வெள்ளிமணி

நினைப்பற நினை மனமே...

இது வைகாசி மாதம். தமிழ்க் கடவுளாம் முருகனுக்கு உகந்த மாதங்களுள் வைகாசி மாதமும் ஒன்று. இந்நன்னாளில் ஒருமுறை, ஒரேமுறை "முருகா' என்று வாயினால் சொன்னாலோ, மனத்தினால் நினைத்தாலோ போதும். அவன் இருமுறை வந்து அ

இடைமருதூர் கி.மஞ்சுளா

இது வைகாசி மாதம். தமிழ்க் கடவுளாம் முருகனுக்கு உகந்த மாதங்களுள் வைகாசி மாதமும் ஒன்று. இந்நன்னாளில் ஒருமுறை, ஒரேமுறை "முருகா' என்று வாயினால் சொன்னாலோ, மனத்தினால் நினைத்தாலோ போதும். அவன் இருமுறை வந்து அருள் புரிவான் என்பதை விளக்கும் அதியற்புதமான பாடல் இதோ.

""அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்

வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்

நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்

"முருகா' என்று ஓதுவார் முன்!''

சிவபெருமானை (ஐந்து முகம்) நினைத்தால் போதும், அங்கு முருகப்பெருமான் (ஆறு முகம்) வந்து அருள்வான். சிவபெருமான் அருள்பாலிக்கும் இடங்களிலெல்லாம் ஆறுமுகக் கடவுளாம் முருகப் பெருமானும் நீக்கமற நிறைத்திருப்பான். சிவபெருமானும் முருகப் பெருமானும் வேறு வேறு அல்லர். இருவரும் ஒருவரே.

÷சிவபெருமானின் ஆறு திருமுகங்களுள் ஒன்று அதோமுகம். அந்த அதோமுகத்தில் இருந்துதான் சிவபரம் பொருள், சிவகுமாரனாகிய முருகப் பெருமானைத் தோற்றுவித்தார். முருகன் ஒருவன்தான் தகப்பன்சாமி என்று பெயர் பெற்றவன். பிறரெல்லாம் தாய்க்குப் பிறந்தவர்கள். ஆனால், முருகப்பெருமான் ஒருவனே தகப்பனுக்குப் (சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து) பிறந்தவன்.

 அதனால், இவ்வுலகில் மட்டுமல்ல, ஈரேழு பதினான்கு உலகத்திலும் முருகப்பெருமான் ஒருவனே "ஆண்மகன்' என்ற பெயருக்கும், பெரும் புகழுக்கும் சொந்தக்காரன்.

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடியவனும் அவன் ஒருவனே...! மனத்தால் நினைப்பற நினைந்தால் மட்டுமே அவனைப் பெற முடியும். அவன் எளியோருக்கு எளியன்; அடியார்க்கு அடியன்; மனத்தால் நினைப்பற நினைவோருக்கு இனியன்.

முருகனின் அருள் பெற்ற அடியார் பலருள் அருணகிரிநாதர் தனிச்சிறப்பு வாய்ந்தவர். காரணம், அவரது சந்தக் கவிகள்தான் முருகப்பெருமானுக்கு மிக விருப்பமானவை. முருகப்பெருமானே விரும்பிப் பாடச் சொன்ன திருப்புகழ் பாடல்கள். திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி ஆகிய செந்தமிழ்ப் பாக்கள் பாடப்படும் இல்லங்கள் தோறும் ஆறுமுகப் பெருமானின் அருள்மழை பொழிந்தவண்ணம் இருக்கும்.

அவனது உடைமைகளான வேல், மயில், சேவல் ஆகியவற்றைப் போற்றினாலே போதும். முருகப்பெருமானின் வாகனம் மயில். இது அகில உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் சுற்றிவரும் வல்லமை - ஆற்றல் கொண்டது. முருகப்பெருமானின் ஞானசக்தியே அவன் கையில் உள்ள வேல். ஞானமாகிய அறிவுக்கு ஆழம் (ஆழ்ந்த அறிவு), அகலம் (பரந்த அறிவு), கூர்மை (நுட்பமான அறிவு) என்னும் மூன்று இலக்கணங்கள் உண்டு.

சேவல், கதிரவனாகிய சூரியோதத்தை உலகுக்கு உணர்த்துவது. ஞானமிக்க உதய சூரியனான முருகனின் வரவை உணர்த்துவது சேவல். "இம்மூன்றினையும் பாடித் துதித்துப் போற்றும் தொண்டினையே தனக்குப் பணியாக அருள் செய்திட வேண்டும்' என்று அருணகிரியார், கந்தர் அநுபூதி காப்புச் செய்யுளில் வேண்டுகிறார். என்னே அவரது தொண்டின் திறம்!

""ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்

பாடும் பணியே பணியாய் அருள்வாய்

தேடும் கயமா முகனைச் செருவில்

சாடும் தனியானை சகோதரனே''.

கந்தர் அநுபூதியின் பெருமையை தாயுமானவ சுவாமிகள்,

""கந்தரனுபூதி பெற்றுக் கந்தரனுபூதி சொன்ன

எந்தை அருணடியாருக்கு நாளென் நாளோ''

என்று போற்றியுள்ளார். இதைப் படிப்போர் முருகப்பெருமானின் அருளைப் பெறுவதுடன், இறையனுபூதி எய்தி பேரானந்தப் பெருநிலையையும் அடைவர் என்கிறார் அருணகிரிநாதர். கந்தர் அநுபூதியில் உலகுக்கு உபதேசம் சொல்வதுபோல பல செய்திகளைக் கூறியுள்ளார்.

இந்த உலகம் மாயையில் கிடந்து உழன்று கொண்டிருக்கிறது. இம்மாயையில் இருந்து விடுபட முருகப்பெருமான் ஒருவனே கதி. அவன் குருவாக வந்து அருள் செய்தாலொழிய இந்த மாயப் பிரபஞ்சத்தில் இருந்து விடுபட வழியேயில்லை. இதை இறுதிப் பாடலில்,

""உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்

கருவாய் உயிராய் கதியாய் விதியாய்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!''

என்று ஏகாரத்தோடு வேண்டி மன்றாடுகிறார்.

"யான் எனது' என்ற ஆணவத்தால் செய்யக்கூடாத பல செயல்களைச் செய்து உழன்று கொண்டிருக்கின்றன கலியுகத்து உயிர்கள். இவ்வுயிர்களைத் தூய்மைக்கும் படைக் கருவியான ஞானவேல் அவனிடம் உள்ளது. ஞான சூரியனான முருகப்பெருமானை வாயில் போற்றித் துதித்தாலும், கைகளைக் கூப்பித் தொழுதாலும், மனத்தால் நினைப்பற (யான், எனது என்ற அகந்தை கெட) நினைந்தாலும் எங்கிருந்தாலும் அவன் ஓடோடி வந்து உயிர்களின் மாசுகளை (மன இருள்) நீக்கி ஞானம் அருள்வான். அவன் ஒருவனே ஞானம் வழங்கக்கூடிய ஆற்றல் உள்ளவன்.

சரண கமலாலயத்தை அரைநிமிஷ நேரமட்டில்

தவமுறை தியானம் வைக்க அறியாத

என்ற அருணகிரியின் திருப்புகழ் பாடல் வழி, நொடிப்பொழுதுகூட இறைவனை நினைக்க முடியாமல், பல வழிகளில் அலைக்கழித்துக் கொண்டிருக்கும் இந்தக் கலியுகத்திலிருந்து மீண்டு, அவனது திருவடிகளை சரண்புக இந்நன்னாளில், முருகனை நினைப்பற நினைவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகை

நிலக்கரிச் சுரங்கங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிா்காலத்தை பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி

அனில் அம்பானி வங்கிக் கணக்குகளை மோசடி என அறிவிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை: ரத்து செய்த உயா்நீதிமன்றம்

சிதம்பரம் நகராட்சியில் ரூ.400 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

வில்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT