முகப்பு
வெள்ளிமணி

தவறுகளை திருத்திக் கொள்வோம்!

ஒரு விஷயத்தை நன்றாகச் செய்ததற்காக, மற்றவர்கள் நம்மைப் பாராட்டும்போது அதை ஏற்றுக்கொள்கிறோம். அந்தப் பாராட்டைப் பெற நாம் தகுதியானவர் என்றும் நினைக்கிறோம்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:35 PM
பகிர்:

ஒரு விஷயத்தை நன்றாகச் செய்ததற்காக, மற்றவர்கள் நம்மைப் பாராட்டும்போது அதை ஏற்றுக்கொள்கிறோம். அந்தப் பாராட்டைப் பெற நாம் தகுதியானவர் என்றும் நினைக்கிறோம். அதேபோல், தவறு செய்துவிடும்போதும் அதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். அதைத் தெரியாமல் செய்திருந்தாலும், அல்லது அதை மற்றவர்கள் கவனிக்காமல் போயிருந்தாலும், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்வதற்கு நமக்கு மனத்தாழ்மை தேவை. ஏனென்றால், ""ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.'' (ரோமர் 14:12) என்ற வசனத்தின்படி, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய செயல்களுக்காகக் கடவுளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது.

தவறு சிறிதாக இருக்கும்போதே நாம் அதை தெரிந்துகொண்டு திருத்திக்கொள்ள வேண்டும். தவறுகள் தொடரும்போது அது பழக்கமாக மாறி நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. 

தன் மகனின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட தவறான மாற்றத்தை கண்டறிந்த அவனின் தந்தை, தன்னுடைய வயது முதிர்ந்த தந்தையிடம் அனுப்பி வைத்தார். ""இவன் என்ன சொன்னாலும் சில பழக்க வழக்கங்களை மாத்தவே மாட்டேங்கிறான். நீங்க தான் அவன திருத்தணும்''  என்று தன் தந்தையிடம் சொன்னார். தாத்தாவைப் பார்த்ததும் அந்த சிறுவனுக்கு மிகுந்த சந்தோஷம். 

தாத்தா ஒரு நாள் அவனை ஒரு காட்டுக்கு அழைத்து போனார். அங்கு இருந்த ஒரு சிறிய செடியை பிடுங்க சொன்னார். உடனே ரொம்ப சுலபமா பிடிங்கி விட்டான். அப்புறம் கொஞ்சம் பெரிய செடியை பிடுங்க சொன்னார். கொஞ்சம் முயற்சி பண்ணி பிடுங்கினான். இன்னும் கொஞ்சம் பெரிய புதர் மாதிரி இருந்ததை பிடுங்க சொன்னார். ரொம்ப கஷ்டப்பட்டுப் பிடுங்கினான். அதற்குள் அவன் மிகவும் களைத்து போனான் . அப்புறம் ஒரு பெரிய மரத்தை காட்டி, அதை பிடுங்க சொன்னார். ஆனால் அவன் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. ""என்னால முடியாது தாத்தா'' என்று சொல்லிவிட்டான். தாத்தா சொன்னார், ""இதோ பாரு, இப்படித்தான் உன்கிட்ட இருக்குற சில கெட்ட பழக்க வழக்கங்களையும் மாத்திக்கணும். அது சுலபமா போய்விடும். அந்த கெட்டப் பழக்கங்கள் வளர்ந்த பெரியதாக மாறிவிடும்போது அதில்  இருந்து விடுபடுவது ரொம்ப கஷ்டம். விலகவும் முடியாது. உன் அப்பா சொல்ற மாதிரி கேட்டு நடந்தேன்னா, நீ நல்லா இருப்பே'' ன்னு சொன்னார். பையனும் அவங்க அப்பா சொன்ன மாதிரி கெட்ட பழக்கவழக்கங்களை மாற்றி நல்லவனாய் வாழ்ந்தான். திறமையான மனிதனாய் மாறினான்.

தேவன் ஓர் இரக்கமுள்ள அப்பாவைப் போல இருக்கிறார். தவறுகளை அவர் பார்க்கும் விதமாக அவருடைய பிள்ளைகளாகிய நாமும் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். (சங்கீதம் 130:3) நாமும் நம்மிடம் உள்ள தவறுகளைத் திருத்திக் கொள்வோம் சிறப்பாக வாழ்வோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.