வெள்ளிமணி

சொக்கனை மகிழ்விக்கும் சொக்கப்பனை!

நம் வாழ்வியல் முறையை அலசி ஆராய்ந்து பார்க்கும்போது மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் ஒரு விளக்கமும், உட்சென்று பார்த்தால் ஆச்சர்யப்படத்தக்க விளக்கமும் கிடைக்கும்.

DIN

நம் வாழ்வியல் முறையை அலசி ஆராய்ந்து பார்க்கும்போது மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் ஒரு விளக்கமும், உட்சென்று பார்த்தால் ஆச்சர்யப்படத்தக்க விளக்கமும் கிடைக்கும். ஒரு சிறு உதாரணம்: "சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்' இந்த பழமொழியை உணவு பொங்கும் சட்டியில், சாதம் இருந்தால் மட்டுமே கரண்டி (அகப்பை) என்ற ஆப்பையால் எடுக்கும் போது வரும் என நேரடிப் பொருள் கொள்ளலாம். ஆனால் உள்நோக்கி பார்த்தால் அந்த சொல்லுக்கு மிக அற்புதமாக, சஷ்டியில் விரதமிருந்தால், அகப் பையில் (கருப்பையில்) குழந்தைச் செல்வம் கிடைக்கும் என்ற பொருளைச் சொல்வர். இப்படி நம் திருவிழாக்களுக்கும், விரதங்களுக்கும் பின்னணியில் ஒவ்வொரு மகிமை உள்ளது. மிகவும் விவரத்தோடு தான் நம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளார்கள்.
 ஆடிப் பட்டம் தேடி விதைக்கக் காரணம்; அதன் பின் வரும் காலங்களான ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்கள் பருவ மழைக்காலங்கள். இந்த மழைக்காலத்தில் பயிர்கள் சீராக வளரும். அதே காலகட்டதில் இந்தப்பயிர்களின் எதிரிகளான; கூட்டுப்புழுக்களிலிருந்து தாய் "அந்து' பூச்சிகள் மிக அதிகளவில் வெளிவரும். இந்த பூச்சிகள் இடும் முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்களும், பூச்சிகளும் இந்த பருவத்தில் தளதளவென வளர்ந்துள்ள பயிர்களை தாக்கி அழிக்கும். இந்த பூச்சிகள் உருவாகக் காரணமான தாய் பூச்சிகளை, விளக்கு வெளிச்சத்தால் கவர்ந்து அழித்தால் நம் பயிர்களை கொஞ்சமாவது காப்பாற்ற முடியும். இந்த வித்தையை தெரிந்து கொண்ட நம் முன்னோர்கள், கார்த்திகை மாதம் முழுவதும் சந்தியா காலமான மாலை நேரத்தில் விட்டில் பூச்சிகளை கவர்ந்து கொல்வதற்காக வாசலில் விளக்கு ஏற்றும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.
 தென்னை, பனை மரப்பொருட்கள் அனைத்திலும் பெரிய மருத்துவ குணம் உள்ளது. பலவகையான பொருட்களை தந்து பிறருக்கு உபயோகமாக இருப்பதால் பனைமரத்தை "பூலோக கற்பக விருட்சம்' என்பர். சில கோயில்களில் பனைமரம் தலவிருட்சமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 பனை ஓலையை எரிப்பதால் ஏற்படும் புகையில் மனிதனுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, விஷப்பூச்சிகளை கொல்லும் ஒருவித நச்சுத்தன்மை இருந்ததால்; ஆறு மற்றும் குளக்கரையில் தானே முளைத்து வளர்ந்துள்ள பனை மரத்திலிருந்து பச்சை மட்டையை வெட்டி எடுத்து வந்து நம் சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் ஊரின் மையத்திலுள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயிலின் முற்றத்தில் ஒவ்வொன்றாய் அடுக்கி அதனை கோபுரம் போல் வடிவமைத்து திருக்கார்த்திகை அன்று மாலை நேரத்தில் "சொக்கப்பனை' கொளுத்துவார்கள். பேச்சுவழக்கில் இதனை சொக்கப்பானை என்று கூறுவார்கள்.
 இந்த திருவிழா மூன்று நாள்கள் தொடர்ந்து ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெறும். இது தெய்வீகமாக பார்க்கப்பட்டு அக்னிமய லிங்கமாக பக்தர்களால் வணங்கப்படுகிறது. பின் அதிலிருந்து கிடைக்கும் சாம்பலை பயிர்களின் மேலே தூவுவார்கள். இதனால் சேதத்தை ஏற்படுத்தும் அனைத்து வகை பூச்சிகளும் இறந்துவிடும். பயிர்கள் காக்கப்படும். இந்த சொக்கப்பனையை மையப்படுத்தி நாட்டுப் புறப்பாடல்கள் பல உள்ளன.

 திருக்கார்த்திகைத் திருவிழா என்றாலே, நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலையாரை நினைக்கத் தோன்றும். இத்திருத்தலத்தில் தீபத்திருவிழா பத்து நாள்கள் சிறப்பாக நடைபெறும். பத்தாம் திருநாளன்று காலையில் பரணிதீபமும், மாலை மலைத்தீபமும் திருக்கோயிலில் ஏற்றப்படுகின்றன. அதே நேரத்தில் "அண்ணாமலைக்கு அரோஹரா, அண்ணாமலைக்கு அரோஹரா' என்ற நாம கோஷம் விண்ணைப் பிளக்க மலைத்தீபம் ஏற்றப்படுகிறது. "இச்சோதியை நேரில் வணங்கியவர்கள், தரிசித்தவர்களுடைய கோத்திரத்தில் இருபத்தோரு தலைமுறையில் உள்ளவர்களுக்கும் முக்தி கிட்ட வரமளிப்போம்' என்று பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்களுக்கு பரமேஸ்வரன் கூறியதாக "அருணாசல புராணம்' மூலம் அறியமுடிகிறது. இந்த மலைத்தீபம் 10 நாள்கள் சுற்றுவட்டார மக்கள் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்.
 அதே நேரத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் பனை ஓலையைக் கொண்டு பொது வெளியில் அனைவரும் பார்க்கும் வண்ணம் சொக்கப்பனை கொளுத்துவார்கள். அநேகமாக எல்லாக்கோயில்களிலும் உற்சவ மூர்த்தியை எழுந்தருளச் செய்து அவர் முன்னிலையில் இவ்வைபவம் நடைபெறும். வெளியிலுள்ள அச்சமூட்டும் விஷப்பூச்சிகள் அழிவதுடன்; நம் மனதை ஒருநிலைப்படுத்தி வணங்குவதால்; நம் ஆழ் மனதின் உள்ளே ஒளிந்து கொண்டுள்ள பொறாமை, வஞ்சம், சூது, பிறர் பொருள்மீதான பேராசை போன்ற அழுக்குகள் அழித்தொழிக்கப்படும். பேச்சுவழக்கில் "ஒரு கல்யாணம், கார்த்திகை என வீட்டில் நடக்கவில்லையே' என நாம் ஆதங்கப்படுவோம். அந்த குறைகள் நீங்குவதற்கு திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை அனைவரும் கொண்டாடுவோம்!
 இந்த ஆண்டு, டிசம்பர்10 -ஆம் தேதி, செவ்வாயன்று அண்ணாமலை மலைத்தீபமும், டிசம்பர் 11 -ஆம் தேதி சர்வாலய தீபமும், வைணவ வைகானச தீபமும், டிசம்பர் 12 -ஆம் தேதி வைணவ பாஞ்சராத்ர தீபத்திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.
 - எஸ். எஸ். சீதாராமன்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT