வெள்ளிமணி

கணவனுக்காக காரடையான் நோன்பு!

கே. ராம்மோகன்

பெண்கள் அவர்களது மாங்கல்யம் பாக்கியம் சிறக்க அம்பாளை வழிபடும் தினங்கள் வரலட்சுமி விரதம் மற்றும் காரடையான் நோன்பாகும். "காரடையான் நோன்பு நாள்' என்பது சாவித்திரி தன் கணவன் சத்தியவானின் உயிரை எமதர்மனிடம் இருந்து மீட்ட நாளாகும்.
சிரஞ்சீவியான மார்க்கண்டேய முனிவர் பாண்டவர்களில் மூத்தவனான தர்மனுக்கு பல கதைகள் கூறிவரும்போது கற்பில் சிறந்தவளான சாவித்திரியின் கதையைக் கூறலானார். அதன்படி, மத்திர தேச நாட்டினை ஆண்ட அசுவபதியின் மகளாக பிறந்தவள் சாவித்திரி. தக்க மணப்பருவம் எய்திய தருணத்தில் தன் தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க தானே தனக்குத் தகுந்த மணமகனை தேடும்போது சால்வ நாட்டைச் சேர்ந்த ராஜகுமாரனான சத்தியவானைச் சந்திக்கின்றாள். அவனது நற்குணங்களைக் கேள்விப்பட்டும் கண்டும் அவனே தனக்குரிய மணாளன் என்று உறுதி பூண்டாள். ஆனால் நாரதர் சத்தியவானுக்கு ஆயுள் பலம் குறைவு என்று கூறியபோதிலும் தனது எண்ணத்தில் சிறிதும் மாறுபடாமல் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை இனிது நடத்தி வந்தாள். 
ஒரு வருடம் கழிந்த பிறகு, சத்தியவானின் ஆயுள் முடியும் காலம் வந்தது. அவனது உயிரைப் பறிக்க வந்த யமனிடம் தனது கணவரின் உயிரைத் திரும்பித் தருமாறு கேட்டுக்கொண்டே தனது முயற்சியில் சிறிதும் தளராமல் யமதர்மராஜாவை பின் தொடர்ந்து சென்றாள். யமனிடம் போராடி இறுதியில் தன் பதிவிரதத் தன்மையிலும், அம்பாளின் அருளாலும், சமயோதித புத்தி சாதுர்யத்தினாலும் தன் கணவனது உயிரை மீட்டு பல வரங்களைப் பெற்று நன்றாக வாழ்ந்தாள். இதன்பொருட்டு கானகத்தில் அவள் மேற்கொண்ட விரதமே. "காரடையான் நோன்பு' எனப்படுகின்றது.
அவரவர்கள் தங்கள் குலம் மற்றும் குடும்ப வழக்கப்படி காரடையான் நோன்பு பண்டிகை கொண்டாட வேண்டும். ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் முடியும் போது பங்குனி மாதம் துவங்கும் போதும் இரவு நேரத்தில் விரதம் இருந்து இந்த நோன்பினை செய்யலாம் (இவ்வாண்டு மார்ச் 14 - இரவு 9.30 மணி).
கலசம் வைத்து, அதன் மீது கட்டிக்கொள்ள வேண்டிய மஞ்சள் சரடு வைத்து பூஜை செய்ய வேண்டும். அம்பாளுக்கு சரடு கட்ட வேண்டும். அரிசிமாவும் வெல்லமும் கலந்த அடை செய்து, பழம் முதலியவற்றுடன் நைவேத்தியம் செய்ய வேண்டும். பசுவிற்கும் இந்த அடையினைக் கொடுக்க வேண்டும். 
நோன்பு பூஜை முடிந்த பிறகு சரட்டினை கையில் வைத்துக்கொண்டு, "உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன், ஒரு காலும் என்னை விட்டு என் கணவன் பிரியாதிருக்க வரம் வேண்டும் தாயே" என்று கூறி கணவன் ஆயுள் விருத்திக்கு பிரார்த்தித்து கயிறு கட்டிக்கொள்ள வேண்டும். இதனால் பெண்களின் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்பது ஐதீகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT