முகப்பு
வெள்ளிமணி

நீதியும்  அநீதியும்

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: "நீதிபதிகள் மூன்று வகையினராவர்.  முதலாமவர் சுவனத்தில் (சொர்க்கம்) இருப்பார்; மற்ற இருவர் நரகத்தில் இருப்பர்.

Updated On : 11 டிசம்பர், 2020 at 6:00 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:34 PM


நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: "நீதிபதிகள் மூன்று வகையினராவர்.  முதலாமவர் சுவனத்தில் (சொர்க்கம்) இருப்பார்; மற்ற இருவர் நரகத்தில் இருப்பர்.
சுவனத்தில் இருப்பவர், வழக்கின் உண்மையை அறிந்து நீதி வழங்கியவர்.  நரகத்திலுள்ள இருவரில் ஒருவர், உண்மையை விளங்கிக் கொண்டு வேண்டுமென்றே அநீதியாக தீர்ப்பு செய்தவர்; மற்றொருவர், உண்மையை சரிவர அறிய முயற்சிக்காமலேயே தீர்ப்பு வழங்கியவர்'.
அமீருல் முஃமினீன் உஸ்மான் (ரலி) அவர்கள் மூன்றாவது கலீஃபா ஆவார்கள்.  தங்களுடைய 
கிலாபத்துடைய பொறுப்பில் இருந்தபோது, நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)  அவர்களிடம், "மக்களுக்கிடையே எழும் பிரச்னைகளுக்கு தீர்ப்பு கொடுக்கக் கூடிய நீதிபதியாகத் தங்களை நியமிக்க என் மனம் நாடுகிறது.  நீங்கள் இதனை ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.
அதற்கு அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), "தாங்கள் என் மீது இரக்கம் காட்டுங்கள்.  என்னை நிம்மதியின் பக்கம் விட்டுவிடுங்கள்.  அவ்வாறு நீங்கள் செய்தால் எனக்கு மிகவும் நல்லதாகும்!' என்றார்கள்.  அதாவது, இம்மாபெரும் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை என்பதாகும்.
அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள், "தாங்கள் ஏன் இதிலிருந்து தப்பிக்க நினைக்கிறீர்கள். உங்கள் தந்தை உமர் (ரலி) அவர்கள் தீர்ப்பு வழங்கி வந்தார்களே' எனக் கூறினார்கள்.
"நான் ஏன் இப்பொறுப்பிலிருந்து விடுபட நினைக்கிறேன் என்றால், நபி(ஸல்) அவர்கள் கூறி, நான் கேட்ட ஒரு விஷயமே! அதாவது, "எவர் நீதிபதியாக இருந்து நீதியுள்ள தீர்ப்பளிக்கிறாரோ, அவருக்கு அதுவே போதுமானதாகி விடும்' அதாவது நீதிபதியாக இருந்த கெளரவமும், நீதியுள்ள தீர்ப்பு வழங்கியதனால் ஏற்பட்ட நன்மையும் அவருக்குச் சமமாகி விடும்' என்றார்கள்.
இதனைக் கேட்ட உஸ்மான் (ரலி) அவர்கள் மேற்கொண்டு வற்புறுத்தாமல் விட்டுவிட்டார்கள்.
 மனிதன் நன்றாக யோசித்து தீர்ப்பு செய்தாலும் தவறு நிகழ்ந்து விடக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது. அநீதியான தீர்ப்பு என்பது பாதிக்கப்பட்டவரின் மீது மேலும் அநியாயம் செய்யப்படவும் கூடும்.
தான் பார்க்காத ஒரு சம்பவத்தில் ஏற்படும் பிரச்னையை, சாட்சியை வைத்தும், வாதி பிரதிவாதி கூற்றை நன்றாக ஆராய்ந்து, சம்பவம் நிகழ்ந்த சூழ்நிலையை உற்றுப் பார்த்தும் மார்க்கத்தின்படி தீர்ப்பு வழங்குவது சாதாரண விஷயம் அல்ல.  
ஆனால், இன்று பலர் அதைக் கையில் எடுத்துக் கொள்கின்றனர்.  இன்னும் மார்க்க விஷயத்தில் எவ்வித அச்ச உணர்வுமின்றி போதுமான ஞானம் இல்லாமலேயே தீர்ப்பு கொடுத்து விடுகின்றனர்.
தீர்ப்பு செய்யும் பதவி பெருமை சேர்க்கக்கூடியதாக இருக்கிறது என்றாலும் அல்லாஹ்விடம் விசாரணையில் மறுமையில் சிக்க வைக்கக்கூடியது என்பதை உணரவேண்டும்.  இமாமத் செய்வது, வஸியத்தை ஏற்றுக்கொள்ளுதல் (அதாவது யாருடைய சொத்தையாவது பங்கிடும் வேலை), அமானிதத்தை வைத்திருப்பது, ஃபத்வா (தீர்ப்பு) கொடுப்பது ஆகிய நான்கு விஷயங்களை நிறைவேற்றுவதில் தவறு நிகழ்ந்து விடுமோ எனப் பயந்து பலரும் விலகியே இருந்தனர்.    
"ஜனங்களுக்கிடையில் எவர் நீதிபதியாக நியமிக்கப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக கத்தியின்றி அறுக்கப்பட்டவர் ஆவார்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.