முகப்பு
வெள்ளிமணி

கீதைத் தத்துவத்தை வாழ்ந்து காட்டியவர்!

ஸ்ரீமத் பகவத் கீதையில் அக்ஷரபிரஹ்ம யோக அத்யாயத்தில் 14வது சுலோகம். இதில் பார்த்தனுக்கு மனதையும் செயலையும் குறித்து கண்ணன் உபதேசம் செய்கிறான். சித்தத்தை செயலில் வைப்பவன் சிறக்கிறான் என்பதை வெளிப்படுத்த

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

ஸ்ரீமத் பகவத் கீதையில் அக்ஷரபிரஹ்ம யோக அத்யாயத்தில் 14வது சுலோகம். இதில் பார்த்தனுக்கு மனதையும் செயலையும் குறித்து கண்ணன் உபதேசம் செய்கிறான். சித்தத்தை செயலில் வைப்பவன் சிறக்கிறான் என்பதை வெளிப்படுத்த, கண்ணன் கூறுகிறான்... ""பார்த்தா, வேறு எதிலும் சித்தத்தை வைக்காதவனாக, எவன் என்னை எந்நாளும் இடைவிடாமல் எண்ணுகின்றானோ, அந்த நித்யயுக்தனாகிய யோகிக்கு நான் எளிதில் அடையக் கூடியவன்'' என்கிறார்.

 ஒருமைப்பட்ட மனத்துடன் தியானித்தால் அவனைத் தவிர வேறு எதுவும் குடிபுகாத உள்ளத்தில், உடலால் ஏற்படும் சுகதுக்கங்கள் பாதிக்காது. அவன் இறைவன் முழுவதும் குடியேறிய உள்ளத்தினன் ஆவன் என்பது விளங்கும்.

 ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் இவ்வாறே சிறந்த தியானத்தால் வாழ்ந்து காட்டியவர்.

 ஒரு முறை அவர் நோயுற்றிருந்தபோது சசாதர பண்டிதர் அவரைப் பார்த்து, ""ஸ்வாமி தாங்கள் யோகசக்தியால் ஏன் நோயை குணப்படுத்திக் கொள்ளக் கூடாது'' என்று கேட்டார்.

 அதற்கு ராமகிருஷ்ணர், ""பகவானுக்கு என்றே அர்ப்பணம் பண்ணிவிட்ட மனத்தை இந்த அற்ப உடலின் பொருட்டு எப்படி நான் திசைதிருப்புவேன்?'' என்று கேட்டார்.

 ஆனால், ""வியாதியைத் தீர்த்தருள வேண்டும் என்று சர்வேஸ்வரியிடமாவது நீங்கள் பிரார்த்தனை செய்யக்கூடாதா'' என்று கேட்டார் சசாதரர்.

 அதற்கு ஸ்ரீராமகிருஷ்ணர், ""சர்வேஸ்வரியை நினைத்துவிட்டால் எனது ஸ்தூல சரீரம் ஞாபகம் இல்லாது போகின்றது. அப்போது நான் அந்தச் சரீரத்தில் இருப்பதில்லை. ஆதலால் சரீரத்தைப் பற்றிய ஒன்றையும் பிரார்த்தித்துக் கேட்கக் கூடாதவனாக நான் இருக்கிறேன்'' என்று பதிலளித்தார்.

 தன்னுடைய இந்த பதிலை வைத்தே, அவர் தன் சீடர்களுக்கு உபதேசம் நல்கும்போது, ""மனமே! உடலும் அத்துடன் உறவாடும் நோயும் ஒன்றையொன்று விசாரித்துக் கொள்ளட்டும். நீ ஜகன்மாதாவையே நாடியிரு'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.