வெள்ளிமணி

மேவும் குர்ஆனில் மேயும் கால்நடைகள்

உலகம் உருவானது மனிதர்களுக்காக இறைவன் பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான் என்று 16-12 ஆவது குர்ஆன் வசனம் கூறுகிறது.

DIN

உலகம் உருவானது மனிதர்களுக்காக இறைவன் பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான் என்று 16-12 ஆவது குர்ஆன் வசனம் கூறுகிறது. மனிதன் வாழ வளங்களை அமைத்தது பற்றி வான்மறை குர்ஆனின் 31-10 ஆவது வசனம் வானங்களைத் தூண்கள் இல்லாமல் படைத்து மனித நடமாட்டத்தில் அசையாதிருக்க உயர்ந்த மலைகளை செய்தவன் இறைவன் என்று இயம்புகிறது. கால்நடைகளின் பயனைப் பகர்கிறது 16-5 ஆவது வசனம், ""மனிதர்களே கால்நடைகளை உங்களுக்காக படைத்து இருக்கிறான். அவற்றில் குளிரைத் தடுக்கும் பொருள்களும் பல பயன்களும் உள்ளன.''
 கால்நடைகள் மனித பயன்பாட்டிற்காக படைக்கப் பட்டவை. மனித தேவைகளில் முதலிடம் பெறுவது உணவு, உடை, உறைவிடம். கால்நடைகளின் உரோம உடைகள் குளிரைத் தடுப்பன என்பதை எடுத்துரைக்கிறது இந்த வசனம். முற்காலத்தில் கால்நடைகளின் விலங்குகளின் தோல்கள் கூடாரங்களுக்குக் கூரை ஆயின. கூடாரத்தைச் சுற்றி சுற்று சுவர் போல் கட்டியும் பயன்படுத்தினர் அக்கால மக்கள். இக்காலத்திலும் காட்டுவாசிகள் இவ்வாறு பயன்படுத்துவதைப் பார்க்கலாம். கால்நடைகள் நிலத்தை உழ, நீர் இறைக்க பயன்படுகின்றன. மேலும் கால்நடைகள் பால் தருகின்றன. அவற்றின் அசைவ உணவு சத்துள்ளது. மேலும் இக்கால்நடைகளின் பயன்களை விரிவாக விளக்குகிறது 16-80 ஆவது வசனம்.
 ""அல்லாஹ் உங்களுக்கு நிம்மதி தருவதாக உங்களுடைய வீடுகளை அமைத்தான். கால்நடைகளின் தோல்களால் அவ்வீடுகளை அமைக்க கால்நடைகளைப் படைத்தான். பயணத்திலும் பயணத்தில் தங்கும் சமயத்திலும் எளிதில் சுமந்து செல்ல ஏற்றதாக அவை உள்ளன. பற்பல பொருள்களைத் தயாரிப்பதற்கு அவற்றின் கம்பளி, உரோமம், முடி ஆகியவற்றையும் உங்களுக்காகப் படைத்திருக்கிறான். அவைகளாலான பொருள்கள் சில காலம் வரை உங்களுக்குப் பயன்படும்'' அல்லாஹ் கால்நடைகளை நீங்கள் சவாரி செய்வதற்காகவும் புசிப்பதற்காகவும் படைத்தான் என்று 40-79 ஆவது வசனம் பகர, 16-66 ஆவது வசனம் கால்நடைகளின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும் ரத்தத்திற்கும் இடையிலிருந்து அருந்துபவர்களுக்கு இனிய தூய பாலைப் புகட்டுவதாக புகல்கிறது.
 வானங்களையும் பூமியையும் படைத்தவன் உங்கள் இனத்திலிருந்தே இணைகளையும் விலங்குகளிலிருந்து அவற்றின் இணைகளையும் படைத்து பரவ செய்ததை 42-11 ஆவது வசனம் செப்ப, 39-6 ஆவது வசனம் உங்களுடைய நன்மைக்காகவே எட்டு வகை கால்நடைகளை ஜோடி ஜோடியாக படைத்திருப்பதைப் பகர்கிறது. எட்டு வகை கால்நடைகள், வெள்ளாடு, வெள்ளாட்டு கிடா, செம்மறியாடு, செம்மறியாட்டு கிடா, பசு, காளை, பெண் ஒட்டகம், ஆண் ஒட்டகம், குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறி செல்ல உங்களுக்கு அலங்காரமாக படைத்திருக்கிறான் அல்லாஹ் என்று 16- 8 ஆவது வசனம், கழுதை, கோவேறு கழுதை, குதிரை வாகனங்களாகப் பயன்படுவதைப் பகர்கிறது. கணினி யுகமான அலை வரிசையில் ஆர்ப்பரிக்கும் இக்காலத்திலும் மலைப் பகுதிகளில் இக்கால்நடைகள் வாகனங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இணைகளைப் படைத்து நீங்கள் சவாரி செய்கிற விலங்குகளையும் கப்பல்களையும் உங்களுக்காக அல்லாஹ் ஆக்கியதை அறிவிக்கிறது 43-12 ஆவது வசனம். நீரில் செல்ல கப்பல்களைக் கட்ட மனிதனுக்குக் கற்பித்த அல்லாஹ் நிலத்தில் செல்ல கால்நடைகளைப் படைத்திருக்கிறான்.
 வட அரேபியாவில் ஹிஜாஸின் மத்திய பாகங்களில் வாழ்ந்த தமூத் இனத்தினர் ஸôலிஹ் நபியிடம் கற்பாறையிலிருந்து ஒட்டகம் தோன்ற இறைவனிடம் இறைஞ்ச வேண்டினர். ஸôலிஹ் நபி இறைவனை இறைஞ்ச நிறை கர்ப்பமாய் தோன்றிய ஒட்டகம் குட்டியையும் ஈன்றது. ஒருநாள் விட்டு ஒருநாள் கிணற்று நீரை ஒட்டகத்திற்கு ஒதுக்கிவிட்டு அதேமுறையில் ஒருநாள் விட்டு ஒருநாள் தமூத் இனத்தினர் நீரைப் பயன்படுத்த ஒப்பு கொண்டனர். ஒட்டகம் அதன்முறை வரும் நாளில் ஒரே உறிஞ்சில் கிணற்று நீர் முழுவதையும் குடித்துவிடும். இதனால் பொறாமை கொண்ட தமூத் கூட்டத்தினர் ஒட்டகத்தை வெட்டினர். இறை கட்டளையை மீறிய தமூத் இனம் நிலநடுக்கத்தில் அழிந்ததை அறிவிக்கிறது இந்த வசனம்.
 யூசுப் நபி வரலாற்றைக் கூறும் வான்மறை வசனங்களில் ஒன்றான 12-13 இல் ஓநாய் ஆடுகளைச் சாப்பிடுவது குறிப்பிடப் படுகிறது. மூசா நபி காலத்தில் தௌராத் வேதம் கூறுவதை ஏற்காமல் புறக்கணித்து பிறவழி செல்வோரின் வஞ்ச பொருளில் வாஞ்சை கொண்டு நிச்சயமில்லா பிச்சை பொருளைப் பெற்ற பல் ஆம்பின் பாவூராவைப் பழித்துரைக்கும் 7-176 ஆவது வசனம் பல் ஆம்பின் பாவூராவை நாயுடன் ஒப்பிடுகிறது. அடித்து துரத்தினால் நாக்கைத் தொங்கவிட்டு கொண்டு ஓடும் நாய் தாக்காமல் விட்டுவிட்டாலும் நாக்கை தொங்கவிட்டுக் கொண்டு அலையும். இவ்வுதாரணம், இப்பொழுது குர்ஆன் கூறுவதைப் புறக்கணிப்பவர்களுக்கும் பொருந்தும்.
 62-5 ஆவது வசனம் தௌராத் வேதத்தை ஏற்று கொள்ளாது அவ்வேதத்திற்கு மாற்றமாய் நடந்தவர்களைக் கழுதையோடு ஒப்பிடுகிறது. அதன்மீது ஏற்றப்பட்ட பொருள் ஏடாயினும் ஓடாயினும் கூடாயினும் அவற்றின் அருமையை அறியாது பொருளைப் புரியாது சுமந்து செல்லும் கழுதையை போன்றவர்கள் ஆகமத்தை அறியாது திரிவோர். குர்ஆனைப் புறக்கணித்து பிறழ்ந்து நடப்போருக்கும் இக்கருத்து பொருந்தும் என்று தப்ஸீர் காஜின், அஹ்ஸனுத்தப்ஸீர் ஆகிய குர்ஆன் விளக்க நூல்களில் குறிப்பிடப்படுகிறது.
 இத்தகு பயன்தரும் கால்நடைகளைக் கவனிக்க கண்ணிய நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகள், கால்நடைகளின் முகத்தில் அடிக்க வேண்டாம். முகத்தில் அடையாள சூடு போட வேண்டாம் அறிவிப்பவர்- ஜாபிர் (ரலி) நூல்- முஸ்லிம். நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால் ஒட்டகங்களுக்கு அவற்றின் உணவு பங்கைப் பூமியிலிருந்து கொடுங்கள். பஞ்ச காலத்தில் நீங்கள் பயணம் செய்வீர்களாயின் அவற்றை வேகமாக ஓட்டிச் செல்லுங்கள். அறிவிப்பவர்- அபூஹுரைரா (ரலி) நூல்- முஸ்லிம். கால்நடைகள் வருந்தாது கவனமாக காப்பாற்றி பொருந்தும் வகையில் பயன் பெறுவோம். நயமிகு அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுவோம்.
 - மு.அ. அபுல் அமீன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT