வெள்ளிமணி

முதல் கிறிஸ்துமஸ் குடில்!

கிறிஸ்துமஸ் என்றாலே கொண்டாட்டம், உற்சாகம், சந்தோஷம்தான். வண்ண வண்ண விளக்குகள், மின்னிடும் நட்சத்திரங்கள்,

DIN

கிறிஸ்துமஸ் என்றாலே கொண்டாட்டம், உற்சாகம், சந்தோஷம்தான். வண்ண வண்ண விளக்குகள், மின்னிடும் நட்சத்திரங்கள், குழந்தை இயேசுவின் பிறப்பைச் சித்தரிக்கும் வண்ணமாய் அமைக்கப்படும் கிறிஸ்துமஸ் குடில்கள், பரிசுகளைச் சுமந்து வரும் கிறிஸ்துமஸ் தாத்தா, சுவைமிக்க கேக் வகைகள், கண்ணைக் கவரும் கிறிஸ்துமஸ் மரங்கள் என்று சிறுவர்களும் பெரியோர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டாடும் மகிழ்ச்சிப் பெருவிழா.
கிறிஸ்துமஸ் அலங்கரிப்பில் முக்கிய இடம் வகிப்பது கிறிஸ்துமஸ் குடிலாகும். முதன் முதலாக இவ்வாறு குடில் அமைக்கும் வழக்கம் எங்கு, யாரால் ஏற்படுத்தப்பட்டது? பிரான்ஸிஸ்கன் துறவறச் சபையை ஏற்படுத்திய ஐந்து காய பிரான்ஸிஸ் என்று அழைக்கப்படும் புனித பிரான்ஸிஸ் அசிசி என்பவர்தான் முதன் முதல் கிறிஸ்துமஸ் குடிலைச் செய்தார்.
1223 -ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸýக்கு முந்தைய நாள் மாலை இயேசுவின் பிறப்பு விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்து இத்தாலி நாட்டில் உள்ள கிநேச்சியோ என்ற ஒரு சிறிய கிராமத்தைத் தேர்ந்தெடுத்தார். இந்த கிராமத்தின் அமைதி, சாந்தம், எளிமை மற்றும் ஏழ்மை, ஜெபம் செய்யச் தூண்டுவதாகவும் தியானம் செய்ய ஏற்ற இடமாகவும் அமைந்திருந்ததே இதற்குக் காரணம். மூவுலகின் அதிபதியான இயேசு கிறிஸ்து தன் பிறப்புக்கு ஓர் எளிய மாட்டுக் கொட்டகையை தேர்ந்தெடுத்துக் கொண்டதை நினைவு கூர ஏற்ற இடமாக இக்கிராமம் அமைந்திருந்தது. பிரான்ஸிஸ் அசிசிக்கு ஜான்வெலிட்டா என்று அழைக்கப்பட்ட நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். கிநேச்சியாவில் அவருக்கு சொந்தமான ஒரு மலைப்பகுதியில் நிறைய குகைகள் இருந்தன. எனவே, இவர் வெலிட்டாவிடம், " இவ்வருடம், நான் உம்முடன் சேர்ந்து கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட நினைக்கிறேன். எனவே, பெத்லகேமில் ஆண்டவர் இயேசு பிறந்த மாட்டுக் கொட்டிலை நினைவூட்டும் விதமாக இந்த குகைகளுள் ஒன்றில் ஓர் உண்மையான தீவனத்தொட்டியை அமைத்து, அதில் வைக்கோல் இட்டு, பாலன் இயேசுவுடன் இருந்ததுபோல ஓர் எருதையும் கழுதையையும் அங்கு கட்டி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சிநேச்சியாவில் இருந்த மக்களும் துறவிகளும் தீவட்டிகளுடனும் மெழுகு திரிகளுடனும் வளைந்து, வளைந்து செல்லும் மலைப்பாதையில் மாட்டுத்தொழுவம் அமைக்கப்பட்டிருந்த இடத்தை அடைந்தனர். துறவிகளின் பாடல்கள், பாறைகளுடன் பட்டு எதிரொலித்தன. திருப்பலி நிறைவேற்றிய குருவானவர் அன்று மனநிறைவோடு நிறைவேற்றியதாகச் சான்று பகர்ந்தார்.
தீவனத்தொட்டியில் கிடத்தப்பட்டிருந்த "குழந்தை இயேசு' கண் விழித்து பிரான்ஸிசைப் பார்த்து புன்முறுவல் பூத்ததை ஜான் வெலிட்டா கண்டதாக "பிரான்ஸிசின் முதல் வாழ்க்கை வரலாறு' என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.
பதினான்காம் நூற்றாண்டில் இந்த இடத்தைச் சுற்றி ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த திருத்தலத்திற்கு இத்தாலி, அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா, ஸ்பெயின் ஜெர்மனி, கனடா மற்றும் கொரியா நாடுகளிலிருந்து திருப்பயணம் மேற்கொள்வோர் அநேகர்.
குழந்தை இயேசுவின் தீவனத் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த வைக்கோலை நம்பிக்கையோடு தொட்ட எண்ணற்ற நோயாளிகளும் கால்நடைகளும் கூட குணமடைந்துள்ளதாக வரலாறு சான்று பகர்கிறது. "அற்புத குணமாக்கும் வைக்கோல்' மிகுந்த அக்கறையுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதன்பின்பு, வருடந்தோறும் குடில் அமைக்கப்பட்டு இயேசு பாலன் பிறப்பு மிகுந்த பக்திப் பெருக்கோடு விமரிசையுடன் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
- பிலோமினா சத்தியநாதன்


 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு - சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் இவர்கள்: தினப்பலன்கள்!

இரு மதுக் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சி

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

SCROLL FOR NEXT