வெள்ளிமணி

உருவு கண்டு எள்ளாமை வேண்டும்!

பாரத யுத்தம் முடிந்தபின் கிருஷ்ண பகவான், பாண்டவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு துவாரகைக்கு சென்றார். வழியில் உதங்கர் என்ற முனிவரை சந்தித்தார். அவர், உலகத் தொடர்பேயில்லாத துறவி. யாதவ குல திலகனாகிய கிருஷ்

இடைமருதூர் கி.மஞ்சுளா

பாரத யுத்தம் முடிந்தபின் கிருஷ்ண பகவான், பாண்டவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு துவாரகைக்கு சென்றார். வழியில் உதங்கர் என்ற முனிவரை சந்தித்தார். அவர், உலகத் தொடர்பேயில்லாத துறவி.

யாதவ குல திலகனாகிய கிருஷ்ணனை பார்த்த உதங்கர், ""பாண்டவர்களும், கெüரவர்களும் சுகமாய் இருக்கிறார்களா?'' என்று கேட்டார். அதற்கு கண்ணன், ""கெüரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் கோரமான யுத்தம் நடந்தது. அதில் கெüரவர்கள் இறந்துபோயினர்'' என்று கூறினார். இதைக்கேட்ட உதங்கர் கோபத்துடன்,  ""நீ கபடக்காரன்; மாய வேலைகள் செய்து கெüரவர்களை அழித்திருப்பாய். இதற்காக நான் உனக்கு சாபம் தரப்போகிறேன்'' என்று சினத்தோடு கூறினார்.

அப்போது கிருஷ்ணர், ""நீர் செய்த தவத்தின் பயனை கோபத்தால் இழந்துவிடாதீர். முதலில் நான் சொல்வதைக் கேளுங்கள். பிறகு வேண்டுமானால் எனக்கு சாபம் கொடுங்கள்'' என்று சமாதானம் செய்தார்.

    பின்னர் உதங்கருக்கு ஞானக்கண் தந்து தனது விஸ்வரூப தரிசனத்தைக் காட்டியருளினார் கண்ணன். பிறகு அவரிடம், ""நான் எப்போதும் தர்ம நெறிகளுக்குத் தக்கவாறே காரியத்தை முடிப்பேன்.

புத்தி கெட்டுப்போன கெüரவர்களை சமாதானத்திற்கு வரும்படி பலமுறை கெஞ்சிக் கேட்டேன். ஆனால் அவர்களோ அகங்காரத்தால் நான் சொன்னதை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் எனது விஸ்வரூப தரிசனத்தையும் காட்டி பயமுறுத்தினேன். அதற்கும் அவர்கள் அஞ்சவில்லை. கெüரவர்கள், பாண்டவர்களுக்குத் துரோகம் செய்வதிலேயே பிடிவாதமாக இருந்தனர்.

அதனால்தான் யுத்தம் ஏற்பட்டது. கெüரவர்கள் இறந்தனர். இதில் என்மேல் கோபம் கொள்ள எந்தக் காரணமும் இல்லை. கௌரவர்கள் கண்ட அதே விஸ்வரூபத்தை அர்ஜுனனுக்கு காட்டியபோது, அவன் என் தெய்வீகத் தன்மையையும், ஆற்றலையும் உணர்ந்தான். எல்லாம் அவரவர் பக்குவ நிலைக்கேற்ப அமைகின்றன'' என்றார்.

  ÷பகவான் கூறியதைக்கேட்ட உதங்கர், சாந்தம் அடைந்தார். "விதியை வெல்ல யாராலும் முடியாது' என்பதை நன்கு உணர்ந்து கொண்டார். அப்போது கண்ண பரமாத்மா, உதங்கருக்கு ஒரு வரம் கொடுப்பதாகக் கூறி, ""உங்களுக்கு வேண்டியதைக் கேளுங்கள்'' என்றார். ""நான் எப்போதாவது தாகத்துக்குத் தண்ணீர் வேண்டினால், அது உடனே கிடைக்கும்படி வரம் வேண்டும்'' என்றார் உதங்கர்.

கண்ணனும், ""அப்படியே ஆகட்டும்'' என்று வரம் தந்துவிட்டு துவாரகைக்கு புறப்பட்டுச் சென்றார்.

 ÷ஒருநாள் காட்டில் அலைந்து திரிந்த உதங்கர், தாகத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல் தவித்தார். உடனே ஸ்ரீகிருஷ்ணரை நினைத்தார். நினைத்த உடனேயே அங்கே ஒருவன், அருவெருக்கத் தக்க தோற்றத்துடன் வந்தான். அவன் உடம்பில் சரியான ஆடையில்லை; அணிந்திருந்த ஆடையும் கிழிந்தும், அழுக்குப் படிந்தும் இருந்தது.

அவன் கையில் ஒரு வில்லும், தோளில் ஒரு தோற்பையும் இருந்தன. அந்தத் தோற்பையில் தண்ணீர் இருந்தது. அவன் உதங்கரைப் பார்த்து, ""தண்ணீருக்குக் கஷ்டப்படுகிறீரே...! இந்தத் தண்ணீரைப் பெற்றுக்கொள்ளுங்கள்'' என்று தோற்பையின் மூங்கிற் குழாயில் இருந்த தண்ணீரை நீட்டினான்.

÷  அவனுடன் நான்கு வேட்டை நாய்களும் வந்ததைப் பார்த்த உதங்கர் வெறுப்புற்று, ""தண்ணீர் வேண்டாம்'' என்று மறுத்துவிட்டார்.

பிறகு பகவானை நினைத்து ""இதுவா நீ தந்த வரம்? பலிக்கவில்லையே கிருஷ்ணா!'' என்று தன்னைத்தானே நொந்துகொண்டார். ஆனால், வந்தவனோ அந்த இடத்தைவிட்டு அகலாமல் பலமுறை உதங்கரை தண்ணீரை வாங்கிக்கொள்ளுமாறு வற்புறுத்தினான். உதங்கர் கோபத்துடன் மறுத்துவிட்டார். அதன் பிறகு அவன் நாய்களுடன் மறைந்துவிட்டான்.

 உடனே உதங்கருக்கு ஞானக் கண் திறந்தது. ""இங்கு வந்தவர், கண்ணனால் அனுப்பப்பட்டவராகத்தான் இருக்க வேண்டும். கடவுள் என்னை சோதனை செய்திருக்கிறார். பிழை செய்துவிட்டேனே! என்ன செய்வது? இத்தனைக் காலமும் தவம் செய்து பெற்ற எனது ஞானமும் சக்தியும் என்ன பலன் தந்தது? தோற்றத்தைப் பார்த்து, அவன் கொடுத்த தண்ணீரை ஏன் மறுத்தேன்?'' என்று பலவாறு புலம்பித் துக்கப்பட்டார்.

 ÷சிறிது நேரத்திற்குப் பிறகு கண்ண பரமாத்மா அங்கு தரிசனமளித்தார். ""தேவாதி தேவா! இப்படி என்னைச் சோதிக்கலாமா?'' என்று வருத்தத்துடன் கேட்டார் உதங்கர். அதைக் கேட்ட யதுகுல திலகன் சிரித்துக்கொண்டே, ""உதங்கரே! உமக்காகத்தான் இந்திரனிடம் சொல்லி அமிர்தத்தை எடுத்துப்போகச் சொன்னேன்.

ஆனால் அவனோ "ஜல ரூபமாக (தண்ணீர் வடிவில்)தான் அமிர்தத்தை எடுத்துச் செல்வேன். மேலும் வெறுக்கத் தக்க வேஷத்தில்தான் செல்வேன். அதற்கு அவர் ஒப்புக்கொண்டால் சரி' என்றான். நீர் ஞானியானதால், வேஷத்தைக் கண்டு எவரையும் வெறுக்கமாட்டீர்கள் என்று நம்பி அவ்வாறே செய்யச்சொன்னேன். நீர் இவ்விதம் நடந்துகொள்வீர்கள் என்று எனக்குத் தெரியுமா?'' என்று பதிலடி கொடுத்தார்.

அமிர்தம் தனக்குக் கிடைக்காமல் போனதை நினைத்து உதங்கர் மேலும் வருந்தினார். உருவத்தைக் கண்டு யாரையும் எளிதில் எடைபோட்டுவிடக்கூடாது என்பதையும், உருவத்தைக் கண்டு இகழக்கூடாது என்பதையும் உணர்ந்துகொண்டார். உடம்பின் புறத்தோற்றத்தைக் கண்டு எவரையும் வெறுக்கக்கூடாது; தவ வலிமையால் பெற்ற ஞானத்தை நன்கு பயன்படுத்த வேண்டும் என்பதை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் இந்த லீலையில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

அம்மன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு: 20 போ் காயம்

பண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்

பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள்: இந்தியா்களுக்கு தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் மூதறிஞர் ராஜாஜி! குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு புகழாரம்

SCROLL FOR NEXT