வெள்ளிமணி

பெண்னை ஆணாக்கிய அழகிய மன்னர்!

ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடுமையான யுத்தம் நடைபெற்றது. இந்திரன், இறுதி வரை அசுரர்களை எதிர்த்துப் போரிட்டார். ஆனால் அவரால் அசுரர்களை அடக்க முடியவில்லை. இதனால் அசுரர்களின் அராஜ

கே.வாசுதேவன்

ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடுமையான யுத்தம் நடைபெற்றது. இந்திரன், இறுதி வரை அசுரர்களை எதிர்த்துப் போரிட்டார். ஆனால் அவரால் அசுரர்களை அடக்க முடியவில்லை. இதனால் அசுரர்களின் அராஜகம் கட்டுக்கடங்காமல் சென்றது.

அசுரர்களைப் பார்த்து பயந்த இந்திரன், அசுரர்களை போரில் தோற்கடிக்க அர்ஜுனனின் உதவியை நாடினார். இந்திரனின் அன்பு வேண்டுகோளை ஏற்று, அர்ஜுனன் அசுரர்களை நோக்கி அம்புகளை எய்யத் தொடங்கினார்.

அர்ஜுனன் செய்த போரின் விளைவாக இம்முறை தேவர்களை வெற்றி தேடிவந்தது. வெற்றியில் அகமகிழ்ந்த இந்திரன், அர்ஜுனனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, தான் பல காலமாக வழிபட்டு வந்த அழகிய ராஜகோபாலன் விக்ரஹத்தை அர்ஜுனனுக்குக் கொடுத்தார். இந்திரன் கொடுத்த அந்த விக்ரஹத்தை, அன்று முதல் அர்ஜுனன் தினமும் மிகுந்த பக்தி சிரத்தையுடன் போற்றி வழிப்பட்டு வந்தார்.

ஒரு நாள் அர்ஜுனனின் கனவில் தோன்றிய கண்ணன், ""நீ விரைவில் என்னை அடையும் நாள் வந்துவிட்டது. எனவே, என் சிலையை கங்கை நதியில் விட்டுவிடு. அது சில ஆண்டுகள் கழித்து தென் பாரதத்தில் உள்ள தாமிரபரணி நதிக்கு போய்விடும். அச் சிலை, அங்கு ஆட்சி புரியும் ஸ்ரீபல்கி மன்னனுக்கு கிடைக்கப் பெற்று, திருக்கோயில் நிர்மாணிக்கப்பட்டு அதில் பிரதிஷ்டை செய்யப்படும்'' எனக் கூறினார்.

கோபாலன் விக்ரஹத்தை பிரிய மனமில்லாமல் இருந்த அர்ஜுனன், மாயவன் விதித்த விதிப்படி, வேறு வழியின்றி கங்கை நதியில் விட்டார். பல நூற்றாண்டுகள் கடந்தன!

கண்ணன் கனவில் சொன்னபடி, பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படை வீட்டை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த ஸ்ரீபல்கி மன்னன் கையில் அந்த கிருஷ்ண விக்ரஹம் கிடைத்தது.

அதைப் பார்த்து உள்ளம் பூரித்த ஸ்ரீபல்கி மன்னன், இன்றைய பாளையங்கோட்டை நகரில் ஆலயமெழுப்பி, கண்ணனை பிரதிஷ்டை செய்தார்.

இக்கோயிலில் மூலஸ்தானத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் வேதநாராயணர் காட்சி தருகிறார். அவரது இருபுறமும் வேதவல்லி, குமுத வல்லி தாயார்கள் தரிசனம் அளிக்கின்றனர். வேதநாராயணருக்கு தென் பிரகாரத்தில் ஸ்ரீ தேவியும், வடக்கு பிரகாரத்தில் பூ தேவியும் தனித்தனிக் கோயில் கொண்டு வீற்றிருக்கின்றனர்.

அத்திரி, மரீசீ, ஆங்கீரஸர், புலஸ்தியர், புலகர், கிருபர், வசிஷ்ட மகரிஷி, பிருகு மகரிஷி, மார்க்கண்டேயர் ஆகியோர் கோபால சுவாமி முன் அமர்ந்த திருக்கோலத்தில், சுதை வடிவில் கோயிலின் அஷ்டாங்க விமானத்தின் உட்பகுதியில் பக்தர்களுக்குக் காட்சி கொடுக்கின்றனர்.

கோயிலின் அர்த்தமண்டபத்தில் உற்சவர் ராஜகோபால சுவாமி, ருக்மணி-சத்யபாமா சமேதராக அமர்ந்த கோலத்தில் திவ்ய தரிசனம் தருகிறார். ராஜகோபால சுவாமியின் மூக்கில் ஒரு தழும்பு உள்ளது. அதற்கு சுவாமி செய்த ஒரு திருவிளையாடலே காரணமாகும். அது என்னவென்று பார்ப்போம்.

ஒருமுறை இக் கோயிலில் விஷ்ணுப்ரியன் என்ற அர்ச்சகர், சுவாமியை தினமும் பூஜித்து வந்தார். விஷ்ணு ப்ரியனுக்கு தொடர்ச்சியாகப் பெண் குழந்தைகளாகப் பிறந்தன. தனக்குப் பின் கோபாலசுவாமிக்கு கைங்கர்யம் செய்ய ஓர் ஆண் குழந்தை இல்லையே என விஷ்ணுப்ரியன் ஏக்கப்பட்டும், வருத்தப்பட்டும் வந்தார். தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என கோபாலசுவாமியிடம் பிரார்த்தனை செய்து கொண்டார் அந்த அர்ச்சகர்.

இந்நிலையில் அவரது மனைவி கலாவதி மீண்டும் கருவுற்றார். ஆனால், இம்முறையும் கலாவதிக்கு பெண் குழந்தையே பிறந்திருப்பதாக விஷ்ணுப்ரியனுக்கு தகவல் வந்தது.

இதனால் சினம் கொண்ட விஷ்ணுப்ரியன், ஆரத்தித் தட்டை எடுத்து சுவாமி மீது வீசினார். அத் தட்டு சுவாமி மூக்கின் மீது பட்டு தழும்பு ஏற்பட்டது.

அதே கோபத்துடன் விஷ்ணுப்ரியன் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது பெண் குழந்தை, ஆண் குழந்தையாக மாறியிருந்தது. அதைப் பார்த்து பதறிப்போன விஷ்ணுப்ரியன், கோயிலுக்கு ஓடினார்; தனது செயலை எண்ணி வருந்தி சுவாமி காலில் விழுந்து அழுதார். இதன் காரணமாகத்தான் இந்த சுவாமிக்கு "பெண்ணை ஆணாக்கிய அழகிய மன்னார்' என்ற பெயர் வந்ததாம்.

இந்த அர்ச்சகர் மட்டுமல்ல... இவ்வாலயத்தை எழுப்பிய ஸ்ரீபல்கி மன்னனுக்கு புத்திர பாக்கியம் தந்தவரும் ராஜகோபால சுவாமிதான்.

எனவே, "இக்கோயிலுக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் வரும் தம்பதிகள், விரைவில் தங்கள் குறை நீங்கப் பெறுவார்கள்' என்பது பக்தர்களின் பரவலான நம்பிக்கை.

500 ஆண்டுகளுக்கு மேலாக எவ்விதப் பராமரிப்புமின்றி சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோயிலில், தற்போது பக்தர்களின் பெரும் முயற்சியால் ரூ. 67.30 லட்சத்தில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. இதனால் கோயில் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

இக் கோயிலின் கும்பாபிஷேகம் 500 ஆண்டுகளுக்குப் பின்னர், வரும் ஜூலை 9ம் தேதி (வியாழக்கிழமையன்று) மிகவும் விமரிசையாக நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்த அரிய விழாவில் பங்குபெற்று ஸ்ரீராஜகோபால சுவாமியின் பேரருளைப் பெற்று உய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT