ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! எஃப்-35-ஐவிட இரு மடங்கு விலை அதிகமா?
ஈரான் போரில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்ததாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளதைப் பற்றி...
ஈரானுக்கு எதிரான போரில் மிகவும் அதிக விலைமிக்க ஆளில்லா விமானமான டிரோனை இழந்ததாக அமெரிக்க கடற்படைத் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அணுசக்தித் திட்டத்தைக் கைவிடக் கோரி மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப். 28 ஆம் தேதி 'ஆப்ரேஷன் எபிக் ஃபியூரி' என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கின.
போர் தொடங்கி கிட்டத்தட்ட 40 நாள்களுக்குப் பின்னர், சுமார் இரண்டு வாரங்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரவும், அமெரிக்க தாக்குதலில் ஏற்பட்டுள்ள கட்டட இடிபாடுகளுக்கு இழப்பீடு வழங்கவும் ஈரான் முனைப்புக் காட்டி வருகிறது.
Advertisement
ஈரான் அணுசக்தித் திட்டங்களை முற்றிலுமாக கைவிட வேண்டும் என அமெரிக்கா முறையிட்டு வருகிறது. அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதிப்பேச்சு மீண்டும் இரண்டு நாள்கள் கழித்து தொடங்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தெரிவித்திருந்தார்.
சுமார் 40 நாள்கள் நடைபெற்ற போரில், அமெரிக்கா இதுவரை 40-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் டிரோன்களை இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடக்கம் முதலே அமெரிக்க விமானங்கள் மற்றும் டிரோன்கள் மீது தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்திருந்தற்கு மறுப்புத் தெரிவித்திருந்த அமெரிக்கா, தற்போது சுமார் 24 எம்கியூ4சி (MQ-4C) டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான போரில் சுமார் ரூ. 2,300 கோடி மதிப்பிலான டிரோனை இழந்ததாக அமெரிக்க ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை அருகே ஏப். 9 ஆம் தேதி அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக ஈரான் நடத்திய பதிலடித் தாக்குதலில் அமெரிக்காவின் கண்காணிப்பு டிரோன்களில் மிக முக்கியமான எம்கியூ4சி டிரைட்டன், செயலிழந்து பாரசீக வளைகுடாவில் விழுந்து காணாமல்போனதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த டிரோனின் மதிப்பு சுமார் 200 முதல் 240 மில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2,300 கோடி. இந்த டிரோனானது மிகத் தீவிரத் தாக்குதல் நடத்தும் 100 மில்லியன் டாலர்கள் கொண்ட எஃப்-35 போர் விமானத்தைவிட இரு மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.