மந்திரம் போற்றுதும்... திருமந்திரம் போற்றுதும்... - 8
ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்ஒன்பதும் ஈசன் இயல் அறிவாரில்லைமுன்புஅதின் மேவி முதல்வன் அருள்இலார்
ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்
ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்
ஒன்பதும் ஈசன் இயல் அறிவாரில்லை
முன்புஅதின் மேவி முதல்வன் அருள்இலார்
இன்பம் இலார் இருள்சூழ நின்றாரே
(பாடல் 1992)
பொருள் : சூரியன் முதலான ஒன்பது கோள்களையும் சார்ந்து இவ்வுலகம் சுழன்று கொண்டிருக்கிறது. இந்த ஒன்பது கோள்களும் இயங்குவது இறைவன் அருளாணையின்படியே என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. இந்த அறியாமை காரணமாக, அவர்கள் அந்த ஒன்பது கிரகங்களையும் விரும்பி சென்று, அதனால் பரம்பொருளின் கருணையை இழந்தவர் ஆயினர். நவ கோள்களை நாடிச் சென்றதால், எந்தப் பயனும் அடையாதவர்களாக, இடர்ப்பட்டு, துன்ப இருள் சூழ நிற்பவராயினர்.
Advertisement
நவகிரங்களுக்கு எல்லாம் தலைவனாக இருக்கும் சிவபெருமானை, பரம்பொருளை வழிபட்டால், அந்த கிரகங்கள் எந்த கெடுபலனும் நமக்கு செய்ய முடியாது என்கிறார் திருமூலர்.
எல்லா காரியத்தையுமே நாள், நட்சத்திரம் பார்த்தே செய்கிற இயல்புடையோர் நாம். ஞானசம்பந்த பெருமான்,
மங்கையர்க் கரசியாரின் அழைப்பை ஏற்று மதுரைக்கு, கிளம்பிய போது, இன்று நாளும், கோளும் சரியில்லை, பயணம் செய்ய வேண்டாமே என திருநாவுக்கரசர் தயங்கிய போது, பரம்பொருளின் அருள் பெற்றவர்களை நாளும், கோளும் எதுவும் செய்து விட முடியாது என, "வேயுறு தோளி' எனத் தொடங்கும் கோளறு பதிகத்தைப் பாடியதை பெரிய புராணத்தில் பார்க்கலாம்.
"அரசருளிச் செய்கின்றார் "பிள்ளாய் !
அந்த அமண்கையர் வஞ்சனைக்கோர் அவதியில்லை,
உரை செய்வ துளதுறு கோள் தானுந் தீய
எழுந்தருள உடன் படுவ தொண்ணா என்னப்
பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால்,
பழுதணையாது எனப் பகர்ந்து பரமர் செய்ய,
விரை செய் மலர்த் தாள் போற்றிப் புகலி
வேந்தர் "வேயுறு தோளி" யை எடுத்து விளம்பினாரே ...
என்கிறார் சேக்கிழார்.
நமது கர்ம வினையின்படியே, நம் விதி அமைகிறது. நமக்கு விதித்ததையே கிரகங்கள் நமக்கு தருகின்றன. ஆனால், விதியையும் இறைவனை வணங்குவதன் மூலம் வெல்லலாம் என அறிவுறுத்துகிறார் திருமூலர்.
விதிவழி அல்லது இவ்வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவன் ஆமே
(பாடல் 45)
இந்த உலகம் விதித்த முறைப்படியே இயங்குகிறது. விதியின்படியே ஆன்மாக்கள் அடைகிற இன்பம் அமையும். இதில் மாற்றமில்லை. தினமும் இறைவனைப் போற்றி, தொழுது, துதி செய்வதன் மூலம், சுடர் ஒளி சோதியாக திகழும் பரம்பொருளின் அருளைப் பெறலாம். பேரின்பமாகிய வீடு பேறு அடைய வழி காட்டும் கதிரவன் போல அவன் இருக்கிறான் என்பது பொருள்.
உங்கள் விதி, எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், இறைவனை வழிபட்டால், அவன் உங்களை வெற்றியை நோக்கி வழி நடத்துவான்.எல்லாவற்றையும் பரம்பொருளை தியானித்து பெற்றுக் கொள்ளலாம் எனில், பின் கோயில்களில் எதற்கு நவகிரகங்கள் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் யோசிக்க வேண்டி இருக்கிறது.
இறைவனின் அருளை நேரடியாகப் பெறுவதற்கான தகுதியும், பக்குவமும் எல்லோருக்கும் இருப்பதில்லை தானே? ஒவ்வொரு முறையும் பாவம் செய்து விட்டு, கடவுளை வழிபட்டு பாவத்தைப் போக்கி கொள்ளலாம் என்று யாரும் எண்ணி விடக் கூடாது என்பதாகக்கூட இருக்கலாம்.
ஆனால், எவ்வளவு பாவம் செய்திருந்தாலும், அதை உணர்ந்து , கடவுளின் திருவடியை நினைத்து, செய்த பாவங்களை சொல்லி கதறி அழுது, இறைவனை கை கூப்பி தொழுது, இறை உணர்விலேயே மனம் லயித்துக் கிடந்தால், இறைவனின் திருவருளைப் பெறலாம்.
அவர்கள் மனம் முழுக்க இறைவன் வியாபித்து நிறைந்து நிற்பான் என திருமந்திரத்தின் 43-ஆ வது பாடலில் சொல்கிறார் திருமூலர்.
அரன்அடி சொல்லி அரற்றி அழுது
பரன்அடி நாடியே பாவிப்ப நாளும்
உரன்அடி செய்தங்கு ஒதுங்க வல்லார்க்கு
நிரனடி செய்து நிறைந்து நின்றானே !
இதையே தான் மாணிக்கவாசகரும், "வினையேன்
அழுதால் உன்னைப் பெறலாமே' என்கிறார்.
எவ்வளவு தீவினைகள் செய்திருந்தாலும், அதை உணர்ந்து, இறைவன் முன் அவன் திருநாமத்தை சொல்லி, அழுதால், அவன் அருளைப் பெறலாம்.
நீங்கள் கண்ணீரோடு இறைவனிடம் உங்கள் விண்ணப்பத்தை வைக்கிற போது, இறைவனே நேரில் வந்து உதவுவானாம்.
உற்றுநின் றாரோடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தெரிந்துஅறி வாரில்லை
பத்திமை யாலே பணிந்துஅடி யார்தொழ
முத்தி கொடுத்துஅவர் முன்புநின் றானே...
(பாடல் : 284).
தவயோகத்தில் ஈடுபட்டுள்ள தவயோகிகள், சித்துகளில் வல்லவர்களாகிய சித்தர்கள் கூட, ஒளிச்சுடரான பரம்பொருளை எப்போதும் எளிதாக உணர்ந்து கொள்ளவில்லை. ஆனால் சித்தர்களே கூட சரியாகப் புரிந்து கொள்ளாத பரம்பொருள், உள்ளன்போடு பணிந்து பரவும் அடியவர்கள் துதித்தவுடன், அவர்களுக்கு அருள் புரிய அவர்கள் முன் தோன்றுவான்.
திருமூலர் சொல்கிறார். நண்பர்களே... நமக்கு நேரம் சரியில்லாமல் இருக்கலாம், கிரகங்கள் துணை செய்யாமல் போகலாம். அவமானமும், தோல்வியும் கழுத்தை நெரிக்கலாம். ஆனால் கண்ணீரோடு, பணிந்து இறைவனை துதித்தால், உடனடியாக நம் முன் வந்து தோன்றுவான்.
"பத்திமை யாலே பணிந்துஅடி யார்தொழ
முத்தி கொடுத்து, அவர் முன்பு நின்றானே'.
- (தொடரும் )
(கட்டுரையாசிரியர்: இலக்கியச் சொற்பொழிவாளர்)