன்றுமாக (231) இரு பாடல்கள் காணக் கிடைக்கின்றன. அந்த இரு பாடல்களும் தோழி கூற்றில் அமைகின்றன.

பாலைத் திணையில் அமையும் பாடல், வினையின் காரணமாக பிரியக் கருதும் தலைவனைத் தோழி செலவழுங்கச் சொல்லிலியது எனும் துறையில் அமைகிறது. செலவழுங்குதலாவது தலைவியை விட்டுப் பிரிய எண்ணும் தலைவன் செலவை (பயணத்தை) நிறுத்தச் சொல்வதாகும். தலைவனிடம் தோழி, பயணத்தை நிறுத்து என்று மட்டும் கூறாமல் பயணத்தை ஏன் நிறுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களையும் அவனிடம் எடுத்துக்கூறுவதே சிறப்பாகும்.

'தலைவனே, நீ கடந்து செல்லும் பாதை அருவி ஒலிக்கும் மலைகள் அடர்ந்த, கொடிய விலங்குகள் நிறைந்த காட்டுப் பகுதியாகும். குவளைமலர் போலும் மையுண்ட கண்களையுடைய நம் தலைவியை நீ பிரிந்து செல்வையாயின், நமது கொல்லைப்புறத்தில் வளர்ந்திருக்கும் வளைந்த முள்ளை உடைய இண்டு எனும் கொடியின் அழகிய தளிர், மழையில் நனைந்தால் எப்படி அழகற்றுத் தோன்றுமோ அதுபோன்று இவளது ஒளியும் பளபளப்பும் இவளை விட்டு நீங்கிவிடும். ஆகவே, பிரிவது குறித்து ஆராய்ந்து முடிவு செய்' என வேண்டுகிறாள். இதனை, அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து

ஆளி நன்மான் வேட்டெழு கோளுகிர்ப்

பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி

ஏந்துவெண் கோட்டு வயக்களிறு இழுக்கும்;

துன்னருங் கானம் என்னாய் நீயே,

குவளை உண்கண் இவளீண்டு ஒழிய

ஆள்வினைக் ககறியாயின் இன்றொடு

போயின்று கொல்லோ தானே படப்பைக்

கொடுமுள் ஈங்கை நெடும் அந்தளிர்

நீர்மலிலி கதழ்பெயல் தலைஇய

ஆய்நிறம் புரையுமிவள் மாமைக் கவினே.

(நற்றிணை 205)

என்ற பாடலடிகள் உணர்த்தும்.

இளநாகனாரின் அடுத்த பாடல் நெய்தல் திணையில் 'சிறைப்புறமாக தோழி சொல்லி வரைவு கடாயது' எனும் துறையின்கீழ் அமைகிறது. அதாவது, சந்திக்க வரும் தலைவனைக் காணாததுபோல் தோழி தலைவியிடம் 'நம் தலைவன் கொண்ட காதல் நம்மிடம் நீங்காது நிலைத்துள்ளது; இப்போது, அவன் இல்லாததால் கடல்துறை தனிமைப்பட்டுக் கிடக்கிறது. அது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, விரைந்து மணத்துக்கு ஏற்பாடு செய்யச் சொல்' என்பது வரைவு கடாயது ஆகும்.

தோழி தலைவியிடம் 'நம் மனையருகே உள்ள புன்னைமரச் சோலையில் ஊர்க்குருவியின் முட்டையை உடைத்தாற் போலும் பெரிய அரும்பு மலர்ந்த புன்னைப்பூ பூத்துக் கிடக்கிறது. தலைவனை அங்கு சந்தித்ததிலிலிருந்து அவன்பால் நீ கொண்ட காதல் நெஞ்சை விட்டு நீங்காதிருக்கிறது. பெரிய கடற்பரப்பின்மேல் வெண்ணிற காக்கை குடைந்து நீராடும் தோற்றம், மாசற்ற மணி போலும் நீலவானில் உலகத்தாரால் தொழும்படியான சிறந்த ஏழு முனிவரை நினைவுபடுத்துவதுபோல் ஏழுமீன்களும் காட்சியளிக்கின்றன'. இதனை,

'மையற வணங்கிய மணிநிற விசும்பின்

கைதொழு மரபின எழுமீன் போலப்

பெருங்கடல் பரப்பின் இருபுறந் தோயச்

சிறுவெண் காக்கை பலவுடன் ஆடுந்

துறை புலம்பு உடைத்தே தோழி! பண்டும்

உள்ளூர்க் குரீஇக் கருவுடைத் தன்ன

பெரும்போது அவிழ்ந்த கருந்தாள் புன்னைக்

கானலங் கொண்கன் தந்த

காதல் நம்மொடு நீங்கா மாறே'.

(நற்றிணை 231)

என்ற பாடல் உணர்த்தும்.

'இதற்கு முன்பு இதே புன்னையங்கானலில் தலைவனோடு முயங்கினாய் (தழுவினாய்); இப்போது தலைவன் இல்லாது தனிமைப்பட்டு வருந்துகிறாய். திருமணம் செய்து கொண்டாலல்லாது அவன் தலைவியை வெளிப்படையாக சந்திக்க இயலாது. அதனால், திருமணத்தை (வரைவு கடாதல்) விரைந்து வேண்டுகிறேன்' என்கிறாள் தோழி.

இரு பாடல்களும் தோழி கூற்றாக அமைகின்றன. ஒன்றில் பிரிவுத் துயரும் (பாலை - பிரிவு) மற்றொன்றில் இரங்கலும் (நெய்தல்} இரங்கல்) திணை, துறைக்கேற்ப பொருந்தி அமைகின்றன.

காட்டு விலங்குகள் திரியும் வழியில் தலைவன் செல்வதால் அவனுக்கு என்ன நேருமோ என்று அச்சமும் பிரிவதனால் அவனை நினைந்து வருந்தும் ஏக்கமும் முதல் பாடலில் உணர்த்தப்படுகிறது. அடுத்த பாடலில் தாங்கள் சந்திக்கும் வழக்கமான கடல்துறை அவன் இல்லாததால் தனிமைப்பட்டு இரங்கத்தக்க நிலையில் இருப்பது கண்டு ஏங்கும் தலைவிûயைச் சித்தரிப்பதாய் உள்ளது. இரு பாடல்களும் தலைவனிடம் தலைவி கொண்ட பெருங்காதலை வெளிப்படுத்துவனவாய் அமைகின்றன.

நெருங்குதற்கரிய கொடிய கானம் என்பதை உணர்த்த ஆழி, புலி, யானை முதலிய கொடிய விலங்குகளைக் கூறி அவற்றால் தலைவனுக்கு வழியில் ஏற்படும் ஆபத்தையும், தலைவியைப் பிரிந்தால் அவள் அழகு (மாமைக்கவின்) அழியும் என்பதையும் ஒருசேர உணர்த்துவது சிறப்பு.

இரு பாடல்களிலும் உவமைகள் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது மற்றொரு சிறப்பாகும். பாடல் 231}இல் தலைவியின் அழகைக் குறிப்பிடும் போது கொல்லையில் வளர்ந்துள்ள இண்டு எனும் கொடியின் இளந்தளிர் மழையில் நனைந்தால் எப்படி அழகற்றுத் தோன்றுமோ அதுபோல் தலைவியின் மாந்தளிர் மேனி காட்சியளிக்கும் எனக் கூறுவதும் அருமை.

பாடல் 235}இல் நீலநிற கடற்பரப்பில் சிறு வெண்காக்கைகளுக்கு நீலவானில் காட்சியளிக்கும் ஏழு விண்மீன்களை உவமை கூறுவதும் அதே பாடலின் புன்னை மரத்தின் பெரிய அரும்புகள் உடைந்த ஊர்க்குருவியின் முட்டை போல் தோன்றுவதாகக் கூறுவதும் அருமை.

தலைவி தலைவன்பால் கொண்ட பெருங்காதலை தோழி வாயிலாக புலவர் மிக நுட்பமாக உணர்த்தும் திறம் பாராட்டத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு19 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபாரம்!

இந்தியத் தயாரிப்பு பொருள்களுக்கு உயா் தரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: மோடி வலியுறுத்தல்

ரோஹித் சர்மா, ஹர்மன்பிரீத் கௌருக்கு பத்ம ஸ்ரீ விருது!

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு - புகைப்படங்கள்

நடிகர் மம்மூட்டி பத்ம பூஷண், மாதவனுக்கு பத்ம ஸ்ரீ!

SCROLL FOR NEXT