உலகம்

பிரபல நாவலாசிரியை ஜேன் ஆஸ்டென் நினைவாக பிரிட்டனில் புதிய 10 பவுண்டு கரன்சி வெளியீடு

DIN

உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியை ஜேன் ஆஸ்டென் உருவப்படம் கொண்ட 10 பவுண்டு கரன்சி பிரிட்டனில் வியாழக்கிழமை புழக்கத்துக்கு வந்தது.

இந்த புதிய கரன்சி நோட்டுகளை வெளியிட்டு இங்கிலாந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் மார்க் கார்னி தெரிவித்ததாவது:
பிரிட்டனின் கரன்சி நோட்டுகள் நாட்டின் பாரம்பரியத்தின் களஞ்சியமாகவும், மகத்தான அரச பரம்பரைகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதாகவும், அவை பொதுமக்களுக்கு ஆற்றிய அரிய பங்களிப்பை பிரதிபலிக்கும் வகையிலும் உள்ளன.
அந்த வகையில், உலகின் தலைசிறந்த பெண் நாவலாசிரியைகளுள் ஒருவரான ஜேன் ஆஸ்டெனை பெருமைப்படுத்தும் விதமாக அவரது உருவப்படம் பொறித்த 10 பவுண்ட் கரன்சி நோட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த நோட்டின் பின்புறத்தில் புத்தக வாசிப்பைப் போற்றும் அவரது பிரபல வாசகம் இடம்பெற்றுள்ளது.
இப்புதிய நோட்டுகள் பழைய நோட்டுகளிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். குறிப்பாக, கண்பார்வையற்றவர்கள் எளிதாக அடையாளம் காணும் விதமாக இப்புதிய 10 பவுண்டு கரன்சியில் பிரெய்லி புள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், உயர் பாதுகாப்பு அம்சமாக "ஹோலோகிராம்' தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளன.
தற்போதைய நிலையில், நூறு கோடி புதிய 10 பவுண்டு பாலிமர் நோட்டுகள் வங்கிகளில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. அதில் ஏஏ01 0000001 வரிசை எண்ணில் அச்சிடப்பட்டுள்ள முதல் நோட்டு
எலிசபெத் அரசிக்கு பரிசளிக்கப்பட்டது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நோட்டுகளை முறையே இளவரசர் பிலிப், பிரதமர் தெரஸா மே ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த நிலையில், பரிணாம தத்துவ விஞ்ஞானி சார்லஸ் டார்வின் உருவம் பொறித்த பழைய நோட்டுகள் 2018 வரை செல்லுபடியாகும்.
பழைய நோட்டுகளை திரும்பப் பெறுவது குறித்து மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்படும்.
கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 50 பவுண்டு கரன்சிகளை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்றார் அவர்.
பாலிமர் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் புதிய கரன்சியின் நீடித்த தன்மைக்கு சுமார் 1 சதவீத அளவு மிருகக் கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. சைவ உணவு ஆர்வலர்கள், இந்து மத அமைப்பினர் உள்ளிட்டோர் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தபோதிலும் இங்கிலாந்து ரிசர்வ் வங்கி தனது திட்டத்தை மாற்றவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT