சப்பாத்தி செய்யத் தெரியாது; ஆனால் 'தால்' அசத்தி விடுவேன்: இது ஒபாமாவின் 'சமையல் டைம்'!
எனக்கு சப்பாத்தி செய்யத் தெரியாது; ஆனால் 'தால்' அசத்தி விடுவேன் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
புதுதில்லி: எனக்கு சப்பாத்தி செய்யத் தெரியாது; ஆனால் 'தால்' அசத்தி விடுவேன் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
தில்லியில் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று நடத்தி வரும் தலைமைப்பண்பு தொடர்பான கருத்தரங்கத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக பிரபல ஊடகவியலாளர் கரண் தாப்பருடன் கேள்வி-பதில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பகிர்ந்து கொண்டதாவது:
முந்தைய நாள் இரவு தங்கும் விடுதியில் எனக்கு இரவு உணவு பரிமாறிய பணியாளர், உணவு மேஜையிலிருந்த 'தால்' குறித்து என்னிடம் சொல்லத் தொடங்கினார். அவரை இடைமறித்த நான், 'எனக்கு நீங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; கல்லூரிக் காலத்தில் எனக்கு அறை நண்பனாக இருந்த ஒரு இந்திய நண்பன் மூலம் எனக்கு ஏற்கனவே 'தால்' எப்படி செய்வது என்று தெரியும்' என்று தெரிவித்ததாகக் கூறினார்.
இதைக் கேட்டு அரங்கமே சிரிப்பில் ஆழ்ந்தது. மேலும் தொடர்ந்த அவர் அநேகமாக 'தால்' செய்யயத் தெரிந்த ஒரே அமெரிக்க அதிபர் தான்தான் என்று கூறினார். தொடர்ந்த அவர் மற்றொரு இந்திய உணவான 'கீமாவும்' தனக்கு செய்யத் தெரியும், தான் சமைக்கும் சிக்கன் பரவாயில்லாமல் இருக்கும் என்றும் பகிர்ந்து கொண்டார்.
பின்னர் கரண் தாப்பர் அவரிடம், 'அப்படியானால் உங்களுக்கு சப்பாத்தி செய்யத் தெரியுமா? ' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு 'சப்பாத்தி ரொம்பக் கடினம்' என்று ஒபாமா பதிலளித்தார்.
உலகின் மிகவும் அதிகாரம் வாய்ந்த ஒரு பதவியில் பணியாற்றிய அதிபர் ஒபாமா இந்திய உணவுகளைப் பற்றி 'சுவை'பட பகிர்ந்துகொண்டது அனைவரையும் கவர்ந்தது.