வெள்ளிமணி

ஆனந்த வாழ்வருளும் அகத்தீசுவரர்! 

DIN

மன்னர்கள் பேராதரவு பெற்றதும், திருவிழாக் கோலமும் கண்ட பெருமையுடனும் திகழ்ந்த சுமார் 1,000 ஆண்டுகள் பழைமையான சிவன் கோயில்,  காலப்போக்கில் சிதிலமடைந்து தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட மதுராந்தகம் வட்டம் அச்சிறுபாக்கத்திலிருந்து ஒரத்தி செல்லும் வழியில் சுமார் 23 கி.மீ. தூரத்தில்,  பசுமையான வயல்கள் சூழ காட்சி தரும் அனந்தமங்கலம் கிராமம் உள்ளது. திண்டிவனத்திலிருந்து 12  கி.மீ. தூரமுள்ள இந்தக் கிராமத்தில்,  அருள்மிகு அரங்கநாயகி சமேத அகத்தீஸ்வரர்,  வரதராஜப் பெருமாள், வரசித்தி விநாயகர், செல்லியம்மன், அம்மச்சார் அம்மன் ஆகிய கோயில்கள் வழிபாட்டில் உள்ளன. 

சிவன் கோயிலைப் பற்றி அறிவோம்:
புதுப்பிக்கப்பட்ட கோயில் அமைப்பு:  ஊரின் ஈசான்ய பாகத்தில் கிழக்கு நோக்கிய வாயிலில் நந்தி மண்டபம், முக மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்பில் காட்சியளிக்கிறது.  ஆலய வெளிச்சுவரில் காணப்படும் புடைப்புச் சிற்பங்களும், கல்வெட்டுகளும் வரலாற்றுப் பெருமையை பறைசாற்றுகின்றன.  குறிப்பாக வெளிச்சுவரின் வடக்குப் பக்கத்தில் சிவலிங்கத்தை யானையும், அரவமும் (பாம்பு) வழிபடுவது போல சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தல இறைவனாம் அகத்தீசுவரரை அரன் வழிபட்ட தலவரலாற்றைக் குறிப்பாக இது உணர்த்துகிறது .

கல்வெட்டுச் சான்றுகள்: இவ்வூர் ஏரியில் காணப்படும் கல்வெட்டில் "அவநிமங்கலம்' என்று பல்லவர் கால தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளதால், பல்லவ மன்னர் காலத்திலேயே இவ்வூர் சிறப்புடன் திகழ்ந்திருக்கிறது என்பதை அறியலாம்.  மேலும்,  கோயில்களில் காணப்படும் முதலாம் குலோத்துங்க, விக்ரம,  மூன்றாம் ராஜராஜ சோழ மன்னர்கள், சம்புவராய மன்னர்கள் காலத்து கல்வெட்டுகள் மூலம் கோயிலின் பழைமையையும், திருப்பணிகள் மற்றும் வழிபாட்டுக்கு நிலம் தானம் அளித்த செய்திகளையும்,  இவ்வூரின் பழைய பெயர்களையும் அறிய முடிகிறது. கல்வெட்டுகளில் அரங்கமங்கலம், அரங்கைப்பதி, அதிராஜேந்திர நல்லூர் என்று குறிப்பிடப்பட்ட பெயர்களே தற்போது அழைக்கப்படும் அனந்தமங்கலம் ஆகும்.

கும்பாபிஷேகத் திருப்பணி:  இவ்வாலயத்தில் குடமுழுக்கு நடந்தேறி சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாக ஊர்ப் பெரியவர்கள் கூறுகின்றனர். தற்போது இந்தக் கோயிலை புதுப்பித்து மீண்டும் பழைய வரலாற்றுப் பெருமைக்குக் கொண்டு வர வேண்டும் எனவும், தேர்த் திருவிழாக்கள் நடத்த வேண்டும் என்றும் ஊர் மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். 
பாலாலயம் செய்யப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. காலப் போக்கில் சிதைந்து போன ஆலயத்தில் சிவ லிங்கமும் நந்தியெம்பெருமானும் உள்ளனர். அம்மூர்த்தங்கள் தற்போது தகரக் கொட்டகையில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.  

அடியவர் ஒருவர் தினமும் அபிஷேகம் செய்து, சுத்த அன்னம் நிவேதனம் செய்து, தேவாரப்பதிகங்களைப் பாடுகின்றார். தகுந்த அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, பதிவு செய்து, அதன் மூலம் திருப்பணி நடைபெறுகிறது. பேரூர் ஆதீனம் உதவியைக் கொண்டு சில பணிகள் முடிந்துள்ளன. இன்னும் நிறைவேற வேண்டிய பணிகளாக அம்மன் சிலை உட்பட சில புதிய தெய்வ மூர்த்தங்கள் சிலைகள் வடித்தல், தரைத் தளம் அமைத்தல், அனைத்து சந்நிதிகளிலும் பிரதிஷ்டை மற்றும் குடமுழுக்கு வைபவத்திற்கான செலவினங்கள் ஆகியவற்றிற்கு பக்தர்கள் உதவி அவசியம் தேவைப்படுகிறது.

சிதிலமடைந்த சிவன் கோயிலைப் புதுப்பிப்பதால் நாமும், நமது சந்ததியினரும் அபரிமிதமான பலன்களைப் பெறலாம் என "சிவபுண்ணியத் தெளிவு' என்ற பழைய சைவ சமயநூல் விரிவாகக் கூறுகிறது.

அனந்தமங்கலத்துக்கு அழகு சேர்ப்பதே இந்த அகத்தீசுவரர் கோயில்தான். இவ்வூருக்குச் செல்ல திண்டிவனம்,  ஒரத்திலிருந்து பேருந்து,  ஷேர் ஆட்டோ வசதிகள் உள்ளன. 

தொடர்புக்கு: பாலகிருஷ்ணன் (ஆசிரியர்): 9626867948,  முருகதாஸ்: 9751352632.

- எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT