வெள்ளிமணி

கூன்பாண்டியன் சைவத்துக்கு மாறிய வரலாறு!

அரிமர்த்தன பாண்டியனுக்குப்பிறகு அவன் வம்சத்தில் வந்த கூன் பாண்டியன் என்ற மன்னன் மதுரையை மிகச் சிறப்பாக......

தினமணி

அரிமர்த்தன பாண்டியனுக்குப்பிறகு அவன் வம்சத்தில் வந்த கூன் பாண்டியன் என்ற மன்னன் மதுரையை மிகச் சிறப்பாக ஆண்டு வந்தான். அவன் வலிமையை கண்டு அஞ்சி ஏனைய சேர சோழ மன்னர்கள் அவனுடன் சமாதானமாக இருந்து வந்தனர். சோழ மன்னன் தன் புதல்வியான மங்கையர்க்கரசி என்பவளை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தான். ஏராளமான சீர்வரிசைகளோடு குலச்சிறை என்ற பெயருடைய சகல சாஸ்திரங்களையும் பழுதறக் கற்றுணர்ந்த அறிஞரையும் அமைச்சராக விளங்கும்படி அனுப்பி வைத்தான்.

வைதீக சைவ சமயத்தைப் போற்றி அதன்படி ஒழுகி வந்த கூன் பாண்டியனுக்குத் திடீரென்று சமண மதத்தின் மீது பற்றுதல் ஏற்பட்டு சமண மதத்தைத் தழுவினான். அரசன் எவ்வழியோ, அவ்வழியே நாட்டு மக்களும் என்பதற்கு ஏற்ப பாண்டிய நாட்டு மக்களும் சமணத்திற்கு மாறினர். இதுகண்டு சமண மதத் தலைவர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. ஆனால் அரசியார் மங்கையர்கரசிக்கும் அமைச்சர் குலச்சிறையாருக்கும் அரசனின் இந்த நிலை கண்டு, மிக மிக வருத்தம். அரசனுக்கு நேரில் விபூதியணிந்து வர முடியாத நிலை. இதனால் மிகவும் துன்பப்பட்ட அவர்கள், சோமசுந்தரக் கடவுளை தினந்தோறும் உள்ளமுருகப் பிரார்த்தித்து வந்தனர். பாண்டிய மன்னனை மீண்டும் சைவ நெறிக்கே திரும்பி வரச் செய்ய வேண்டும் என்று.

இந்த நிலையில் சிதம்பரத்திலிருந்து மதுரைக்குச் சென்று அங்கே சோமசுந்தரக் கடவுளை வணங்கிக் கொண்டிருந்த ஓர் அந்தணர் வாயிலாக திருஞானசம்பந்தரைப் பற்றி அறிந்து கொண்டனர். அரசியாரும் குலச்சிறையாரும் திருமறைக்காட்டில் எழுந்தருளிய திருஞானசம்பந்தருக்கு இறைவன் தேவியோடு காட்சி தந்தது, தேவி பொற்கிண்ணத்தில் பால் சுரந்து குழந்தை ஞான சம்பந்தரரை பசியாற்றியது, இறைவன் திருவருளால் பொற்கிண்ணமும் முத்துப்பல்லக்கும் பெற்றது போன்ற பல அற்புதங்களை அந்த அந்தணர் மூலம் அறிந்தவுடன் அவர் (திருஞான சம்பந்தர்) மதுரைக்கு வந்து ஏதாவது அற்புதம் நிகழ்த்தி பாண்டியனது மனதை மாற்ற மாட்டாரா என்று ஏக்கம் கொண்டனர். உடனே தக்க ஏவலரை அனுப்பி வேதாரண்யத்திலிருந்து திருஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து வர அனுப்பினர்.

அவர்களும் விரைந்து சென்று ஞானசம்பந்த பெருமானிடம் மதுரையில் சமணர் செய்யும் அட்டூழியங்களை விவரித்து மதுரைக்கு அவர் வரவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்கள். உடனே ஞான சம்பந்தர் மதுரை புறப்படத் தயாரானபோது அவருடனிருந்த அப்பர் பெருமான் ஞானசம்பந்தரை நோக்கி, "நீரோ இளம் வயதுடையவர். அந்தச் சமணர்களோ பழி பாவங்களுக்கு அஞ்சாதவர்கள். இப்பொழுதோ நாளும் கோளும் நல்ல நிலையில் இல்லை!'' என்று கூறி அவரைப் போக விடாமல் தடுக்கப்பார்த்தார். அப்பொழுதுதான் திருஞான சம்பந்தபர் ""வேயுறு தோளி பங்கன், விடமுண்ட கண்டன்'' எனத்துவங்கும் மிகப்பிரசித்தி பெற்ற நவக்கிரகப் பதிகத்தைப் பாடி அப்பரது சம்மதத்தைப் பெற்று மதுரைக்குச் சென்றார்.

மதுரையில் அவரை அன்புடன் அரசியாரும் குலச்சிறையாரும் வரவேற்றனர். சம்பந்தர் மதுரை எல்லையை அடைந்ததுமே எண்ணாயிரம் சமய குருமார்களுக்கும் அவர்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான சமணர்களுக்கும் பற்பல துர்ச்சகுனங்கள் தோன்றின. சம்பந்தர் சோமசுந்தரக் கடவுளின் ஆலயத்திற்குச் சென்று சூதுவாது நிரம்பிய சமணர்களை எதிர்த்து வாதம் செய்து வெல்லும் வல்லமையை வேண்டி இறைவன்பால் திருப்பதிகம் ஒன்று பாடினார். பின் தன் அடியார்களுடன் அங்கிருந்த மடம் ஒன்றில் இரவு தங்கினார்.

இதற்கிடையே மதுரை வந்த சம்பந்தரைப்பற்றி பல இல்லாதது பொல்லாதது கூறி பாண்டியனிடம் முறையிட்டனர் சமணர்கள். அவர் தங்கியிருக்கும் திருமடத்தில் தீப்பிடிக்க அபிசார மந்திரம் ஜெபித்தனர். அதில் எந்தப் பயனும் இல்லாது போகவே தாங்களே இரவில் மடத்திற்குத் தீ வைத்தனர். மடம் தீப்பற்றி எரிவதைக் கண்ட சம்பந்தர் துளியும் பதறாது ஒரு பதிகம் பாட மடத்தில் தீ அணைந்து, அந்த நெருப்பு பாண்டியனை வெப்பு நோயாகப் (ஜுரம்) பற்றியது!

பாண்டியனைப் பற்றிய வெப்பு நோய் அவன் அணிந்திருந்த ஆபரணங்களையும் நீறாக்கிப் பூசிய சந்தனமும் தரித்த மாலையும் வெந்து கருகத் துடித்தான் மன்னன். பின்பு சமணர்கள் தங்கள் தவவலிமையை காட்டி மயிற் பீலிகையால் மன்னன் உடலை வருட அந்த மயிற்பீலிகைகள் யாவும் வெப்பத்தால் வெந்து நீறாயின! அரசியார் திருஞான சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்குச் செய்த தீங்கினால்தான் இந்தச் சுரம் வந்துள்ளது, அவர் வந்தாலொழிய இது தீராதென்று உறுதியாகக் கூற மன்னன், "அவர் என் சூலை நோயைப் போக்கிவிட்டால் சமணத்தை விட்டொழிப்பேன். அவரை அழைத்து வருவீர்'' எனக் கட்டளையிட்டான்.

அரசியார் நேரில் சென்று சம்பந்தரை வணங்கி விஷயத்தைக் கூற அவரும் அரண்மனை வந்து சேர்ந்து "மந்திரமாவது நீறு' என்ற திருப்பதிகத்தைப் பாடி மன்னன் உடலில் திருநீறு பூச (முதலில் உடலின் வலது பாகம், பின்பு இடது பாகம்) மன்னனின் வெப்பு நோய் நீங்கியது. மன்னன் பலமுறை சம்பந்தரைப் பணிந்து தன் நன்றியைத் தெரிவித்தான்.

பின்பு சமணர்கள் சம்பந்தரை வெல்லத் தங்கள் அனல் வாதம், புனல் வாதம் என்ற இரு வாதங்களுக்கு அவரை அழைத்தனர்.

சமணர்கள் பெரு நெருப்பை மூட்டினர். சம்பந்தர் தான் பாடிய தோவாரத் திருமுறையில் கயிறு சாத்தி, "போகமார்த்த' என்ற திருப்பதிக ஏட்டை எடுத்து "தளரிள வளரொளி' என்ற பதிகத்தைப் பாடி நெருப்பில் இட்டார். அது வேகாமல் விளங்கியது! சமணர்கள் தங்கள் ஏடுகளை நெருப்பில் இட, அவை வெந்து சாம்பலாயின! அனல் வாதத்தில் தோற்ற சமணர்கள் உடனே புனல் வாதம் தொடங்கினர். தோற்றவர் கழுவேறுவது என்றும் முடிவெடுத்தனர். சம்பந்தர் அதற்கும் உடன்பட்டார்.

வைகை ஆற்றின் நீரில் சமணர்கள் தங்கள் ஏடுகளை இட, அவை வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டன! பின்பு சம்பந்தர் தன் ஏட்டை இட, அது நீரை எதிர்த்து வந்தது! குலச்சிறையார் ஓடி அவ்வேட்டை எடுத்த இடம் திருவேடகம் என்று அழைக்கப்பட்ட இடம். மும்முறையும் தோற்ற சமணர்கள் தங்கள் பந்தயப்படி கழுவேறி மாய்ந்தனர். பாண்டிய மன்னனின் வெப்பு நோய் நீங்கியதுமல்லாமல் அவன் கூன் நிமிர்ந்து நின்ற சீர் நெடுமாறன் ஆயினன்! பின்பு சைவத்தை ஏற்று ஆட்சி புரியலானான்.

பழனி திருப்புகழ் "மூலமந்திர மோதலிங்கிலை' என்று துவங்கும் பாடலில் "பீலி வெந்துய ராவி...... தீர வஞ்சகர் மீறு வெங்கழுவேற...'' என்ற வரிகளில் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.

- மயிலை சிவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT