திருக்கச்சி நம்பிகள் அவதாரத் திருநாள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்து, விசிஷ்டாத்துவைத நெறியை உலகுக்கு அருளிய ஆசாரிய புருஷராகிய ஸ்ரீராமாநுஜர் காலத்தைச் சேர்ந்த மகான் ஸ்ரீதிருக்கச்சி நம்பிகள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்து, விசிஷ்டாத்துவைத நெறியை உலகுக்கு அருளிய ஆசாரிய புருஷராகிய ஸ்ரீராமாநுஜர் காலத்தைச் சேர்ந்த மகான் ஸ்ரீதிருக்கச்சி நம்பிகள்.
சென்னை பூவிருந்தவல்லியில் வைசிய குலத்தில் மாசி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் இவர் அவதரித்தார். வீரராகவச் செட்டியார் } கமலை அம்மாள் தம்பதியினரின் நான்காவது திருமகனாவார். திருமழிசையாழ்வாரின் அருளால் இவரது அவதாரம் அமைந்ததால் "பார்கவப்பிரியர்' என்று பெயரிடப்பட்டார்.
தமது தந்தையார் பிரித்துக்கொடுத்த சொத்துகளை இவருடைய மூத்த சகோதரர்கள் மூவரும் தங்களது பரம்பரைத் தொழிலாகிய வணிகத்தில் முதலீடு செய்து சம்பாதித்தனர். இவரோ தம்முடைய பங்காகக் கிடைத்த சொத்தைக் கொண்டு ஒரு நந்தவனம் அமைத்து அதில் விளையும் பூக்களால் காஞ்சி ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோயிலுக்கு மாலைகள் கட்டிக்கொடுத்தார்.
Advertisement
ஸ்ரீவரதராஜப்பெருமாள் முன்னொரு காலத்தில் பிரம்மா இயற்றிய யாகத்தின் வேள்விக்குண்டத்தில் அவதரித்ததால், அவருடைய திருமேனியின் வெப்பத்தைத் தணிய வைத்துக் குளிர்விக்க விரும்பி, அவருக்கு தினந்தோறும் திருஆலவட்ட கைங்கரியம் (விசிறி கொண்டு வீசிக் குளிர்விப்பது) என்னும் மகத்தான தொண்டையும் பார்கவப்பிரியர் புரிந்து வந்த காரணத்தினால், பார்கவப்பிரியர் ( காஞ்சி நகரின் மற்றொரு பெயரான கச்சி என்பதை இணைத்து) "திருக்கச்சி நம்பிகள்' என்று அழைக்கப்பட்டார்.
வரதராஜரைப் பெருமாளைப் போற்றும் "ஸ்ரீதேவராஜ அஷ்டகம்' இவர் இயற்றியதாகும். பாகவதர்கள் எனப்படும் ஸ்ரீவைணவ அடியார்களின் பெருமையை இவ்வுலகுக்கு உணர்த்திய ஸ்ரீதிருக்கச்சிநம்பிகளின் அவதாரத் திருநாள் இவ்வாண்டு பிப்ரவரி 22}ஆம் தேதி திங்கள்கிழமையன்று (மாசி மாதம் பத்தாம் தேதி) அமைகிறது.
- எஸ். ஸ்ரீதுரை