வெள்ளிமணி

பொற்காசுகள் கொடுத்த பொன்னார் மேனியன்!

மக்களின் பசித் துன்பத்தைப் போக்க, இறைவனே தனது பிரதான அடியார்கள் மூலம் பொற்காசுகள் அளித்த வரலாறு, ஆன்மீக உலகில் ஓர் அதிசயமாகத் திகழ்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை திருக்கோயிலில்தான்

கி.ஸ்ரீதரன்

மக்களின் பசித் துன்பத்தைப் போக்க, இறைவனே தனது பிரதான அடியார்கள் மூலம் பொற்காசுகள் அளித்த வரலாறு, ஆன்மீக உலகில் ஓர் அதிசயமாகத் திகழ்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை திருக்கோயிலில்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது.

கும்பகோணத்திலிருந்து நாச்சியார்கோயில் - பூந்தோட்டம் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்தும் இத்திருத்தலத்திற்கு வரலாம். வீழிச் செடிகள் நிறைந்திருந்ததால் இவ்வூர் "திருவீழிமிழலை' என அழைக்கப்பட்டது. இத்தலம் பூ கைலாசம், கல்யாணபுரம், பஞ்சாக்கரபுரம், தட்சிண காசி, ஷண்மங்கள ஸ்தலம், நேத்ரார்ப்பணபுரம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

இத்திருக்கோயிலில் இறைவன் வீழிநாதரும் - அம்பாள் அழகிய மாமுலையம்மையும் அன்பர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 61வது தலமாக இத்தலம் விளங்குகிறது. திருவாவடுதுறை ஆதீனத்தால் சிறப்பாகப் பராமரிக்கப்படும் தலங்களில் இதுவும் ஒன்று.

புராண வரலாற்றுப் பெருமை உடையது இக்கோயில்! திருமால், சக்கரத்தைப் பெற இங்கு நாள்தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் வீழிநாதரை அர்ச்சித்து வந்தார். ஒரு நாள், ஒரு பூ குறையவே, திருமால் தனது கண்ணையே பறித்து மலராக அர்ச்சித்து சிவபெருமானின் அருளைப் பெற்றதாகத் தல புராண வரலாறு கூறுகிறது.

இந்நிகழ்ச்சி திருமுறைப் பாடல்களிலும் பல்வேறிடங்களில் குறிப்பிடப்படுகிறது. ""நீற்றினை நிறையப்பூசி நித்தல் ஆயிரம் பூக்கொண்டு எற்றுழி, ஒரு நாள் ஒன்று குறையக் கண் நிறைய இட்ட ஆற்றலுக்கு ஆழி நல்கி'' என்று நாவுக்கரசர், சிவபெருமானின் திருக்கருணையைப் போற்றுகின்றார். மேலும் பிரம்மதேவன், சிபி ஆகியோரும் இத்தலப் பெருமானை வழிபட்டதாகத் தல வரலாறு கூறுகிறது.

மாப்பிள்ளை சுவாமி



உமாதேவி (காத்யாயனி) இங்கு தவமிருந்து சிவபெருமானை மணம் புரிந்தார். சித்திரை மாதம், மக நட்சத்திரம் அன்று இங்கே இத்திருமண விழா சிறப்பாக நடைபெறுகிறது. உற்சவ மூர்த்தியான கல்யாண சுந்தரரரை "மாப்பிள்ளை சுவாமி' என பக்தர்கள் சொந்தம் கொண்டாடுவது, செவிகளைக் குளிர்விக்கும். திருமணம் ஆகாத பெண்கள் இங்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.

இலக்கியச் சிறப்பு

இத்தலத்தை ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் போற்றியுள்ளனர். சேந்தணார் அருளிய திருவிசைப்பா பதிகமும் வீழிநாதரின் சிறப்பை விளக்குகிறது. திருவாவடுதுறை ஆதினத்து இரண்டாவது குரு மூர்த்திகள் ஸ்ரீமறை ஞான தேசிகருடைய மாணவர் ஸ்ரீமெய்ஞான ஞானமுனிவர் இயற்றிய திருவீழிமிழலைத் தல புராணமும் மிகுந்த சிறப்புடையது. இதுதவிர அம்பாள் பேரில் இயற்றிய "அழகிய மாமுலையம்மை பிள்ளைத் தமிழ்'  என்ற இலக்கியமும் போற்றுதற்குரியது.

திருக்கோயில் அமைப்பு

கிழக்கு பார்த்த திருக்கோயில். கோயிலுக்கு எதிரே "திருமால் தீர்த்தம்' உள்ளது. உள்ளே செல்லும் பொழுது வலது புறம் "வெளவால் நெற்றி மண்டபம்' அமைந்துள்ளது. நடுவில் தூண்கள் இல்லாமல் செங்கல் - சுண்ணாம்பினால் அகலமாக அமைக்கப்பட்ட இம்மண்டபம் வியப்புக்குரியது. தமிழகக் கட்டடக் கலைச் சிறப்புக்கு இம்மண்டபம் சிறந்த எடுத்துக்காட்டு! சித்திரை மாதத்தில் இங்குதான் இறைவனது திருக்கல்யாணத் திருவிழா நடைபெறுகிறது.

வாசி தீரவே காசு நல்குவீர்!

இரண்டாவது கோபுரத்தைக் கடந்தவுடன் அத்திருச்சுற்றில் ஞானசம்பந்தருக்கு இறைவன் படிக்காசு அளித்த பலிபீடத்தையும், நாவுக்கரசருக்கு படிக்காசு அளித்த பலிபீடத்தையும் காணலாம். இந்த வரலாறு சுவாரஸ்யமானது. ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் பல தலங்களுக்குச் சென்று வழிபட்டுவிட்டு திருவீழிமிழலை வந்தனர். இறைவனைப் போற்றி வணங்கிவிட்டு இங்கே தங்கினர்.

அச்சமயம் அப்பகுதியில் பஞ்சம் ஏற்பட்டது. அடியார்கள் துன்பப்பட வேண்டாம் என இறைவனே "நாள்தோறும் பஞ்சம் தீர்க்க ஒரு பொற்காசு அளிக்கின்றோம்' என அருள் உள்ளத்துடன் கூறினார். ஞானசம்பந்தர் பெருமானும், நாவுக்கரசர் பெருமானும் அங்குள்ள பலிபீடங்களில், பொன்னார் மேனியனாகிய இறைவன் அளித்த பொற்காசினைக் கொண்டு, அடியார்களின் பசிப்பிணி நீக்கினார்கள்.

இப்படிப் பொற்காசுகளை அளித்த பலி பீடங்களை வணங்கி உள்ளே செல்கிறோம். மூன்றாவது கோபுரத்தைத் தாண்டி இறைவன் சந்நிதியில் நுழைகிறோம். இத்திருச்சுற்றில் தல விநாயகர், சோமாஸ்கந்தர், முருகன், மகாலட்சுமி, சண்டேசுவரர், நடராஜர் சபை ஆகியவற்றை தரிசிக்கின்றோம்.

விண்ணிழி விமானம்

இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை விமானம் மிகுந்த சிறப்புடையது. இதற்கு "விண்ணிழி விமானம்' என்பது பெயர். மற்ற கோயில் விமானங்களிலிருந்து இதன் அமைப்பு சற்று மாறுபடுகிறது. செப்புத் தகடுகள் வேயப்பெற்றுத் தங்கக் கலசத்தோடு விளங்கும் அழகே தனிதான்!

இங்கு தங்கியிருந்தபொழுது ஞானசம்பந்தப் பெருமானுக்கு சீர்காழி இறைவன் தோணியப்பராக விமானத்தில் காட்சியளித்த நிகழ்ச்சி, சிற்பங்களாக விமானத்தில் காட்டப்பட்டுள்ளது சிறப்பானது. ராஜேந்திர சோழனின் மைந்தனான முதலாம் ராஜாதிராஜசோழனின் அணுக்கியாரான பல்லவன் பட்டாலி நங்கை என்பவளும், மற்றவர்களும் இவ்விமானத்திற்கு பொன் வேய்ந்த செய்தி கல்வெட்டில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ""விண்ணிழி பொற்கோயில்'' என்றே கல்வெட்டு சிறப்புடன் குறிக்கிறது. இது வானுலகிலிருந்து மண்ணுக்கு வந்த மகத்தான பெருமையுடைய விமானம்!

திருமணக் கோலம்

இறைவன் சந்நிதி கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் ஆகிய அமைப்புகளுடன் விளங்குகிறது. கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியராக, "வீழிநாதேசுவரர்' என்ற பெயருடன் காட்சி தருகிறார். சுவாமிக்கு பின்புறம் சுவரில் இறைவனது திருமணக் கோலம் தரிசனமாகின்றது.

கல்யாணசுந்தரர்

இறைவன் உமாதேவியை மணம்புரிந்து கொண்ட தலம் என்பதற்கு ஏற்பக் கருவறையின் வாயிலில் அரசாணிக்கால் எனப்படும் தூணும், வெளியில் உள்ள மகாமண்டபத்தில் "பந்தற்கால்' எனப்படும் தூணும் உள்ளன. மகா மண்டபத்தில் "மாப்பிள்ளை சுவாமி'யான கல்யாண சுந்தரேஸ்வரர், உமையாள் காத்யாயனி தேவியாரோடு ரிஷப வாகனத்தின் மீது வலது திருக்கரம் வைத்துக் காட்சி தரும் அழகிய வடிவு, காணக் காணத் தெவிட்டாதது. 

இதையடுத்து கிழக்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. அம்பாள் "அழகிய மாமுலையம்மை' என அழைத்துப் போற்றப்படுகின்றாள். ஸ்ரீ சுந்தர குசாம்பிகை என்ற பெயராலும் வணங்கப்படுகிறாள்.

கல்வெட்டுகள்:

இக்கோயில் வரலாற்றுச் சிறப்புடையதாகும். இக்கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, "திருவீழிமிழலைக் கல்வெட்டுகள்' என்ற நூலை வெளியிட்டுள்ளது.

பராந்தகசோழன், ராஜராஜன், ராஜேந்திரன், ராஜாதிராஜன், குலோத்துங்க சோழன், பிற்கால சோழமன்னர்கள், பாண்டிய மன்னர்கள், விஜய நகர மன்னர்கள் பலரும் இக்கோயிலுக்கு தானம் அளித்து சிறப்பு வழிபாடு நடைபெற உதவியுள்ளனர்.

மக்களின் பசித் துயரம் தீர்த்த தலமான திருவீழிமிழலை சென்று வழிபட்டு, நாமும் இறைவன் அருள் பெறுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளைக் கொண்டு உக்ரைனுக்கு நிதியுதவி: ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் தீவிர ஆலோசனை

286 கோடி டாலராக அதிகரித்த இந்திய ஜவுளி உற்பத்தி

தமிழகத்தில் ஒருவா் கூட ஆா்டா்லிகளாக இல்லை: டிஜிபி அறிக்கையில் தாக்கல்

அகிலபார நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கக் கூட்டம்

மதுரையில் காவலா் நிழல் குடை அறையில் ஆட்டோ ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை

SCROLL FOR NEXT