உலகம்

இந்திய ராணுவத் தாக்குதல் தற்காப்பு நடவடிக்கை: ஆப்கானிஸ்தான் ஆதரவு

DIN

தற்காப்பு நடவடிக்கையாகவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது என்று இந்தியாவுக்கு ஆதரவாக ஆப்கானிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஷைதா அப்தாலியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு, எந்த நாடும் தங்களது மண்ணில் புகலிடம் அளிக்கக் கூடாது என்பதில் ஆப்கானிஸ்தான் நம்பிக்கை கொண்டுள்ளது. பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல், அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்தால், தற்காப்புக்காக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதில் ஆச்சரியமில்லை.
ஆப்கானிஸ்தான் அரசு, பயங்கரவாதிகளுக்கு இடையே எந்த வேறுபாட்டையும் கடைப்பிடிக்கவில்லை. உலகில் எந்தவொரு நாட்டுக்கும் அச்சுறுத்தலாக, அபாயகரமானதாக இருக்கும் அனைத்து பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் ஆப்கானிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான முடிவுகளை நாம் எடுக்க வேண்டிய சரியான தருணம் இதுவேயாகும். இந்த முடிவுகளுக்கு நாம் விலை கொடுக்க வேண்டியிருக்கலாம். ஆனால் அந்த விலை வீண்போகாது. ஏனெனில், நமது மக்களுக்கும், நமது உயிருக்கும் நாள்தோறும் பாதிப்பை ஏற்படுத்தி வரக்கூடிய, நமது வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, இந்த பயங்கரவாதத்துக்கு நாம் முடிவு கட்டியாக வேண்டும்.
பிரதமர் மோடிக்கு பாராட்டு: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளார். தெற்காசியப் பிராந்தியத்துக்கு இதுபோன்ற தலைமைதான் தேவைப்படுகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் ஆப்கானிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற வேதனையை ஆப்கானிஸ்தானும் அனுபவித்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் நாம் இணைந்து செயல்பட வேண்டும். இந்நடவடிக்கை ஒரு நாட்டுக்கு எதிராக மட்டுமே இருக்கக்கூடாது. எந்த நாட்டில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கப்பட்டு இருந்தாலும், அங்கு நாம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அப்தாலி.
இதனிடையே, நியூயார்க்கில் ஐ.நா.வுக்கான ஆப்கானிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி மஹ்மூத் சைகல் பேசியபோது, அரசியல் நோக்கங்களுக்காக பயங்கரவாதத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதால் பாகிஸ்தானுக்கும், அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நம்பிக்கையின்மை நிலவுவதாக குறிப்பிட்டார். இதேபோல், பாகிஸ்தானிலேயே அந்நாட்டின் அரசுத் தலைமைக்கும் ராணுவத்துக்கும் இடையே நம்பிக்கையின்மை நிலவுவதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே துரதிருஷ்டவசமாக நீண்டகாலமாக நிலவும் பதற்றம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT