விட்டலாபுரத்தில் அருளும் விட்டலன்!
உலகம் முழுவதும் போற்றிப் பெருமை கொள்ளும் அவதாரம் திருமாலின் கிருஷ்ணாவதாரம்.
உலகம் முழுவதும் போற்றிப் பெருமை கொள்ளும் அவதாரம் திருமாலின் கிருஷ்ணாவதாரம். பாலகிருஷ்ண வடிவத்தில் தொடங்கி ஓங்கி உலகளந்த உத்தமனாய் நின்றது வரை எத்தனையோ திருவடிவங்களைக் காட்டியுள்ளான் அந்த மாயக் கண்ணன்.
அவற்றில் மிகவும் போற்றத்தக்கது "பாண்டுரங்கன்' என்ற பெயரில் மராட்டிய மாநிலத்தில் எழுந்தருளியதாகும். பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன் கோயிலில் ""விட்டோபா'' எனும் பெயரில் இரண்டு திருக்கரங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு காட்சி தருகிறான் பகவான். அவனுக்கு இணையாக அருள்பாலிக்கிறாள் ரகுமாயி.
இதேபோன்று தமிழகத்தில் விட்டலருக்காக எழுப்பப்பட்ட தொன்மையான திருக்கோயில் விட்டலாபுரத்தில் அமைந்துள்ளது. ஆனால் இங்கு வித்தியாசமாக ருக்மணி, சத்யபாமாவுடன் காட்சி தருகிறான் விட்டலன்.
சென்னை - புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திலிருந்து 13 கி.மீ. தொலைவிலும், புதுப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் விட்டலாபுரம் என்ற பெயர் கொண்ட கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் வரலாற்றுச் சிறப்பின் காரணமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது இக்கோயில்.
விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்ற செய்தியினை ஆலயத்தில் காணப்படும் கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறியலாம்.
கோயிலின் நுழைவு வாயில் முழுமையடையாத கோபுரத்துடன் விளங்குகிறது. நுழைந்தவுடன் காண்பது பலிபீடம், கொடிக்கம்பம். அடுத்து பெரிய திருவடியான கருடன் சந்நிதி. கொடிக் கம்பத்தின் அடிப்பகுதியில் "செல்வன் மகள் முத்தி சதா சேவை' என்ற கல்வெட்டு காணப்படுகிறது.
அடுத்து விட்டலன் சந்நிதி. இந்த சந்நிதியில் நுழைவதற்கு பக்கவாட்டு படிக்கட்டுகளின் வழியே மேலே செல்ல வேண்டும். மகாமண்டபம் தாண்டி கருவறையில் பாண்டுரங்கன் தனது தேவியர்களுடன் சுமார் 5 அடி உயரத்தில் காட்சி தருகிறான். இடது கையில் சங்குடன், வலது கையில் வரத ஹஸ்தமாக நின்ற நிலையில் அற்புதக் கோலம்.
அழகிய புன்னகையுடன் நெற்றியில் சந்தனத் திலகத்துடன் காட்சியளிக்கும் விட்டலரின் திருமுக தரிசனம் கொள்ளை அழகு!
திருச்சுற்றில் தென் மேற்கு மூலையில் சந்தான லட்சுமி தாயார் சந்நிதி அமைந்துள்ளது. வடக்கு திருச்சுற்றில் ஆண்டாள் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் சந்நிதி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சந்நிதி, ராமானுஜர் சந்நிதிகள் அமைந்துள்ளன.
இக்கோயிலை புதுப்பிக்கும் பொழுது கிடைத்த கல்திருமேனிகள் மற்றும் கல்வெட்டுகள் வட கிழக்கு மூலையில் பீடத்தின் மீது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
காலப்போக்கில் மிகவும் சிதைந்து, வழிபாடு சரியாக நடைபெறாத இக்கோயிலுக்கு கடந்த 2006ஆம் ஆண்டு மஹாசம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. அப்போது முதல் வைகுண்ட ஏகாதசி உட்பட அனைத்து விசேஷங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. நாம சங்கீர்த்தனப் பிரியனான விட்டலனுக்கு தினசரி வழிபாடுகள் பாகவத பெருமக்களால் நாம முழக்கத்துடன் நடைபெறுவது சிறப்பு.
அவ்வகையில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று மூலவர் திருமஞ்சனமும், ஏகாதசி சேவையும் நடைபெற உள்ளது.
பண்டரிபுரம் செல்ல முடியாத பக்தர்கள் விட்டலாபுரம் விட்டலனை வழிபட்டு பேரின்பம் அடையலாம்.
தகவலுக்கு 94451 07386/92444 84065.