வெள்ளிமணி

யாதுமாகி நின்றாய் பராசக்தி!

"வைய முழுதும் படைத்து அளிக்கின்ற மஹாசக்தி தன் புகழ் வாழ்த்துகின்றோம். பூதங்கள் ஐந்தில் இருந்து எங்கும் கண்ணில் புலப்படும் சக்தியைப் போற்றுகின்றோம். உயிர் எனத் தோன்றி உணர்வு கொண்டே வளர்ந்து ஓங்கிடும் ச

ஆர். கிருஷ்ணன்

"வைய முழுதும் படைத்து அளிக்கின்ற மஹாசக்தி தன் புகழ் வாழ்த்துகின்றோம். பூதங்கள் ஐந்தில் இருந்து எங்கும் கண்ணில் புலப்படும் சக்தியைப் போற்றுகின்றோம். உயிர் எனத் தோன்றி உணர்வு கொண்டே வளர்ந்து ஓங்கிடும் சக்தியை ஓதுகின்றோம்'' என்று மகாகவி பாரதி பராசக்தியின் பேரருளைப் போற்றுவார்.

உலகத்தில் எல்லாவற்றிலும் வியாபித்து அவற்றை இயக்கும் உயிர்சக்திதான் ஆதிபராசக்தி. பிரம்மா, விஷ்ணு, ஈசன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் படைத்தல், காத்தல், அருளல் என்னும் சக்தியை அளிப்பவள் பராசக்தியே என்பது சக்தி வழிபாட்டின் ஆதார சுருதி.

சக்தி இல்லையேல் சிவம் இல்லை. சிவம் என்பது ஜடப்பொருள். அதனுடன் சக்தி இணையும்போது சலனம் ஏற்படுகிறது. சக்தியின் பரிணாமங்கள் எண்ணிக்கையில் அடங்காது. சூரியனை விட்டு சூரிய ஒளி அகலாதது போல பரமசிவத்திலிருந்து பராசக்தியைப் பிரிக்க முடியாது. பராசக்தியின் ஆயிரத்தில் ஒரு கூறு ஆதி சக்தியாகிறது. ஆதிசக்தியின் ஆயிரத்தில் ஒரு கூறு இச்சா சக்தியாகவும், கிரியா சக்தியாகவும், ஞான சக்தியாகவும் பரிமளிக்கிறது. முத்தொழிலையும் இயற்றுகிறது. இவ்வுலகிலே அவளுடைய சிருஷ்டியான மலை, கடல், நதி, மரம், செடி, கொடி, சோலைகள் எல்லாம் அவளது உடல். மனிதர்களின் தகாத செயல்களால் அந்த சக்தி கோபமுறும்போது இயற்கை உபாதைகள் (அழிவுகள்) நிகழ்கின்றன. பெரு வெள்ளம், மழையின்மை, பூகம்பம், தொற்றுநோய்கள் இப்படிப் பல வித இடையூறுகள் ஏற்படுகின்றன.

உலகில் நல்லவர்களைக் காக்க, கெட்டவர்களை வதைக்க துணையாயிருப்பவள் பராசக்தியே!சிவ பக்தியில் திளைத்த மார்க்கண்டேயனைக் காக்க, சிவபிரான் காலனை உதைத்து மரிக்கச் செய்தது சக்தியின் பாகமாகிய இடது பாதம்தானே! இராமாயணத்தில் இராவணனை அழிக்க சீதை என்ற சக்தியாகவும், மகாபாரதத்தில் அதர்மமும் சூழ்ச்சியும் செய்து வந்த கெüரவர்களை வெல்ல திரெüபதி என்ற மகாசக்தியாகவும் இருந்தவள் அவளே! மகிஷாசுரனை வதைக்க மகிஷாசுரமர்த்தினியாக வடிவெடுத்தவள் அந்த மகா சக்தியல்லவா! தமது புதல்வனுக்கு "சக்திவேல்" கொடுத்து அதனால் முருகப்பெருமான் சூரபத்மாதியர்களை வதைக்கத் துணை நின்றவள் பராசக்திதானே! அவளே கிருஷ்ணனுக்கு சத்யபாமா என்ற சக்தியாக இருந்து நரகாசுரனை வதைக்க உதவினாள். பஸ்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்தவளும் அவள் அல்லவா? இப்படி எத்தனையோ வரலாறுகள். சக்தி இல்லையேல் உலகம் இல்லை.

ஆதி அந்தம் இல்லா ஆதிபராசக்தி ஒன்றாகத் தோன்றி ஆண்-பெண் என்ற இரண்டு சக்தியாகி, இச்சை, கிரியை,ஞானம் என மூன்றாக வளர்கிறாள். பரா, பச்யந்தி, மத்யமா, வைகரி என்ற நான்காகப் பரிணமித்து, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐவகை சக்திகளாக உருப்பெறுகிறாள். நமது உடலில் உள்ள ஆறு ஆதாரங்களில் அமர்ந்து நம்மை ஆட்டுவிக்கிறாள். அவளே சப்த மாதாக்களாக, அஷ்ட லக்ஷ்மிகளாக, நவ துர்க்கையாக பல ரூபங்களில் காட்சி தருகிறாள். தசமஹாவித்யா ரூபங்களைக் கொண்டு இப்பிரபஞ்சம் முழுவதும் தானே என்றும் பிரபஞ்சம் அனைத்திலும் காணப்பெறும் யாவும் என் படைப்புகளே என்றும் பறைசாற்றுகிறாள்.

சிவ பிரானின் இடப்பாகத்தைப் பெற்ற அர்த்தநாரீஸ்வர வடிவில், "பவானி' என்று பெயர் பெறுகிறாள். புருஷோத்தமனாக - ஆண் வடிவில் விஷ்ணுவாகவும், பெண் வடிவில் வைஷ்ணவியாகவும், அசுரர்களை அழிக்கக் கோலம் கொள்ளும்போது காளியாகவும், போரில் வெற்றி பெற்று வரும் போது துர்க்கை எனும் கொற்றவையாகவும் காட்சி தருகிறாள். முத்தொழிலைச் செய்யும் போது பிராம்மணி, வைஷ்ணவி, காத்யாயினி என்றும், வித்தையின் வடிவம்கொள்ளும்போது சரஸ்வதியாகவும் தனதான்ய தலைவியாக வரும்போது லக்ஷ்மி என்றும் அழைக்கப் பெறுகிறாள்.

ஓடும் நீரில் ஜல சக்தி; ஒளிரும் விளக்கில் ஒளிசக்தி: எரியும் நெருப்பில் வெப்ப சக்தி; வீசும் காற்றில் வாயு சக்தி; இயங்கும் எந்திரத்தில் இயந்திர சக்தி-மின் சக்தி; பொருட்களில் ஈர்ப்பு சக்தி - இப்படி மனோசக்தி உட்பட அனைத்து உயிரினங்களிலும் அவள் அடங்கியிருக்கிறாள். இந்த எல்லா சக்திகளையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் ஆன்ம சக்தி. இந்த ஆன்ம சக்தி அதிகரிக்க அதிகரிக்க நாம் இறைவனை நெருங்குகிறோம். இந்த சக்தி பரிபூர்ண நிலையை அடையும்போது அந்த ஆத்மா பேரானந்தம் அடைகிறது. இறைத் தன்மையை அடைந்து இறைவனோடு இரண்டறக் கலந்துவிடுகிறது.

எல்லாம் சக்தி மயம் என்ற தத்துவத்தை உணர்த்த வந்ததுதான் நவராத்திரப் பண்டிகை. மகாசக்தியை- பெண்மையைப் போற்றும் திருவிழா. பக்தியையும், அன்பையும், மனித நேயத்தையும் காட்டும் உன்னத விழா! ஒவ்வொருவர் இல்லத்திலும் படிகட்டி கொலு பொம்மைகளை வைத்து உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து மகிழ்ச்சியையும் அன்பையும் பரிமாறிக்கொள்ளும் அற்புதமான பண்டிகை. படைப்பில் அனைவரும் சமம். அதனால்தான் புழு, பூச்சி முதல் மனிதர், தேவர் வரை, அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் பொம்மை கொலுவில் சமமாகக் காட்சியளிப்பர்.

மஹாளயத்தைத் தொடர்ந்து வரும் சுக்ல பட்சம் தேவதைகளின் குறிப்பாக சக்தி வழிபாட்டுக்கு உரியதாகும். அனைத்து உயிரினங்களும் பராசக்தியிடம் அடங்குவதால் இந்த ஒன்பது நாட்கள் சக்தி வழிபாடு பிரதானமாகிறது. நவராத்திரியில் பராசக்தியை பூஜை செய்வது மற்ற நாட்கள் வழிபாடு செய்வதை விட பல மடங்கு பலனளிக்க வல்லது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடாகவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி வழிபாடாகவும், நிறைவான மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே ஒன்பது நாட்களும் ஸ்ரீசக்ர பூஜை, அஷ்டோத்திரம், திரிசதி, சஹஸ்ரநாமம், தேவி மாஹாத்மிய பாராயணம் என்று பல விதமாக பராசக்தியை பூஜிப்போம். அவளின் அருள் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

SCROLL FOR NEXT