வெள்ளிமணி

அபிராமி அந்தாதி படித்தால்...!

அபிராமி அந்தாதியைப் படிப்பவர், பாராயணம் செய்பவர், அவள் புகழ் கேட்பவர், போற்றி வணங்குபவர் அனைவரும் எல்லா நலன்களும் பெறுவார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் எந்நாளும் துன்பமில்லை; இன்பமே அடைவார்கள்.  "தனம்

முருக சரணன்

அபிராமி அந்தாதியைப் படிப்பவர், பாராயணம் செய்பவர், அவள் புகழ் கேட்பவர், போற்றி வணங்குபவர் அனைவரும் எல்லா நலன்களும் பெறுவார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் எந்நாளும் துன்பமில்லை; இன்பமே அடைவார்கள்.

 "தனம் தரும்' என்ற பாட்டில் அபிராமி தேவி அன்பர்களுக்கு "நல்லன எல்லாம் தரும்' என்று மொழிந்து, விரிவாகப் பாடிய அபிராமி பட்டர், "நூற்பயன்' பாட்டில் ரத்னச் சுருக்கமாக அருளியுள்ளார்.  அபிராமி தேவியை வழிபடுவார்க்கு ஒரு துன்பமும் வராது என்று உறுதியுடன் கூறுகிறார். ""முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே'' எனக் குறிப்பிடுகிறார்.

அவள் உலகத்தைப் படைத்த தாய்; பராசக்தி. அவள் புகழ், பூத்த மலரின் புதுமணம்போல் எங்கும் பரவி நிறைந்திருக்கிறது. அவள் மாதுளம் பூ போன்ற இளம் சிவப்பு நிறமுடையவள். உலக உயிர்கள் அனைத்தையும் காத்தருள்கின்றவள். ஐந்து மலர்க் கணைகள், பாசம், அங்குசம், கரும்பு இவைகளை அழகிய கைகளில் சேர்த்தவள். கதிரவன், மதி, கனல் மூன்றையும் கண்களாகக் கொண்டவள்.

 இத்தகு சிறப்புடைய அபிராமியை வணங்கித் துதிப்பவர்க்கு ஒரு சிறு துன்பங்கூட வரவே வராது என உறுதிபடக் கூறுகிறார் அபிராமி பட்டர்.

 உறவினரோ, தோழரோ ஒருவரை ஒருவர் விசாரிக்கும்போது ""என்ன... வாழ்வில் ஒன்றும் சிரமம் இல்லையே,'' எனக் கேட்பார்கள். ""சிரமமில்லை; நலமாக இருக்கிறேன்'' எனக் கேட்கப்படுகிறவர்களும் விடை அளிப்பார்கள்.

 கம்பன் காவியத்தில் அரச குமாரனான ராமன் நாட்டு மக்களிடம் குசலம் விசாரிக்கின்றான். ""எது வினை? இடரிலை? இனிது நும் மனையும்? மதிதரு குமரரும் வலியர் கொல்? எனவே'' என்று. அதாவது ""நீங்கள் சுகமாக இருக்கிறீர்களா? தொழில் என்ன? இடையூறு யாதுமில்லையே... குடும்ப வாழ்க்கை இனிது நடைபெறுகிறதா? உங்கள் மனைவி, மக்கள் நலமாக இருக்கிறார்களா?'' என்பது இதன் பொருள். இவ்வண்ணமாக ராமன் மக்களின் சேம நலன்களை விசாரிப்பதாக வருகிறது.

 கம்பன் பாட்டில் வரும் "துன்பமில்லை' என்ற சொல்லைப் பின்பற்றிய அபிராமிபட்டர் "ஒரு தீங்கில்லையே' என நூற் பயனைப் பற்றி வரும் பாட்டில் சொல்லியிருக்கிறார்.

 இருள் இல்லை என்றால் வெளிச்சம்தான். தாழ்வு இல்லையென்றால் வாழ்வுதான். ""ஒரு தீங்கில்லையே'' என்றால் ""எல்லாம் நன்மையே'' என்பதுதான் பொருள்.

   அபிராமி அந்தாதி வழி, அபிராமியை வழிபடுவோர்க்கு வாழ்வில் எக்காலத்திலும் எந்நிலையிலும் மங்கலங்களே பொங்கி வரும். மாசற்ற வாழ்க்கை அமைந்து அவர்கள் தேசுடன் புகழ் வீசும் வண்ணம், மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வார்கள் என்று நிறைவு செய்கிறார் அபிராமி பட்டர்.

இருளிலிருந்து ஒளிக்கும் பொய்மையிலிருந்து சத்தியத்துக்கும் பிறப்பு-இறப்பிலிருந்து பெருவாழ்வுக்கும் அழைத்துச் செல்லும் நூல்.   அபிராமி அந்தாதியை நாள்தோறும் மறவாமல் பயின்று நலன்களுடன் வாழ்வோம்.

""ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத் தாளைப் புவியடங்கக் காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT