உத்ராஞ்சல் மாநிலம், ஹரித்வாரில் அமைந்துள்ளது குமாரி தேவியின் ஆலயம். அன்னையின் உடற்கூறுகளில் வலது தோள் பட்டை விழுந்த தலமாகக் கருதப்படும் இது, சக்தி பீட வரிசையில் 18வது பீடமாகத் திகழ்கிறது. இங்கே மகாசக்தி பீட நாயகி குமாரி என்றும், úக்ஷத்திரபாலகர் பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
அயோத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரகா என்று புராணங்கள் புகழும் ஏழு மோட்சத் தலங்களில் மூன்றாவதாகக் கூறப்படும் மாயா எனும் மாயாபுரம், இன்றைய ஹரித்வாரின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. இந்தத் தலத்தில் நிகழ்ந்த வரலாற்றுக் கதைகளுள் ஒன்று... கபில முனிவர் ஹரித்வாரில் தவம் புரிந்து கொண்டிருந்தார். அப்போது சகரர்கள் (சூரிய குல அரச குமாரர்கள்) அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினர். அவர்களது யாகக் குதிரையை தேவேந்திரன் பிடித்து கபில முனிவரது ஆசிரமத்தின் பின்புறம் கட்டி வைத்தான். சகரர்கள் குதிரையைத் தேடி அலைந்தபோது, கபில முனிவர்கள்தான் குதிரையை எடுத்து வந்திருக்க வேண்டும் என எண்ணிய சகரர்கள், அவரைத் துன்புறுத்தினர். இதனால் சினமடைந்த முனிவர், தனது தவ பலத்தால் சகரர்கள் எல்லோரையும் எரித்துச் சாம்பலாக்கினார்.
தங்கள் மூதாதையர்களான சகரர்கள் முக்தி அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் பகீரதன் நெடுந்தவம் புரிந்து, கங்கையை ஆகாய மார்க்கமாக பூமிக்குக் கொண்டு வந்தான். அப்போது கங்கையின் வேகத்தைத் தாங்கிக் கொள்ளுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டான். ஆர்ப்பாட்டத்தோடு சீறிப் பாய்ந்த கங்கையைத் தன் சடை முடியில் தாங்கினார் சிவபெருமான். பிறகு, பகீரதனின் விருப்பப்படி சகரர்கள் இறந்து கிடந்த இடத்தில் கங்கை வெள்ளமாகப் பாய்ந்தாள்.
இப்போது ஹரித்வாரில் கங்கை பாயும் பகுதியே, சகரர்கள் சாம்பலாகிக் கிடந்த இடம். கபில முனிவரின் ஆசிரமம் இருந்ததாகக் கருதப்படும் பகுதி, கபில ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. கங்காசாகர் என்று கூறப்படும் இடத்தில்தான் சகரர்கள், கங்கையின் வரவால் முக்தி பெற்றனராம்.
அன்னையின் வலது தோள் பட்டை வீழ்ந்ததாகக் கருதப்படும் காளி கோயில், பீம் கோடாகுண்ட் குளத்துக்கு அருகில் ரயில் பாதையை ஒட்டி உள்ளது. இது மலைச்சரிவில் காணப்படும் மிகவும் பழைமையான குகைக் கோயில். இதன் கருவறை நாயகி மிகவும் சக்தி வாய்ந்தவள். குமாரி அன்னையை இங்கே காளி தேவி என்றே மக்கள் போற்றி வழிபடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.