முகப்பு
வெள்ளிமணி

பள்ளி எழுச்சியின்  காரணம்! 

உடம்போடு கூடிய எல்லா உயிர்களுக்கும் எல்லையிருப்பதால் அசைவும், அசைவிருப்பதால் களைப்பும், களைப்பினால் உறக்கமும், உறங்குவதால் விழிப்பும் உள்ளன.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:05 AM
பகிர்:

உடம்போடு கூடிய எல்லா உயிர்களுக்கும் எல்லையிருப்பதால் அசைவும், அசைவிருப்பதால் களைப்பும், களைப்பினால் உறக்கமும், உறங்குவதால் விழிப்பும் உள்ளன.
 ஆனால் சிவபரம்பொருளுக்கு எல்லையில்லை; அசைவாகிய துளக்கம் இல்லை; களைப்பில்லை; உறக்கமில்லை; ஆதலின் விழிப்பும் இல்லை;
 திருநாவுக்கரசர் சிவபெருமானை "தூங்கான் துளங்கான்' என்றும், "உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி' எனவும் துதிக்கிறார். உறக்கம் என்பதே இல்லாததால் இறைவனுக்கு விழிப்பும் இல்லை. ஒருபோதும் உறங்காமையால் சிவபரம்பொருள் என்றும் விழித்திருக்கும் தன்மை உடையது. இவ்வாறு எஞ்ஞான்றும் விழித்திருக்கும் சுத்த அறிவேயான சிவபெருமானுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுவதன் காரணம் என்ன?
 அறியாமை உறக்கம் அறவேயில்லாத அறிவேயான சிவபெருமானது விழிப்பு நிலையை, அதாவது ஒருபோதும் உறங்காத சுத்த அறிவு நிலையை இருவிதமாகக் கூறலாம். அவை சாட்சி ஜாக்ரதம், கருணா ஜாக்ரதம் என்பன.
 பெறுதற்கரிய மனிதப் பிறவி பெற்ற உயிர்கள் புரியும் நல்வினை, தீவினைகளுக்கும் அவ்வினைகளின் பயனாகத்தான் அவ்வுயிர்களுக்கு வழங்கும் இன்ப துன்ப அனுபவங்களுக்கும் சாட்சியாக மாத்திரம் இருக்கும் இறைவனது ஞான நிலையாகிய விழிப்பினை சாட்சி ஜாக்ரதம் எனவும், சாட்சி மாத்திரமான தனது விழிப்பு நிலையிலிருந்து கருணை விழிப்பு கொண்டு இறைவன் உயிர்களுக்கு திருவருள் செய்வதை "கருணா ஜாக்ரதம்' எனவும் கூறலாம்.
 ""சாட்சி மாத்திரமாக இருக்கும் நினது ஞான விழிப்பு நிலையிலிருந்து கருணை விழிப்பு கொண்டு நின்னை நாடி வந்த உயிர்களுக்கு திருவருள் புரிவாய்'' என மாணிக்கவாசகர் உறங்காதிருக்கும் பரம்பொருளைப் போற்றிப் பரவுகிறார்.
 அறியாமை உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் உயிர்கள் விழித்தெழுந்து அன்பினால் அகம் உருகி அநகனாகிய சிவபெருமான் திருநாமங்களை எஞ்ஞான்றும் நவின்று ஏத்துதற்காக மணிவாசகப் பெருமான் திருவெம்பாவை பாடியருளினார். உயிர்கள் உய்யும் பொருட்டு திருவெம்பாவை பாடியருளிய மணிவாசகப் பெருமான், ""அறியாமை உறக்கம் நீங்கித் திருவருள் பெறும் பொருட்டு நின்னை நாடி வந்தோர்க்கு எம்பெருமானே பள்ளியெழுந்து திருவருள் புரிவாய்'' எனச் சிவபெருமான் உயிர்களை உய்யக் கொள்ளும் பொருட்டு அப்பெருமானுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுகிறார்.
 சிவபெருமான் உயிர்களுக்குத் திருவருள் புரியும் வரை அவனது சாட்சியான விழிப்பும் உலகினுக்கு ஏற்ப ஒரு வகையில் உறக்கமாகக் கொள்ளப்பட்டிருக்கிறது போலும். ஆதலின் உறங்காத பேருணர்வாகச் சிவபரம்பொருள் விளங்குவதை உணர்ந்த மணிவாசகரும் "எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே' எனத் திருப்பள்ளியெழுச்சி பாடியுள்ளார்.
 ""சாட்சியாக நோக்கும் சிவபெருமானே! உயிர்களாகிய எம்மைக் கருணையோடு நோக்கியருள்வாயாக'' என்பது திருப்பள்ளியெழுச்சியின் அரும் பொருளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.