வள்ளி தினைப் புனம் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாள். அந்நேரம் முருகப் பெருமான் இளங் காளையாக அங்கே வந்தான். வள்ளியைக் கண்டு அவளைத் திருமணம் புரிய எண்ணினான். இதை அறிந்த வள்ளியின் தந்தை வேடன் நம்பிராஜன் வள்ளியை திருத்தணிகை மலையில் வைத்துத் திருமணம் செய்துகொடுத்தார். இருப்பினும், தம் இடமான வள்ளிமலையில் வள்ளியும் முருகனுமாய் எழுந்தருள பிரார்த்தனை செய்தார். அவரின் வேண்டுகோளின்படி, வள்ளிமலையில் முருகப் பெருமான் எழுந்தருளினார்.
இத்தகைய முருகன் தொடர்பான நிகழ்வுகளைத் தன்னுள்ளே கொண்டு திகழ்கிறது வள்ளிமலை. வேலூரில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து திருத்தணி சுமார் 50 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
இங்கே அடிவாரத்தில் ஒரு கோயில் உள்ளது. மலை மீது ஒரு குடைவரைக் கோயில் உள்ளது. மலைக்கோயிலில் சுப்பிரமணியர் குடைவரை சந்நிதியில் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். வழக்கமாக விமானத்தின் கீழ் சுவாமி இருப்பார். ஆனால் இங்கே கோயில் கோபுரத்தின் கீழ் இவரது சந்நிதி உள்ளது. சந்நிதிக்கு வெளியே கொடிமரம். கொடிமரத்திற்கு எதிரே விநாயகர், சந்நிதி கொண்டுள்ளார். முன் மண்டபத்தில் நம்பிராஜன், நவ வீரர்கள் ஆகியோர் உள்ளனர்.
வேடர் குலத்தில் வளர்ந்தவர் என்பதால், வள்ளிக்கு அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. வள்ளி இங்கேதான் வளர்ந்தாள் என்பதால், இந்த இடம் வள்ளியின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில் வள்ளிக்கு சந்நிதி உள்ளது. மலை மேல் வள்ளியின் சந்நிதி குடைவரை சந்நிதியாக இருக்கிறது. இங்கே வள்ளி தன் கையில் பறவைகளை விரட்டுவதற்காக உண்டி வில், கவண்கல் ஆகியவற்றை வைத்திருக்கிறாள். கோயிலின் ஓர் இடத்தில் கற்சுவரில் துவாரம் ஒன்று உள்ளது. அது ஓர் சுரங்கப் பாதை என்றும், இந்த இடத்தில் இருந்துதான் வள்ளியை திருத்தணி மலைக்கு முருகன் அழைத்துச் சென்றார் என்றும் கோயில் அர்ச்சகர் பக்தி மேலிடச் சொல்கிறார்.
இந்தக் கோயிலுக்கு மேலே மலைப் பாதையில் சென்றால், அங்கங்கே சிறிய அளவில் தங்கும் மண்டபங்கள், சுனைகள் உள்ளன. இந்த மண்டபங்களில் இருந்துதான் வள்ளி தினைப் புனம் காத்ததாகவும், பறவைகளை விரட்டியதாகவும் கூறுகிறார்கள். மலை உச்சியில் உள்ள பாறை அருகே சுனையில் நீர் உள்ளது. அந்தப் பாறையில் நீர் விட்டுத் தேய்த்தால் மஞ்சள் நிறத்தில் ஆகிவிடுகிறது. இந்த இடம் வள்ளி மஞ்சள் தேய்த்துக் குளித்த இடம் என்கிறார்கள். சற்று கீழ் வந்தால், ஓர் இடத்தில் பாறைக்குக் கீழே சுனை ஒன்று உள்ளது. அதனை சூரியன் காணா சுனை என்கிறார்கள். வள்ளி முருகனுக்காக தேனும் தினையும் கொடுத்தாள். முருகன் அதனை வேகவேகமாக உண்டான். திடீரென அவனுக்கு விக்கல் எடுத்தது. வள்ளி தண்ணீர் கொடுத்தாள். ஆனால் முருகனோ, சூரியன் காணாத நீர் வேண்டும் என்றான். எனவே வள்ளி இந்தச் சுனையில் இருந்து நீர் எடுத்துக் கொடுத்தாளாம்.
முருகன், வள்ளியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கே நம்பிராஜன் வந்துவிட்டார். இதனால் அவரிடம் இருந்து தன்னை மறைத்துக் கொள்ள முருகன் வேங்கை மரமாக மாறி நின்றாராம். இந்தத் தலத்தே வேங்கை மரமே தலவிருட்சமாகத் திகழ்கிறது.
இங்கே ஓர் இடத்தில் பெரிய பாறை ஒன்று வித்தியாசமாக உள்ளது. சற்றே உற்று நோக்கினால் அது ஓர் யானையைப் போல் தோற்றம் தருகிறது. வள்ளிக்கும் முருகனுக்கும் இடையே ஒட்டுறவை ஏற்படுத்த, அண்ணன் கணபதியே வந்து உதவினார். அவரே இங்கே ஒரு குன்றாகக் காட்சி தருகிறார் என்கின்றனர். இதனை யானைக் குன்று என அழைக்கின்றனர். இவற்றை எல்லாம் மலைமீது உள்ள கோயிலில் இருந்து மேலே ஏறிச் செல்லும்போது வனப்பகுதியில் நாம் காணலாம்.
மலையடிவாரத்தில் ஆறுமுகன் தனிச் சந்நிதியில் இருக்கிறார். கோயிலின் பின்புறம் பெரிய குளம் மிகத் தூய்மையாக உள்ளது. நோய் தீர்க்கும் புண்ணிய தீர்த்தமாகத் திகழ்கிறது இந்தக் குளம்.
பெரும்பாலும் கோயில்களில் தேரோட்டம் ஒரே நாளில் முடிந்துவிடும். ஆனால் இங்கே நான்கு நாட்கள் மலைப் பாதையில் சுற்றி நிலைக்கு வருகிறது. தேர் வரும் வழியில் வேடுவ மக்கள் தங்கள் வீட்டுப் பெண் வள்ளிக்கு அரிசி, வெல்லம், தானியம், காய்கறி, தேங்காய், பழம், ஆடைகளை சீதனமாகக் கொடுக்கிறார்கள். விழாவின் கடைசி நாளான மாசி பவுர்ணமி அன்று வள்ளி திருக் கல்யாணம் நடக்கிறது. அப்போது வேடுவர் குலத்தினர் தேன், தினை மாவினை மருமகனான முருகனுக்குப் படைக்கின்றனர்.
முருகன், தெய்வானை திருக்கல்யாணம் கந்தசஷ்டிக்கு மறுநாள் நடக்கிறது. ஆடிக் கிருத்திகையை ஒட்டி நான்கு நாட்கள் தெப்பத் திருவிழா நடக்கிறது.அப்போது முருகப் பெருமான் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளுகிறார்.
திருமணத் திருத்தலம்: வள்ளியை மணமுடிக்க விரும்பிய முருகன், முருகனையே மணாளனாக வரித்த வள்ளி இருவருமே இங்கே தங்கள் மனம் ஒப்பி கடிமணம் புரிந்து கொண்டனர் என்பதால் இந்தத் தலம் திருமணத் திருத்தலமாகவே திகழ்கிறது. திருமண வரம் வேண்டி இங்கே முருகப் பெருமானை அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். தேனும், தினை மாவும் படைக்கிறார்கள். முருகனை கணவனாக அடைய விரும்பி, இங்கே திருமாலின் பாதத்தை வழிபட்டாள் வள்ளி. இதனால் இங்கே பக்தர்களுக்கு ஜடாரி சேவையும் உண்டு.
இருப்பிடம்: வேலூர்-பொன்னை வழி. வேலூரில் இருந்து சோளிங்கர் வழியாக திருத்தணி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ. தொலைவு.
தரிசன நேரம்: காலை 7.30-12.30, 2-6.30.
தகவலுக்கு: 04172-252295
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.