வெள்ளிமணி

பெருமைமிகு பெருவுடையார் கோயில்!

"ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொள'

இரா. இரகுநாதன்

"ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொள'


- எனத்துவங்கும் சிவபாதசேகரனான ராஜராஜசோழனின் கல்வெட்டு மெய்க்கீர்த்தி, காந்தளூர்ச்சாலை முதல் பாண்டியர் வரை பலநாடுகளை வெற்றி கொண்டு இருபத்தாறாவது ஆட்சியாண்டில் இருபத்தியேழாம் நாள், தஞ்சாவூர் கோயிலுக்குள் "கீழைத்திருமஞ்சன சாலையில் இருந்து, நாம் எடுப்பிச்ச இத்திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீஸ்வரமுடையார்க்கு நாம் குடுத்தவை நம் அக்கன் குடுத்தவை நம் பெண்டுகள் குடுத்தவை மற்றும் குடுத்தார் குடுத்தவைகளை ஸ்ரீவிமானத்திலே கல்லிலே வெட்டுக எனத் திருவாய் மொழிஞ்சருள வெட்டின'

- என 26 -ஆம் ஆட்சியாண்டில் கி.பி, 1010 -இல் தானம் செய்ததைக் குறிப்பிடுகிறது.

வராகம் காட்டிய வழி

சோழர் தலைநகரம் தஞ்சைக்கு மாறியவுடன் ராஜராஜன் கொண்டுவந்த திரைப்பொருள்கள் மூலம் சிவபிரானுக்கு அதுவரை இல்லாத சிறப்புமிகு கோயில் அமைக்க இடம் தேடி சென்றான். எதிரே ஒரு வராகம் வழிமறித்து உறும, மன்னன் அம்பெய்ய முயன்றான். போக்குக்காட்டி வெகு தூரம் ஓடியது. ஓரிடத்தில் கோயில் கட்டத்தகுதியான இடத்தைக் கண்டான். எதிரில் நின்ற வராகமோ பெரியதாக உருமி காலால் தரையை மும்முறை தட்டி மாயமாய் மறைந்து போனது. ஆகம வல்லுநர்கள் அரண்மனை சோதிடர் கருத்துப்படி அவ்விடத்தில் கோயில் கட்ட ஏற்பாடு செய்தான்.

பெரிய கோயில்

கோயில் என்றால் சைவர்களுக்கு சிதம்பரம். பெரிய கோயில் என்றால் தஞ்சை பிரகதீசுவரர் கோயில். தஞ்சைப் பெரிய கோயில், தஞ்சைப் பெருவுடையார் கோயில், ராஜராஜேஸ்வரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சிவாலயம் இதுவே. சைவ சமய கோட்பாட்டில் கயிலாயம் எப்படி இருக்கும் என்பதை, நம் கண் முன்காட்ட விரும்பிய முயற்சியே ராஜராஜேச்சரம்! காஞ்சிபுரம் கயிலாயநாதர் கோயில், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள அசலேஸ்வரர் சந்நிதி போன்றவை இக்கோயிலுக்கு முன் மாதிரி எனப்படுகிறது. மன்னனைத் தவிர, இக்கோயில் முன்னின்று கட்டிய தலைமைச் சிற்பி”வீரசோழன் குஞ்சர மல்லன் ராஜராஜ பெருந்தச்சன் என்றும், அடுத்து மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன், இலத்தி சடையனான கண்டராதித்த பெருந்தச்சன் என்று கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவாயில்கள்

இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் நுழைவாயிலாக ராஜராஜனே தன் பட்டப்பெயரால் "கேரளாந்தகன் திருவாயில்' எனப் பெயர் சூட்டப்பட்ட கோபுரம் ஐந்து நிலை கொண்டதாக அமைந்து இருக்கிறது. அகலமான அதிஷ்டானத்தின் மீது கருங்கல்லும் சுதையும் கலந்து எடுக்கப்பட்டதாகும். அடுத்ததாக, ஒரு நுழைவாயில் சிறிய கோபுரத்துடன் "ராஜராஜன் திருவாயில்' என்ற பெயரோடு அமைந்துள்ளது. இவ்வாயில் முழுவதும் சிற்பத்தொகுதிகள் நிறைந்துள்ளன. இக்கோபுரத்தில்தான் தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகிலேயே உயரமான அழகான வசீகரம் மிக்க துவாரபாலகர்கள் சிற்பங்கள் அமைந்துள்ளன.

நந்தி-பலிபீடம்

ராஜராஜன் காலத்தில் கேரளாந்தகன் திருவாயிலுக்கும் ராஜராஜன் திருவாயிலுக்கும் நடுவில் உள்ள பகுதியில் பலிபீடமும் நந்தி மண்டபமும் இருந்திருக்கின்றது என்பது வல்லுநர்கள் கருத்து. அந்த திருநந்தித்தேவர் தற்போது திருக்கோயிலின் பிரகார மண்டபத்தில் கொலுவிருக்கிறார். நாயக்கர்கள் காலத்தில் முன்புறம் ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி, சுமார் 20 டன் எடை, 2 மீ. உயரம், 6 மீ. நீளம், 2 1/2 மீட்டர் அகலமும் கொண்டது.
கருவூரார் சந்நிதி திருமுறைகளில் 9 -ஆம் திருமுறையான திருவிசைப்பா பாடிய கருவூர்த்தேவர் சந்நிதி மேற்கு பிரகாரத்தில் அமைந்துள்ளது. இவர் ஒரு சித்தர். மூலப்பெருவுடையாரை நிறுத்துகையில் பீடத்தில் நிலை நில்லாமல் இருந்த வரை இவர் நிலை நிறுத்தினார் எனப்படுகிறது.

பரிவார முருகன் சந்நிதி

ராஜ ராஜன் காலத்து பரிவார முருகன் சந்நிதி அழிந்த பிறகு, விசயநகர அரசர்களால் திருச்சுற்றின் வடமேற்கு மூலையில் புதியதாக கட்டப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோயில் சிற்பச்சிறப்பில் இந்த சந்நிதிக்கு ஒரு பிரதான இடம் உண்டு. கருவறை முருகன் இருபுறமும் வள்ளி தெய்வானை துணை இருக்க சண்முகராக மயில் மீது அமர்ந்தவாறு அருளுகிறார். விமானத்தின் முதல் தளத்தில் முருகப்பெருமானின் 36 திருவுருவங்கள் அமைந்துள்ளன.

பெருவுடைநாயகி

பிற்காலத்தில் பாண்டியர்களால் 13- ஆம் நூற்றாண்டில் நந்தி மண்டபத்திற்கு வடபுறம் அம்மன் சந்நிதி அமைக்கப்பட்டது. அம்மனுக்குப்பெயர் பெருவுடை நாயகி என்பதாகும். அம்பாள் கருவறையில் சுமார் 7 அடிக்கு மேல் உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்வழங்குகிறாள். கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவை பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நாயக்கர் காலத்தில் முன்மண்டப விதானத்தின் மேற்புறம் முழுவதும் தேவி மஹாத்மியத்தின் வரலாற்றுக் கதைகளை ஓவியமாகத் தீட்டியுள்ளார்கள்.

அதிசய விமானம்

தட்சிண மேரு விமானம் என அழைக்கப்படும் இத்திருக்கோயிலின் விமான அடிப்பாகம் தரையிலிருந்து 5 மீட்டர் (16 அடி) உயரமேடையில் உள்ளது. மூலவர் விமானக் கட்டடம் பிரம்மாண்டமான கூர்நுனி விமானமாக அமைத்து கருவறையிலிருந்து 190 அடி உயரத்திற்கு ஓங்கி உயர்ந்திருக்கிறது. இருமாடித்தள அமைப்புடைய விமானத்தில் முதல் தளத்தில் 108 பரத நாட்டிய முத்திரைகளில் 81 நடனச் சிற்பங்கள் வெளிச்சுவரின் மேற்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன. கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

பிரகதீஸ்வரர் சந்நிதி

கருவறை மூலவர் லிங்கம் 3.7 மீட்டர் உயரமானது. லிங்கப்பகுதியும் ஆவுடையாரும் மட்டுமுள்ள இவருக்கு பீடம் இல்லை. கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம், முக மண்டபம் ஆகியவை இணைந்த ஒரு பெரும் கோயிலாக இருக்கின்றது. இக்கோயில் மேற்கூரை அல்லது விதானத்தைத் தாங்கும் சோழர்காலக் கட்டடக்கலையின் அமைப்பாக, சதுரப் போதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரகாரத்தில் கருவறை பின்புறம் விநாயகர் சந்நிதி உள்ளது. இச் சந்நிதிக்கு பின்புறத்தில் 108 லிங்கங்கள் உள்ளன. வடக்கு பிரகார கீழ்பகுதியில் மண்டூக தீர்த்தம் உள்ளது.

விழாக்கள்

சித்திரை பிரம்மோற்சவம் 18 நாள்கள், நடராஜரின் 6 திருமஞ்சனங்கள், வராகியின் ஆஷாட நவராத்திரி, புரட்டாசி பிருஹன்நாயகிக்கு நவராத்திரி உற்சவம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், ஐப்பசி சதயத்தில் ராஜராஜன் திருவிழா, மகாசிவராத்திரி, கருவூராருக்கு சிறப்பு பூஜை என்று ஆண்டு முழுவதும் அனைத்து விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் ராஜராஜ சோழனால், கி.பி. 1003 - இல் தொடங்கி, சுமார் கி.பி. 1010 -ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கோயிலை அமைத்த ராஜராஜன், அக்கோயிலில் நித்திய நைமித்திக பூஜைகள் சிறப்பாக நடைபெற உற்சவ விக்ரகங்களையும் நிறுவினான். பூஜை செய்ய சிவப்பிராமணர்களையும் அவருக்கு உதவியாளர்களையும் பூஜை நேரத்தில் வாத்தியம் இசைக்க பல்வகை வாத்தியக்காரர்களையும் வெவ்வேறு ஊர்களில் இருந்து கொணர்ந்து குடியமர்த்தி அவர்களுக்கு குடியிருப்புகளும் நிவந்தங்களும் மானியங்களும் கொடுத்தான்.

திருக்கோயில் பராமரிப்பு, இந்திய அரசின் மத்திய தொல்பொருள் பராமரிப்பு இலாகாவாலும்; திருக்கோயில் நிர்வாகம் அரண்மனை தேவஸ்தான இளவரசர் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையராலும் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இக்கோயிலின் குடமுழுக்கு பூர்வாங்க பூஜைகள் தற்போது துவங்கியது. பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் யாகசாலை பூஜை துவங்கி 8 காலங்கள் நடந்து, பிப்ரவரி 5 -ஆம் தேதி, காலை 9.00 முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது.

தொடர்புக்கு: 0436 2223386 / 0436 2274476.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியின் முதல் ஹாட்லைன் பராமரிப்பு வாகனம்! முதல்வா் தொடங்கி வைத்தாா்!

போலி மருந்துகளின் புழக்கத்தை தடுக்க சிறப்புக் குழு! தில்லி அரசு நடவடிக்கை!

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - தனியரசு

மூளை சாவடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

குற்றாலத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு

SCROLL FOR NEXT