உலகம்

ஜெனிவாவில் வைகோவை சிங்களவர்கள் தாக்க முயற்சி: வைகோவின் பாதுகாப்பில் அச்சம்! 

DIN

ஜெனிவா: ஜெனிவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் வைகோ நேற்று இருமுறை பேசினார். அப்போது இலங்கையைச் சேர்ந்த 35 சிங்களவர்கள் வைகோவை சூழ்ந்துகொண்டு தகராறு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ,நா. மனித உரிமை ஆணையத்தின் 36-வது அமர்வு, ஜெனிவாவில் கடந்த 11-ஆம் தேதி முதல், வரும் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் ஈழத் தமிழர்கள் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக வைகோ ஜெனிவா சென்றுள்ளார். 

கடந்த 18-ஆம் தேதி முதல் வைகோ தனது கருத்தை முன்வைத்து பேசி வருகிறார். ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் பிரதான அரங்கத்தில் நேற்று திங்கள்கிழமை(செப்.25) வைகோ இரண்டு முறை பேசினார்.

முதல் உரையில் பேசுகையில், இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப் படுகொலை போர்க்குற்றங்கள் குறித்து, மனித உரிமைகள் கவுன்சில் இலங்கை அரசுக்கு 2012 ஆம் ஆண்டில் இருந்து, பல பரிந்துரைகளைச் செய்தது. ஆனால், எந்தப் பரிந்துரைகளையும் இலங்கை அரசு ஏற்கவில்லை, நிறைவேற்றவில்லை.

தமிழர்களாகிய நாங்கள் மிகவும் வேதனைப்படுவது யாதெனில், ஆறு மாத காலத்தில் அதிலும் 2009 மே மாதம் வரையில் 1,46,000 தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா தவறி விட்டது.

இன்னும் வேதனையானது என்னவென்றால், தற்போது  தமிழ் இனக் கலாச்சாரப் படுகொலை உட்பட, கட்டமைக்கப்பட்ட படுகொலை சிங்கள அரசால் நடத்தப்படுகின்றது.

தமிழ்ப்பெண்கள், குறிப்பாக, 90000 போர்க்கால விதவைகள் கதறுகிறார்கள். பெண்கள் காணாமல் போன தங்கள் கணவன், தந்தை, பிள்ளைகளைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்காமல், துயரத்தில் வாடுகிறார்கள்.

தமிழ் ஈழப் பகுதியில் இருந்து  இலங்கை அரசின் இராணுவத்தை முற்றாக வெளியேற்ற மனித உரிமைகள் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் இனத்தை மொத்தப் பேரழிவில் இருந்து காப்பாற்ற சர்வதேச சமூகமும் மனித உரிமைகள் கவுன்சிலும் முன்வர வேண்டும் என்றார்.

இந்த உரை முடித்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து, வைகோ ஆற்றிய இரண்டாவது உரையில், வருகின்ற நவம்பர் மாதம் இலங்கையின் மனித உரிமைகள் குறித்து, அனைத்துலக ஆய்வு நடைபெறப் போகின்றது.

முள்ளிவாய்க்காலிலும் அதற்கு முன்னரும் தான் நடத்திய இனப்படுகொலைக்குற்றங்களில் இருந்தும்,  2015 தீர்மானத்தில் இருந்தும் தப்பித்துக்கொள்ள இலங்கை அரசு தந்திரமான வழிகளைக் கையாள்கின்றது.

இலங்கை அதிபர் சிறிசேனாவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும், ஊடக நேர்காணல்களில் 2015 தீர்மானத்தின் பரிந்துரைகளை ஏற்க வேண்டியது இல்லை என்றும், போர்க்குற்றங்கள் விசாரணை எதுவும் நடக்காது என்றும் கூறுகின்றனர். ஆனால், இன்றைக்கும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதையும், படுகொலைகளும் சிங்கள இராணுவம், போலீசால் நடத்தப்படுகின்றது.

உதாரணமாக 2016 டிசம்பரில் யாழ் பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் நடராஜன் கஜன், பவுன்ராஜ் சுலக்சன் சிங்களப் போலீஸாரால் மிருகத்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்,

தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு சிங்கள இராணுவம் ஆளாக்குகிறது. கிளிநொச்சியில் கடந்த 210 நாள்களாக ஈழத்தமிழ்ப்பெண்கள் தாய்மார்கள் நீதிகேட்டு தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்களின் விம்மல்களையும், அழுகைச் சத்தத்தையும் மனித உரிமைகள் கவுன்சில் செவி கொடுத்துக் கேட்கட்டும்

கொடுமையான போது பால சேனா அமைப்பு, சிங்களக் குண்டர்களைக்கொண்ட அமைப்பு, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மசூதிகளைத் தாக்குவதோடு, இஸ்லாமிய மக்கள் மீதும் வன்முறையைக் கட்டவிழ்க்கிறது.

ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதற்கும், நீதி கிடைப்பதற்கும்  இருக்கின்ற ஒரே வழி என்னவென்றால், மனித உரிமைகள் கவுன்சில் இந்தப் பிரச்சினையை ஐ.நா.வின் பொதுச் சபைக்கு அனுப்புவதோடு, இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் அமைப்பதற்கு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை முன்வர வேண்டும் என்று பரிந்துரை செய்ய வேண்டும்.

மனித குலத்திற்கு எதிராக வட கொரியா நடத்திய குற்றங்களை விசாரிக்க என்ன ஏற்பாடுகள் நடந்தனவோ, அதே ஏற்பாடு ஈழத்தமிழர்களுக்கும் நடக்க வேண்டும்.

இலங்கையில் தமிழர்களுக்கு உள்ள ஆபத்தான நிலைமையை மனித உரிமைகள் கவுன்சில் ஐ.நா.வின் பொதுச்செயலாளரான மனித உரிமைகள் காவலர் அண்டோனியோ குட்டரெசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர் இலங்கைத் தீவுக்குச் சென்று நேரில் பார்வையிட்டுக் கண்காணித்து முடிவு எடுக்க வாய்ப்பு ஏற்படும்.

இந்த உரையை, குர்திஸ்தான் பிரதிநிதி உட்படப் பலரும் வைகோவுக்குக் கை கொடுத்துப் பாராட்டினர்.

ஆனால்,உரை முடித்துவிட்டு  இரண்டு  எட்டு நடப்பதற்குள் சிங்களவர்கள் ஆறேழு பேர் வைகோவைச் சூழ்ந்து கொண்டார்கள். அதில் ஒரு பெண்மணி, நீ இலங்கைப் பிரஜை இல்லையே? நீ இலங்கையைப் பற்றி எப்படிப் பேசலாம்? என்று கேட்டார்.

உடனே வைகோ பொறுமையாக, நீங்கள் யார்? இலங்கையைச் சேர்ந்தவரா? நீங்கள் சிங்களப் பெண்மணியா? என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி ஆமாம் என்றார்.

நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். எங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொப்புள்கொடி இரத்த உறவு இருக்கின்றது.  எனக்குப் பேச உரிமை உண்டு என்றார்.

அதற்குள் அவரைச் சூழ்ந்துகொண்ட சிங்களவர்கள், விடுதலைப்புலிகள் கொடூரமான கொலைகாரர்கள். அக்கிரமக்காரர்கள். அவர்களை ஆதரித்து நீ எப்படிப் பேசலாம்? என்றார்கள்.

இலட்சக்கணக்கான தமிழர்களை நீங்கள் கொன்றீர்கள். எங்கள் தாய்மார்கள் சகோதரிகளைக் கற்பழித்துக் கொன்றீர்கள் எங்கள் பச்சைக் குழந்தைகளைக் கொன்றீர்கள். நீங்கள் கொலைகாரப் பாவிகள் என்றார்.

இப்படிச் சூழ்ந்துகொண்டு வைகோவிடம் தகராறு செய்த சிங்களவர்களுள் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவத்தினர்தான் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். அவர்கள் 35 பேர் வந்து இருக்கின்றார்கள்.

அந்தப்பெண்மணி வைகோவுடன் தகராறு செய்வதை மனித உரிமைகள் கவுன்சிலுக்கு உள்ளேயே சிலர் வீடியோ எடுத்தார்கள். அவ்வாறு யாரும் அங்கே எடுக்கக் கூடாது.  இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டு வைகோவை மனித உரிமைகள்கவுன்சிலுக்குள் வர விடாமல் தடுக்கச் செய்கின்ற சதி இது என்று ஈழத்தமிழர்கள் கூறினார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்றே வைகோவை அடையாளம்காட்டிச் சிங்களவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள் என்றும் வைகோவின் பாதுகாப்பு குறித்து ஈழத்தமிழர்கள் கவலைப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT