ரோஹிங்கயா விவகாரத்தால் மத மோதல்கள் உருவாக வாய்ப்பு: ஐ.நா. எச்சரிக்கை
மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையைப் போன்ற அடக்குமுறைகள், எல்லை தாண்டி பரவி விட்டதால், மத அடிப்படையிலான மோதல்கள் உருவாக வாய்ப்புள்ளது
மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையைப் போன்ற அடக்குமுறைகள், எல்லை தாண்டி பரவி விட்டதால், மத அடிப்படையிலான மோதல்கள் உருவாக வாய்ப்புள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் சயீத் ராத் அல் ஹூசைன் எச்சரித்துள்ளார்.
மியான்மரில் ரோஹிங்கயா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ராக்கைன் மாகாணத்தில் அரசுப் படையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்குதல் நடத்தினர். அப்போதிலிருந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கயா முஸ்லிம்கள், அண்டை நாடான வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
மியான்மர் அரசின் நடவடிக்கைகளில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்கு இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாக, ரோஹிங்கயா முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை மியான்மர் அரசு மறுத்துள்ளது. மேலும், மியான்மரில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசு விளக்கம் அளித்தது.
இதுதவிர, தாக்குதல் நடத்தப்பட்ட ராக்கைன் மாகாணத்துக்குச் சென்று, அங்கு சுதந்திரமான முறையில் விசாரணை நடத்துவதற்கு ஐ.நா.வின் விசாரணைக் குழுவினருக்கும், வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கும் மியான்மர் அரசு அனுமதி மறுத்து விட்டது.
இந்நிலையில், ரோஹிங்கயா விவகாரம் குறித்த அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கடந்த வாரம் வெளியிட்டது. அதில், ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையில் மியான்மர் நாட்டின் ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் சயீத் ராத் அல் ஹுசைன், இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவுக்கு திங்கள்கிழமை வந்தார்.
அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பேசுகையில், 'ராக்கைன் மாகாணத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியுடன் மியான்மர் அரசு வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டு வந்தது. ஆனால், சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான பாகுபாட்டை அந்நாட்டு அரசால் மறைக்க முடியவில்லை.
ரோஹிங்கயா முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள், எல்லை தாண்டி சென்றுவிட்டதால், மத அடிப்படையிலான மோதல்கள் உருவாகக்கூடும் என்றார் அவர்.