நாம் நீராடும்போது புண்ணிய நதிகளின் பெயரைக் கூறி, அவற்றில் நீராடுவதாகத் தியானம் செய்து வேத மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அவ்விதம் செய்தால் நம்முடைய உடல் புனிதத் தன்மை அடையும்.
- அக்கினி புராணம்
மனஉறுதி இருப்பவர்கள் எதைப் பற்றியும் சரியாகத் தீர்மானம் செய்வார்கள்; அவர்கள் எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும், தீர்மானித்த வேலையை செய்தே முடிப்பார்கள்; அவர்கள் தாங்கள் எடுத்துக்கொண்ட வேலை நல்லதென்று தோன்றினால், உலகமே எதிர்த்தாலும் அதைச் செய்துதான் முடிப்பார்கள்.
மனஉறுதி உள்ளவர்களின் முன்னால் உள்ள மலையும் அணுவாகும்; கடலும் நீர்த்துளியாகும் இப்படியெல்லாம் நடப்பதற்கு மனம் உறுதியாக இருப்பதுதான் காரணம். அது இறைவன் சாந்நித்தியம் ஆகும்.
- ரிக் வேதம்
நான் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கண்ணன் பெயரைச் சொல்லி விஷம் குடித்தேன். ஆனால் என்ன ஆச்சரியம்! அந்தக் கொடிய விஷம் பகவானுடைய சரணாம்ருதமாகிவிட்டதே!
- மீராபாய்
மனிதர்கள் விரும்பியதை அடைந்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கக் கூடாது; இழப்பு வந்தால் அதிகமாக வருந்தக் கூடாது; நிதி நெருக்கடிகள் வரும்போது சோகத்தினால் தர்மத்தைக் கைவிடக் கூடாது.
- வியாத கீதை
மாணிக்கத்தின் பிரகாசத்தைக் கூட அதன்மீது படியும் மாசு மங்கச் செய்கிறது. அதுபோல் அறிஞர்கள் சிலருடைய நல்ல இயல்புகளையும் செல்வம் கறைப் படுத்திவிடுகிறது.
- ஸ்ரீ ராமபிரான்
ஒருவன் ஞானத்தில் நிலைபெற்றுத் தன்னுடைய பந்தத்தையும் மோட்சத்தையும் பற்றி நன்றாகக் கவனிக்க வேண்டும்; இந்திரியங்களின் சிதறலே பந்தம், அவற்றின் அடக்கமே மோட்சம்.
- உத்தவ கீதை
இந்த உலகிலுள்ள எல்லா உயிரினங்களிலும் மனிதனால் மட்டுமே புலன்களையடக்கி, இறைவன் சிந்தனைகளுடன் வாழ முடியும்; மனிதனால் மட்டுமே ஆன்மிக சாதனைகள் செய்து இறைவனை உணர முடியும்.
- ஸ்ரீ கிருஷ்ணன்
இறைவனே! உன் அடிமையைக் காப்பாற்றி ஆட்கொள்வது உன் கடமை அல்லவா! நான் இனிப் பிறப்பெடுக்க முடியாது! நீயே சரணம்!
- அருணகிரிநாதர்
பிரம்மம் பூரணமானது. பிரம்மத்திலிருந்து பிறக்கும் பிரபஞ்சமும் பூரணமானது. பிரம்மத்திலிருந்து பிரபஞ்சம் பிறப்பதால் பிரம்மத்தின் பூரணத்தன்மை குறைந்துவிடுவதில்லை. பிரம்மாகிய பூரணம் பலவற்றைத் தோற்றுவித்தாலும் அது குறையாமல் பூரணமாக விளங்குகிறது.
- ஈசாவாஸ்ய உபநிஷதம், சாந்தி மந்திரம்
புண்ணியம் பாவம் இரண்டையும் இங்கேவிட்டவன், தூய்மையுள்ளவன். அவனே இந்த உலகில் அறிவோடு வாழ்பவன் அவனே உண்மையில் துறவி எனப்படுவான்.
- புத்தர்
நல்லவனும் தன் புண்ணியம் பயனளிக்க ஆரம்பிக்காதவரை துன்பத்தையே காண்கிறான். ஆனால் புண்ணியம் பயனைக் கொடுக்கும்போது, அவன் நன்மையை உணர்கிறான்.
- புத்தர்
ஒன்றாக இருந்த பிரம்மம் பலவாகப் பெருகியது; அது அண்டங்களாகவும் அனைத்து உயிர்களாகவும் மலர்ந்தது. எனவே, அனைத்திலும் அமர்ந்து உறைவது பிரம்மமேயாகும். அதுவே நம் உள்ளத்திலும் ஒளிர்கிறது. அதை நாம் "ஆத்மா' என்கிறோம்.
- சாந்தோக்கிய உபநிஷதம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.