"கவீந்த்ராணாம் சேத: கமலவன பாலாதப - ருசிம்
பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா - மேவ பவதீம்'
-செüந்தர்ய லஹரி
இந்த உலகே கருணை என்ற ஒரு சொல்லில்தான் அடங்கி இருக்கிறது. பிரபஞ்சத்தின் கருணைதான் உலக உயிர்களை வாழ வைக்கிறது. இந்தப் பிரபஞ்சமே அன்னையின் வடிவம் என்கிறபோது அவள் கருணைதான் நம்மை வாழ வைக்கிறது. அந்த அகண்ட பராசக்திதான் துளித்துளியாக ஜீவன்களிடம் நிறைந்து நிற்கிறது. நாம் சொந்த முறையில் எதையும் சாதிப்பதில்லை. அவள் கருணையினாலேயே அனைத்தும் நடக்கிறது.
பெருங்கருணைப் பேராறாய் விளங்கும் அன்னை, பல்வேறு இடங்களில் கோயில் கொண்டிருந்தாலும் அவளின் கருணை பிரவாகமாய்ப் பொங்கி எழும் இடம் திருப்புக்கொளியூர் என்னும்
அவினாசியில். அங்கு அன்னை "கருணாம்பிகை' என்றும், "பெருங்கருணை நாயகி' என்றும், "பெருங்கருணாலயச் செல்வி' என்றும் அழைக்கப்படுகிறாள்.
இறைவன் அக்கினி தாண்டவம் ஆடியபோது தேவர்கள் அஞ்சி ஓடி ஒளிந்து கொள்ள, அவர்களுக்கு அருளிய தலம் அவினாசி. "திரு புக்கு ஒளி ஊர்' என்று பெயர் பெற்றது. "அவினாசி' என்றால் "பெருங்கேட்டை அழிக்கக் கூடியது' என்று பொருள். ஊழிக்காலத்தில் ஈசன் சங்காரத் தாண்டவம் என்னும் பிரளய தாண்டவம் புரிகிறார். பிரளய வெள்ளத்தில் யாவும் அழிந்தபின் அக்கினித் தாண்டவம் புரிந்து ஜலத்தை தனக்குள் வற்றச் செய்யும்போது அம்பிகையிடம் "நீ பிரணவ வடிவாய்த் தோன்றுவாய்!'' என்கிறார்.
சங்காரத் தாண்டவத்தின்போது அம்பிகை அவரின் இடப்பாகத்திலிருந்து விலகி இருந்தாள். இறைவனை விட்டு விலகி இருந்த சிறுமை போக அம்பிகை தவம் செய்ய விழைகிறாள். அவரைப் பிரிந்த சிறு நாழிகை கூட தாங்கமுடியாமல், அய்யனுக்கு அபசாரம் செய்ததுபோல், பாவம் செய்ததுபோல் அம்பிகையின் மனம் வேதனைப்படுகிறது. தேவியின் மனம் உணர்ந்து அய்யன், ""தேவி, உன் அன்பு அளவிடற்கரியது.
நான் சங்காரத் தாண்டவம் புரிந்த காலத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும், ஓடி வந்து ஒளிந்த தலம் தெற்குத் திசையிலுள்ள திருப்புக்கொளியூர். அங்கு சென்று தவம் செய்!'' என்கிறார்.
பார்வதி பொன் விமானத்தில் ஏறி தென்திசை நோக்கி வருகிறார். மகிழ், செண்பகம், கொன்றை, பாதிரி, மந்தாரம், மா, முதலிய மரங்கள் பூத்து விளங்கும் ஒரு இடத்தில் மாமரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்யலானார். சிவநாமத்தில் லயித்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்கிறாள் அம்பிகை.
அதேநேரத்தில் காசியில் மூல லிங்கத்தினின்று ஒரு வேர் கிளைத்தெழுந்து ஓடி வந்து அவினாசியில் முளைத்தெழுந்தது. அதுவே என்றும் அழிவில்லாதவர் என்ற பொருளில் "அவிநாசியப்பர்' என்று அழைக்கப்படுகிறது. கங்காதேவியும் இங்கு கிணற்றில் வந்து அமைந்தாள். வள்ளல் தம்பிரான் என்பவர் காசியில் விழுந்த பொன் காசுகளை அவினாசியில் நாழிக் கிணற்றில் எடுக்கிறார். உமாதேவியின் தவத்தில் மகிழ்ந்த ஈசன் அன்னைக்குக் காட்சி அளித்து "தேவி! நீ என் இடப்பாகத்தில் எப்போதும் இருந்தாய். அதை நான் எடுத்துக் கொண்டு விட்டதால் என் வலது பாகத்தில் எழுந்தருளுவாய்!'' என்கிறார். அன்னை மகிழ்ந்து "பெருங்கருணாலயச் செல்வி' என்ற பெயருடன் ஈசனின் வலப்பாகத்தில் அமர்கிறாள்.
எனவே இங்கு இறைவனின் சந்நிதிக்கு வலப்புறத்தில் அம்பிகையின் சந்நிதி இருக்கிறது. அவளின் கருணை முன் அனைவரும் சமம். அவளிடம் வேறுபாடு இல்லை. அரக்கர், மனிதர் என்று பாகுபாடு இல்லாமல் தன்னை வேண்டும் அனைவருக்கும் வேண்டிய கருணையைப் பொழிவாள் அம்பிகை. இராவணனின் தங்கை தாடகை என்ற அரக்கி. அவள் தனக்கு ஒரு புத்திரன் வேண்டும் என்று பிரம்மாவை நோக்கித் தவம் செய்கையில், அவர் தாடகையிடம், கருணாம்பிகையை நோக்கித் தவம் செய்யச் சொல்கிறார்.
மூன்று ஆண்டுகள் தவம் செய்த தாடகையின் பக்தியில் மகிழ்ந்த அன்னை "அவளுக்குக் கருணை புரிய வேண்டும்' என்று இறைவனிடம் வேண்டுகிறாள். அவளின் வேண்டுகோளுக்கு மகிழ்ந்து இறைவன் தாடகைக்கு புத்திர பாக்கியம் அருள்கிறார். அன்னை அவளை கருவூர் ஆலயம் சென்று சிலகாலம் தங்கி இருக்கச் சொல்கிறாள். அதன்படி சென்று கருவூரில் இருந்த தாடகைக்கு "மாரீசன்' என்ற மகன் பிறக்கிறான்.
தேவலோக யானையான ஐராவதம் சாபம் நீங்கிய தலம், நாககன்னிகை மாங்கல்ய பாக்கியம் பெற்ற தலம். முதலை வாயில் சென்ற சிறுவனைப் பதிகம் பாடி சுந்தரமூர்த்தி நாயனார் மீட்டுக் கொண்டு வந்த தலம் அவினாசி. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று இந்நிகழ்ச்சி "முதலைவாய்ப் பிள்ளை உற்சவமாக' சிறப்பாக நடைபெறுகிறது.
பெருங்கருணை நாயகி இறைவனுக்கு வலப்புறத்தில் மூன்றடி உயரத்தில் அற்புதமாகக் காட்சி அளிக்கிறாள். அம்பிகையின் சந்நிதிக்கு எதிரில் மிக அழகான ஐந்துநிலை ராஜகோபுரம், அழகுடன் காட்சி அளிக்கிறது. "காசியில் வாசி அவினாசி' என்று புகழப்படுகிறது அவினாசி. "காசி சென்று வழிபட்டால் என்ன பலனோ அதைவிடப் பலமடங்கு இங்கு அம்மையை, அப்பனை தரிசித்தால் கிடைக்கும்' என்கிறது இதன் தலபுராணம்.
இங்கு தனித்தனி ராஜகோபுரம், கொடிமரம் உள்ளது. காசி தீர்த்தம், ஐராவத தீர்த்தம், நாக கன்னிகை தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. கோயில் முன்பு ஒரே கல்லாலான எழுபதடி உயரமுள்ள தீபஸ்தம்பம் உள்ளது. இது கொங்கு நாட்டுக்கே உண்டான சிறப்பு. மைசூர் மகாராஜாக்கள் பட்டம் ஏற்கும் முன் காசி சென்று லிங்கம் எடுத்துவந்து இங்கு பூஜை செய்த பின்பே ஆட்சிப்பொறுப்பை ஏற்பார்கள். காசி கிணற்றுக்கு அருகில் ஞான பைரவர் சிலை வடிவமும் உள்ளது.
ஈசனுக்கும், அம்பிகைக்கும் நடுவில் சோமாஸ்கந்த வடிவில் முருகன் சந்நிதி உள்ளது. அம்பிகை தவம் இருந்ததாகக் கூறப்படும் பாதிரி மரம் பிரம்மோற்சவ காலங்களில் மட்டுமே பூக்கிறது என்பது சிறப்பம்சம்.
சித்திரைத் திருவிழா, வஸந்த உற்சவம், நவராத்திரி, அறுபத்துமூவர் உற்சவம் ஆகியவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன.
"சிற்சபை பொலிந்தவன் பகுதிநீ என்னவும்
சிவனார்கொள் திருமேனிதான் காராரும் நற்கருணை என்னவும் போற்றுவர்'
என்கிறது அம்பிகையின் பிள்ளைத் தமிழ்.
"சிந்தித் துருகி உன்சந்நிதி வாசலைத் தேடி வந்து
சந்தித் துத்தெண்ட னிடும்பொழுதே எனைச் சார்ந்தமிடி
வந்தித்து வாழ்த்தி அனுப்பி விட்டோட வரமருள்வாய்
உந்தித்தட மருள் சேர்க்கரு ணாகர உத்தமியே'
என்று போற்றுகிறது கருணாகரமாலை.
அன்னையை வேண்டினால் திருமண பாக்கியம், குழந்தைப்பேறு அருள்கிறாள்.
நம்மை வாட்டும் துன்பங்களிலிருந்து மீட்கவே அன்னை இங்கு கருணைநாயகியாக ஆட்சி செய்கிறாள். அவளை வணங்கி சகல செüபாக்கியங்களையும் பெறுவோம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.