பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா
பாலியல் தாக்குதல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, பிரிட்டனின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கேல் ஃபாலன் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்
பாலியல் தாக்குதல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, பிரிட்டனின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கேல் ஃபாலன் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.
பிரதமர் தெரசா மேக்கு எழுதிய ராஜிநாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பது:
அண்மைக்காலமாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாகப் பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. எனது முந்தைய கால நடவடிக்கைகள் குறித்தும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டிருந்தன. அவற்றில் பலவும் பொய்க் குற்றச்சாட்டுகள். ஆனால் கடந்த காலத்தில் சில சந்தர்ப்பங்களில் எனது நடத்தையானது மிக உயரிய ஒழுக்க நிலையிலிருந்து வீழ்ச்சி அடைந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
நமது பாதுகாப்புப் படையின் பிரதிநிதியாக நான் அதன் கெளரவத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலையில், அதன் கெளரவத்துக்கு இழுக்கு நேரும் விதத்தில் எனது கடந்த கால செயல்கள் அமைந்தன. இதைத் தொடர்ந்து நான் எனது அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுகிறேன் என்று பிரதமருக்கு எழுதிய ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
அவரது ராஜிநாமாவை ஏற்றதாகப் பிரதமர் தெரசா மே அறிவித்தார். பாதுகாப்புத் துறைக்குப் புதிய அமைச்சராக கேவின் வில்லியம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஆளும் கட்சியின் தலைமை கொறடாவாக இருந்து வருகிறார். சில ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அந்தரங்க நடவடிக்கைகள் குறித்து ஒளிவுமறைவாகப் பேசப்பட்டு வந்தாலும், அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இதுவரை நேரடியாகப் புகார் தெரிவிக்கவில்லை.
மைக்கேல் ஃபாலன் விவகாரத்தில், 15 ஆண்டுகளுக்கு முன்னால், செய்தியாளரான ஜூலியா ஹார்ட்லி புரூவர் அருகில் அமர்ந்திருந்தபோது அவரது அனுமதியின்றித் தொட்டார் என்று கூறப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜூலியா ஹார்ட்லி புரூவர் அந்தக் காலகட்டத்தில் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த சம்பவத்தை அறிந்தவர்கள் மூலமாக அது கடந்த வாரம் கசிந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்றும், நெறி தவறி நடந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மே கூறி வந்த நிலையில், மூத்த அமைச்சரான மைக்கேல் ஃபாலன் தனது ராஜிநாமாவை வியாழக்கிழமை அறிவித்தார்.