வெள்ளிமணி

சிவஞான சூரியன்

ஆதீனக் கிளை மடத்தில் நாள்தோறும் தம்பிரான் சுவாமிகள் மூலம் இரண்டு கால பூஜையும், மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தில் மெய்கண்டாருக்கு சிறப்பு...

இடைமருதூர் கி.மஞ்சுளா

அன்றைய "திருமுனைப்பாடி' என்ற நாட்டில் உள்ள "பெண்ணாகடம்' என்னும் சிற்றூரில், சைவ வேளாளர் குடியில் அச்சுத களப்பாளர் என்ற சிவ பக்தர் தோன்றியிருந்தார். அவருக்கு நீண்ட காலமாக பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்தது. தனது குலகுருவாகிய "சகலாகம பண்டிதர்' என்பவரை அணுகி இது குறித்துக் கேட்டார்.

இவரது குறையைக் கேட்ட சகலாகம பண்டிதர், தேவாரத் திருமுறைகள் எழுதிய ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு வரச்செய்து, சிவபெருமானை சிந்தித்து, அந்தச் சுவடிக் கட்டில் கயிறு சாத்திப் பார்த்தார். அப்போது, ""பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு

ஆயினவே வரம்பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்;

வேயன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குளநீர்

தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே'' என்னும் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தேவாரப் பாடல் எழுதப்பட்ட ஏடு வெளிப்பட்டது. அதைக்கண்டு மகிழ்ந்து, சிவபெருமான் திருவருளை நினைந்து, தன் மாணவராகிய அச்சுத களப்பாளரை அழைத்து, ""திருவெண்காடு சென்று, அவ்வாலயத்தில் உள்ள மூன்று குளங்களிலும் மூழ்கி சிவபெருமானை வழிபட்டு வந்தால், அவனருளால் சிறந்த ஆண் மகவைப் பெறுவாய்'' என்று கூறினார் சகலாகம பண்டிதர்.

உடனே அச்சுத களப்பாளர், தன் மனைவியை அழைத்துக் கொண்டு திருவெண்காடு சென்றார். அங்கு கோயில் கொண்டுள்ள சிவபெருமானையும், அழகிய ஆடல் வல்லானையும், அகோர மூர்த்தியையும், பிரம்ம வித்யாம்பிகையையும் வழிபட்டார். அன்றாடம் அந்தத் திருத்தலத்தில் உள்ள முக்குள நீரில் மூழ்கி திருமுறை வாக்கின்படி நடந்தார்.

திருவெண்காட்டு இறைவன் ஒருநாள் அச்சுத களப்பாளர் கனவில் தோன்றி, ""அன்பனே! திருஞானசம்பந்தரின் பாடலில் உறைப்பு கொண்டு, நம்மை வந்தடைந்து வழிபாடு செய்தாய்; திருஞானசம்பந்தர் கூறிய அனைத்தும், நாமே அவர் திருவாக்கில் நின்று உரைத்தனவாகும். எனவே, விரைவில் திருஞானசம்பந்தன் போன்று ஓர் ஆண்மகவு வாய்க்கப் பெறுவாய்'' என்று அருளிச்செய்தார்.

அச்சுத களப்பாளர், இறைவன் கனவில் வந்ததை தன் மனைவியிடம் கூறி மகிழ்ந்தார். சில நாட்களிலேயே அந்த அம்மையார் இறைவன் திருவருளால் கருவுற்றார். உரிய நன்னாளில், சித்தாந்த சைவம் தழைத்தோங்க, சிவ ஞான சூரியனாக "மெய்கண்டார்' திரு அவதாரம் செய்தார். பெற்றோர் அக்குழந்தைக்கு, திருவெண்காட்டு இறைவனது திருப்பெயரான "சுவேதவனப் பெருமான்' என்னும் திருநாமத்தைச் சூட்டி மகிழ்ந்தனர்.

சுவேதவனப் பெருமானின் தாய் மாமன், திருவெண்ணெய் நல்லூரில் உள்ள தம் இல்லத்திற்கு குழந்தையை எடுத்துச் சென்று வளர்த்து வந்தார். இரண்டாண்டுகள் நிரம்பிய நிலையில், குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திருக்கயிலாயத்திலிருந்து, பாரதத்தின் தென்பகுதியில், திருக்குற்றாலத்துக்கு அருகில் உள்ள பொதிய மலையை நோக்கி வான்வழியாக வந்துகொண்டிருந்தார் பரஞ்சோதி முனிவர். அவரை சுமந்து வந்த விமானம், சுந்தர மூர்த்தி நாயனாரை "தடுத்தாட் கொண்ட நாதரான' சிவபெருமான் கோயில் கொண்டுள்ள திருவெண்ணெய் நல்லூருக்கு மேலே வந்ததும் நின்றுவிட்டது. அதன் காரணத்தை திருவருள் குறிப்பால் உணர்ந்த பரஞ்சோதி முனிவர், விமானத்தை விட்டு இறங்கி வந்தார்; அங்கு விளையாடிக் கொண்டிருந்த சுவேதவனப் பெருமானின் திருவருள் திறத்தை அறிந்தார்; குழந்தைக்கு முறைப்படி சிவ தீட்சை செய்து "மெய்கண்ட சிவம்' என்னும் தீட்சா நாமமும் சூட்டினார். பின்னர், "சிவஞான போதம்' என்னும் பேரருள் நூலின் நுண்பொருளை உபதேசித்து அருளினார்.

உபதேசம் பெற்ற மெய்கண்ட சிவனார், "சிவஞான போதம்' எனும் அரும் பெரும் ஞான நூலை, செந்தமிழில் அருளிச் செய்தார். திருவெண்ணெய் நல்லூரில் உள்ள "திருவருள்துறை'யில் எழுந்தருளியிருக்கும் பொள்ளாப் பிள்ளையாரின் நல்லருள் பெற்று, சிவஞான போதத்துக்கு "வார்த்திகம்' என்று கூறப்படும் பொழிப்புரையையும் செய்தருளினார். தம்மிடம் வந்து கேட்ட அன்பர்களுக்கு சிவஞான போத நூலில் உள்ள நுண்பொருளை விளக்கிக் கூறினார் சின்னஞ்சிறு குழந்தையான மெய்கண்டார். இதனை அறிந்த அச்சுத களப்பாளரின் குலகுருவாகிய சகலாகம பண்டிதர், அக்குழந்தையை நேரில் காணும் பொருட்டு மெய்கண்டார் எழுந்தருளியிருந்த திருவெண்ணெய் நல்லூர் திருமடத்துக்கு வந்தார்.

மெய்கண்டார் அப்போது, "ஆணவ' மலத்தின் இயல்பை மாணவர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார். அந்நிலையில், அங்கு வந்த சகலாகம பண்டிதர், மெய்கண்டாரை நோக்கி, ""ஆணவ மலத்தின் வடிவம் யாது?'' என்று மிடுக்கோடு நின்று கொண்டே கேட்டார்.

அதைக்கேட்ட குழந்தை மெய்கண்ட சிவம், வாயால் விடை கூறாமல், தமது சுட்டு விரலால், கேள்வி கேட்ட சகலாகம பண்டிதரையே சுட்டிக் காட்டினார். உடனே, மெய்கண்டாரின் அருள்நோக்கால் பரஞானம் கைவரப் பெற்று, மெய்கண்டாரின் திருவடிகளை வணங்கினார் சகலாகம பண்டிதர். அவருக்கு சிவ தீட்சை செய்து "அருணந்தி சிவம்' எனும் தீட்சா நாமம் சூட்டி, தனது மாணவராக ஏற்றுக் கொண்டார் மெய்கண்டார். அன்றிலிருந்து சகலாகம பண்டிதர், "அருணந்தி சிவம்' ஆனார். இவரும் சந்தான குரவருள் ஒருவர்.

தம்மை வந்தடைந்த மாணவர்களுக்கு சிவஞான போதத்தின் நுண்பொருள்களைப் போதித்து சில காலம் இப்பூவுலவில் வாழ்ந்த மெய்கண்ட சிவனார், ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், திருவெண்ணெய் நல்லூரிலேயே சிவசாயுச்சியத்தை (முக்தி) அடைந்தார்.

சிவஞான போதம்:

மெய்கண்டாரின் காலம் கி.பி.1232. இவர் இயற்றிய சிவஞானபோதம், மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கினுள் முதன்மையானதாகப் போற்றப்படுகிறது.

"சிவஞானம்' என்பது, ஆகமத்தால் நிகழும் ஞானத்தை உணர்த்துவதாகும். ஆகமங்களின் பொருள் ஒற்றுமையை நிறுவி உணர்த்தும் காரணத்தால் "சிவஞான போதம்' எனப் பெயர் பெற்றது.

"சிவஞானபோதம்' என்பதற்கு, சிவபெருமான் அருளிச் செய்த பொருள், "சிவம் என்னும் ஒரு பொருளைத் தேர்ந்து தெளிதல் ஆகும்' என்பதே. இக்கருத்தினை, "திருவாதவூரடிகள் புராணம்' கூறுகிறது. சிவபெருமானைப் பற்றிய ஞானத்தை நமக்குப் போதிக்கும் (உணர்த்தும்) நூல் என்பதால் மெய்கண்டாரின் அருளிச் செயல், "சிவஞான போதம்' எனப்படுகிறது.

இந்நூல், முன்பே சிவபெருமான் திருக்கரத்தில் இருந்தது; இன்றும் இருக்கிறது; என்றும் இருக்கும்! திருவாதவூரடிகளுக்கு அருளும் பொருட்டு திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின் கீழ் குருவாக எழுந்தருளி வீற்றிருந்தபோது, இறைவனால் திருக்கரத்தில் தாங்கப் பெற்றிருந்தது இந்த சிவஞான போதமே! இதைவிட இந்நூலின் பெருமையைக் கூறவும் வேண்டுமா?

சைவ சித்தாந்தம் கொள்ளும் இறை, உயிர், தளை (பதி, பசு, பாசம்) என்னும் முப்பொருள் உண்மையை விளக்குகிறது இந்நூல். முப்பொருள் உண்மைகளை நாற்பதே வரிகளில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்த முதல் நூல் என்ற பெருமையும் இதற்குண்டு.

மெய்கண்டார் முக்தி பெற்ற திருத்தலமான திருவெண்ணெய் நல்லூரில், இவரது ஞான சமாதி (குருமூர்த்தம்) திருக்கோயில் உள்ளது. இக்கோயில், திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமானது. இத்திருக்கோயில் அமைந்துள்ள ஆதீனக் கிளை மடத்தில் நாள்தோறும் தம்பிரான் சுவாமிகள் மூலம் இரண்டு கால பூஜையும், மாதந்தோறும் சுவாதி நட்சத்திரத்தில் மெய்கண்டாருக்கு சிறப்பு வழிபாடும், ஆண்டுதோறும் ஐப்பசி மாத சுவாதி திருநாளில் மெய்கண்டார் குருபூஜையும் மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

அம்மன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 20 போ் காயம்

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

SCROLL FOR NEXT