மலையில் ஓடும் தேர்! 
வெள்ளிமணி

மலையில் ஓடும் தேர்!

பழனிமலை ஏறி நின்ற முருகனைக் காண சிவனும் பார்வதியும் பூப்பல்லக்கில் கைலாயத்திலிருந்து வந்தனர்.

ஆர்.​அ​னு​ராதா

பழனிமலை ஏறி நின்ற முருகனைக் காண சிவனும் பார்வதியும் பூப்பல்லக்கில் கைலாயத்திலிருந்து வந்தனர். வரும் வழியில் ஓரிடத்தில் மலையில் வாசம் கமழும் வண்ணப்பூக்கள் மலர்ந்து நிறைந்திருந்தன. அந்தப் பகுதிக்கு "பூம்பாறை' என்று பெயரிட்டனர்.

முருகனைச் சந்தித்த அம்மையும், அப்பனும் பழனியிலிருந்து பூம்பாறைக்குச் செல்லுமாறு சொல்லி விட்டுச் சென்றனர். வண்ணமிகு வாச மலர்கள் குவிந்திருந்த குன்றைக் கண்ட குழந்தை வேலன் அவ்விடத்திற்கும் சென்று தங்கத் தொடங்கினான்.         

அப்பொழுது, சீன தேசம் சென்று பஞ்சபூத சக்திகளைப் பெற்றுத் திரும்பிய சித்தர் போகர், பழனி முருகன் பூம்பாறைக்கு வருவதைக் கண்டார். அபூர்வ மூலிகைகளைக் கொண்டு, தம்பணா மந்திரத்தை உச்சரித்து, நவபாஷாணத்தால் மூன்று முருகன் சிலைகளை வடிவமைத்தார். 

முதல் சிலையை தண்டத்தோடு வடிவமைத்து "தண்டபாணி' எனப் பெயரிட்டு பழனி மலையிலும், குழந்தை வேலவன் வேல் கொண்டிருப்பது போல் இரண்டாவது சிலையை  பூம்பாறையிலும், பூம்பாறையை அடுத்த மதிகெட்டான் சோலை என அழைக்கப்படும் இடத்தில் மூன்றாவது சிலையையும் பிரதிஷ்டை செய்தார் என்பது வரலாறு.  

பூம்பாறை கோயிலுக்கு வந்த அருணகிரிநாதர் முருகனை வழிபட்டபின் அசதியில், கோயில் மண்டபத்தில் அயர்ந்து தூங்கினார். இரவில், அரக்கி  ஒருத்தி அருணகிரிநாதரைக் கொல்ல வந்தாள். அப்பொழுது, முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரிநாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தார். 

அதைக் கண்ட அரக்கி, "குழந்தையும் தாயும் தூங்குகிறார்கள்' என்றெண்ணி கொல்லாமல் சென்று விட்டாளாம். அருணகிரிநாதர் திருப்புகழில் பூம்பாறை முருகனைப் போற்றிப் பாடியுள்ளார். இங்கு அருணகிரிநாதருக்கும் தனி சந்நிதி உள்ளது.  

கொடைக்கானலில் இருந்து 19 கி.மீ. தொலைவிலுள்ள பூம்பாறையில் குழந்தை வேலப்பர் மலைக்கோயில் உள்ளது. மூலவர் குழந்தை வேலப்பர் தவிர விநாயகர், நடராஜர், நவகிரகங்கள் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன. கோயிலின் சுற்றுச்சுவர் "ஓம்' வடிவில் அமைந்துள்ளது சிறப்பு. 

கோயிலைச் சுற்றிலும் ரதவீதிகள் அமைந்துள்ளன. நுழைவு வாயிலிலிருந்து கோயிலின் பின்புறம் சுமார் 80 அடி வரை உயர்ந்துள்ளது. மீண்டும் சரிவாக இறங்கி கீழ் நோக்கி வாயில் வரை வருகிறது.

இக்கோயிலில் தினமும் ஒரு கால பூஜை நடக்கிறது. குழந்தை வரம் வேண்டுவோர், நோய் தீர வேண்டுவோர் இங்குள்ள மூலவரிடம் பிரார்த்தனை செய்து பலனடைகின்றனர். தீராத உடல் உபாதை உள்ளவர்கள், காலையில் அபிஷேகம் முடிந்ததும், முருகனின் இடைத்துணியைப் பிழிந்து தீர்த்தத்தை வாங்கி உட்கொள்ளுவதன் மூலம் நோய் தீருவதாகக் கூறுகின்றனர்.

பழனியில் தைப்பூசம் முடிந்து கொடியிறக்கிய மறுநாள் பழனிமுருகன் வான்வழியாக இங்கே வந்து விடுகிறார் என்பது ஐதீகம். குழந்தை வேலப்பர் மலைத்தேரோட்ட விழா கொடியேற்றம் நடைபெற்று, தொடர்ந்து 10 நாள்கள் தினமும் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 

இந்த ஆண்டு ஜனவரி 30-இல் தொடங்கிய விழா பிப்ரவரி 10-ஆம் தேதி வரை நடைபெறும். 9-ஆம்நாள் மலைத்தேரோட்டம்  நிலையிலிருந்து புறப்பாடாகும்.
எங்கும் இல்லாத சிறப்பாக 7,500 அடி உயரத்திலுள்ள பூம்பாறை மலை மீது 32 அடி உயரமுள்ள தேரை அலங்கரித்து முருகன், வள்ளி தெய்வானை வீற்றிருக்க, தேருக்கு முன்னும் பின்னும் சங்கிலியால் கட்டி  பள்ளத்தில் இறக்கி, பின்னர் சமதளத்தில் நகர்த்தி மேட்டுப்பகுதிக்கு இழுத்து, மீண்டும் சரிவான பாதையில் பின்புறம் தேரை மக்கள் இழுத்துப்பிடிக்க, மெதுவாக  தேர் நிலைக்கு வந்து சேரும்.  



தேரோட்டத்திற்கு முந்தைய நாளில் ரதவீதிகளில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வது வழக்கம். தேரோட்டம் துவங்கும் முன்பு ஆயிரக்கணக்கான தேங்காய்கள் உடைக்கப்படும்.  பத்தாம் நாள் முருகன் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி, "பழனி வியூ பாயிண்ட்' என்ற இடத்திலிருந்து முருகன் பழனிமலைக்குத் திரும்புவதான ஐதீகம் முடிந்து கொடியிறக்கப்படும். 

தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் குழந்தை வேலப்பரைத் தரிசிக்கலாம். கொடைக்கானலில் இருந்து பூம்பாறை செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

மேலும் தகவலுக்கு: 9442813899; 9442398231
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஜிஎஸ்டி குறைப்பின் பயன் நுகா்வோருக்கு முழுமையாகக் கிடைப்பதை அரசு கண்காணிக்கும்: வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

நாட்டில் இதய நோய்களால் 31% போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT