Aanmeegam
வெள்ளிமணி

இழந்த பதவியை தருபவர்...

முருகனின் அருளால் பகீரதனுக்கு மீண்டும் அரசுரிமை

இணையதளச் செய்திப் பிரிவு

முற்காலத்தில் இலஞ்சியை ஆண்டு வந்த பகீரதன், தனது நாட்டில் நிலவிய செல்வ வளத்தால் கர்வம் மிகுந்திருந்தார். ஒருசமயம் அவனது சபைக்கு நாரதர் வந்தபோது, அரசர் உபசரிக்கவில்லை. கோபமுற்ற முனிவர் அங்கிருந்து சென்றார். அருகேயுள்ள வனத்தின் வழியே கோரன் எனும் அசுரன் திக்விஜயம் சென்றுகொண்டிருந்தார். அவரிடம் நாரதர் சென்று, ""இலஞ்சியை வென்றால் மட்டுமே உனது திக்விஜயம் பூர்த்தியாகும்'' என்றார். அதனைக் கேட்ட அசுரன் தனது படைகளைத் திரட்டி, இலஞ்சி மீது போர் தொடுத்து பகீரதனின் நாட்டை அழித்தான். பகீரதன் வறியவனாகினார். கர்வத்தை விடுத்தபோது அவர் முன் நாரதர் தோன்றி, துர்வாச முனிவரிடம் சென்று உதவி கேட்குமாறு கூறினார்.

தொண்டை மண்டலத்தை அடைந்த பகீரதன், துர்வாச முனிவரின் ஆசிரமத்தை அடைந்து வணங்கி, வேண்டினான். அருகிலுள்ள பாதிரி மரத்தினடியில் முருகனை வழிபட்டு வருமாறு துர்வாசர் கூறினார். முருகனை பகீரதன் பூஜித்து தவம் செய்து வருகையில், சித்திரைத் திங்கள் சுக்கிரவாரத்தில் முருகன் காட்சியருளி, பகீரதனுக்கு மீண்டும் அரசுரிமை கிடைக்குமாறு வரம் அருளினார். பின்னர் தனது நாட்டை அடைந்து அசுரனைப் போரில் வென்று அரசாட்சியை மீண்டும் பெற்றார் தொண்டை மண்டலத்தை மீண்டும் அடைந்து, முருகனுக்கு கோயிலைக் கட்டினார். இந்தக் கோயில்தான் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில்.

ஒருமுறை இந்திரன் தனது குருவாகிய பிரகஸ்பதியிடம் சென்று, முருகனின் சிறந்த ஒரு தலத்தை கூறியருளுமாறு வினவினார். அதற்கு பிரகஸ்பதி, பாதிரி மரத்தின்கீழ் வீற்றிருக்கும் முருகனின் தலமே உத்தமமானது என்று கூறியருளினர். இந்திரன் இங்கு வந்து வச்சிராயுதத்தினால் ஒரு தீர்த்தமுண்டாக்கி பூஜித்திருந்து தனது விருப்பங்களை நிறைவேற்றினார். பிறகு, இந்திராணியை மணந்து சிறப்புற்றான். இந்திரன் உண்டாக்கிய இந்தத் தீர்த்தம் "வச்சிரதீர்த்தம்' .

வல்லன் என்ற அசுரன் இந்த ஊரை தன் வசமாக்கிக் கொண்டு, தேவர்களுக்கும் தீராத தொல்லைகளைக் கொடுத்து வந்தான். தேவர்கள் முருகனிடம் சரண்அடைந்தனர். பெருமான் தேவர்களுக்கு அபயம் அளித்து தனது வேலாயுதத்தை விடுத்து வல்லனை வதம் செய்தார். அசுரன் உயிர் பிரியும் நேரத்தில் நற்புத்தி வரப் பெற்று, இந்த ஊர் இனி தனது பெயரால் விளங்குமாறு அருள் செய்திட வேண்டும் என்று வேண்டினான். முருகனும் அவ்வாறே வரமருளினார். அதனால் இத்தலத்துக்கு "வல்லன்கோட்டை' என்று வழங்கப்பட்டு, "வல்லக்கோட்டை' என்று அழைக்கப்படுகின்றது.

அருணகிரிநாதர் திருப்போரூரில் வழிபட்டு, இரவு தங்கினார். காலையில் திருத்தணிக்கு வழிபடச் செல்லலாம் என எண்ணியபடியே உறங்கினார். நான்காம் யாம இரவு வேளையில் அவரது கனவில் முருகன் எழுந்தருளி, "கோடைநகர் மறந்தனையோ' என்று உணர்த்தினார். மறுநாள் கண்விழித்த அருணகிரியார் கந்தனை நினைத்து கசிந்துருகி, பிறகு வல்லக்கோட்டை தலத்தை அடைந்து, எட்டு திருபுகழ் பாடல்களைப் பாடியருளினார். அவர் இத்தலத்தை "கோடை நகர்' என்றும் "பெருமானைக் கோடைப்பதியோன்' என்றும் சந்தக் கவிகளால் பாடியருளினார்.

முருகன் 7 அடி உயரம் கொண்டு வள்ளி தெய்வானையுடன் கிழக்கு முகமாய் அருள்பாலிக்கிறார். தென்மேற்கில் முக்கால கணபதி சந்நிதி உள்ளது. இதனருகே தலமரமாகிய பாதிரியும், வடமேற்கில் வள்ளி தெய்வானையுடன் முருகனின் சந்நிதியும் உள்ளது. கிழக்கில் இடும்பன், கடம்பன், பைரவர் சந்நிதிகள் அமைந்துள்ளன.

செவ்வாய், வெள்ளிக்கிழமை நாளில் வந்து வணங்குவோருக்கு இழந்த பதவிகள், நிறைவான செல்வங்கள், திருமணப்பேறு ஆகியன கிடைக்கும்' என்பது ஐதீகம். ஸ்ரீபெரும்புதுôரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் ஒரகடம் செல்லும் வழியில் வல்லக்கோட்டை அமைந்துள்ளது. ஜூலை 7-இல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

எல் . ஐயப்பன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

சரத் பவாா், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டி முதல்வா்

ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

புரோ கபடி லீக்: தயாராகும் தமிழ் தலைவாஸ்

மேல்விஷாரம் கல்லூரியில் தமிழ்கனவு சொற்பொழிவு

SCROLL FOR NEXT