வெள்ளிமணி

திருப்பம் தரும் திருவல்லம் பரசுராமர்!

மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமருக்கு கேரளாவில் அமைக்கப்பட்ட பழைமையான ஆலயம்;

DIN

மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமருக்கு கேரளாவில் அமைக்கப்பட்ட பழைமையான ஆலயம்; திரிவேணி சங்கமத்தில் அமைந்த தலம்; பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கும் தனித்தனி சந்நிதிகள் கொண்ட கோயில்; பிற்காலப் பாண்டியர்கள் எழுப்பிய ஆலயம்; முழுவதும் கருங்கல்லினால் அமைந்த திருக்கோயில்; ஆதிசங்கரர் வழிபட்ட தலம்; முன்னோர்கள் முக்திக்கான பரிகாரத் தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குவது, கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகேயுள்ள, திருவல்லம் பரசுராமர் திருக்கோயில். கர்மனாறு, கிள்ளியாறு, பார்வதிபுரத்தாறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
 வல்லம் என்பதற்குத் தலை என்ற பொருள் கூறப்படுகிறது. அந்தவகையில், அனந்தபத்மநாப சுவாமிக்குத் தலைப்பகுதியாகத் திருவல்லம் திகழ்கின்றது. அனந்தகாடு எனும் திருவனந்தபுரம் உடலாகவும், திருப்பாதபுரம் என்பது பாதமாகவும் போற்றப்படுகிறது.
 பரசு என்பதற்கு கோடாலி என்பது பொருள். கடுந்தவத்தினால் சிவபெருமானிடம் கோடாலி பெற்றவர் பரசுராமர். இவர், தன் கோடாலியால் மேற்குக் கடற்கரையில் உருவாக்கிய தேசமே கேரளா.
 இவர் குறித்த புராணக் கதை: ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகா, கற்புக்கரசியான இவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. கங்கைக் கரையோரம் வசித்து வந்த இவர், நாள்தோறும் கங்கையில் நீராடி, மண் எடுத்து பானை செய்து, அதில் தண்ணீர் கொண்டு வருவது வழக்கம். ஒரு சமயம், இவ்வாறு கங்கைக்குச் சென்றபோது, தண்ணீரில் அழகிய ஆண்மகனின் உருவம் தெரிய, அவன் அழகில் நிலை தடுமாறினாள். மன மயக்கத்தில் பானை செய்ய முடியாமல் தவித்தாள். அனைத்தையும் குறிப்பால் உணர்ந்த முனிவர், அவளின் மீது கோபங்கொண்டார். தன் புதல்வர்களை அழைத்து, அவளை வெட்டி விட்டு வரும்படி ஆணையிட்டார்.
 நான்கு புதல்வர்கள் மறுக்க, ஐந்தாவது மகனான பரசுராமன் தன் தாயின் தலையை கோடாலியால் வெட்டி, தந்தைக்குச் சமர்ப்பித்தார். இதனால் மனம் மகிழ்ந்த முனிவர், வேண்டிய வரம் கேள் என்றார். அதற்கு பரசுராமர் தன் தாயை மீண்டும் உயிர்ப்பித்துத் தரவேண்டும் என்றார். பரசுராமனின் தாயன்பைக் கண்டு பெருமை கொண்டு, அதன்படியே ரேணுகா உயிர்ப்பெற்றாள் என புராணம் கூறுகிறது.
 தாய் மீதும், தந்தை மீதும் அளவற்ற அன்பு கொண்ட பரசுராமர், அட்சயதிரிதியை அன்று அவதரித்தார். இவரது கதை ராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் கூறப்படுகிறது. கொங்கன் பிரதேசம், பரசுராமரின் தலமாக இன்றும் போற்றப்படுகிறது.
 பரசுராமருக்கென கேரள மாநிலத்தில் அமைந்த தனிச்சிறப்பு கொண்ட திருக்கோயிலாக இது அமைந்துள்ளது. இதுதவிர, அருணாசல பிரதேசத்தில் லோகித் மாவட்டத்தில், பரசுராமர் குண்ட் என்ற தலம் அமைந்துள்ளது. சென்னையில் பரசுராமேஸ்வரர் திருக்கோயில், அயனாவரத்தில் அமைந்துள்ளது.
 திருவல்லத்தில் உள்ள இவ்வாலயம், பிற்காலப் பாண்டியர்களால் எழுப்பப்பட்டது. ஆலயம் முழுவதும் கருங்கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது. எண்ணற்ற சிற்பங்கள் காணப்படுகின்றன. இத்திருக்கோயிலின் தொன்மையைக் கருத்தில்கொண்டு, தொல்லியல்துறை பராமரித்து வருகின்றது. கிழக்கு, வடக்கு என இருவாயில்களும், இரு கொடிம ரங்களும் அமைந்துள்ளன. கிழக்கு வாசலில் சிவபெருமான், வடக்கு வாசலில் பரசுராமர் சந்நிதிகள் அமைந்துள்ளன.
 பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் வாழும் ஆலயமாக இது திகழ்கின்றது. விநாயகர், முருகர், கிருஷ்ணன், பத்ரகாளி, வியாச முனிவர், மத்திய முனிவர், நாகர்கள் சந்நிதிகளும் ஆலய வளாகத்தில் அமைந்துள்ளன.
 பரசுராமர் வடக்கு முகமாக அனந்தபத்மநாப சுவாமியின் ஆலயத்தினை நோக்கி நின்ற கோலத்தில் எழிலாகக் காட்சி தருகிறார். அலங்காரத்தில் உயிரோட்டமாக நமக்கு காட்சிதருவது மெய்சிலிர்க்க வைக்கின்றது. இத்திருக்கோயிலில், பரசுராமரின் பாதம் வணங்கப்படுகிறது. இதற்கு தினமும் சிறப்பு பூஜை நடத்தப்படுகின்றது.
 திருவனந்தபுரம்-கோவளம் வழித்தடத்தில், திருவனந்தபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் திருவல்லம் ஊரில் இக்கோயில் உள்ளது. விமான நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் திருவல்லம் உள்ளது.
 - பனையபுரம் அதியமான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT