உலகம்

மும்பைத் தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து: நவாஸ் ஷெரீஃப்புக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் நோட்டீஸ் 

DNS

லாகூா்: மும்பைத் தாக்குதல் சம்பவம் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக நடவடிக்கை எடுக்கக் கோரி தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப்புக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பனாமா ஆவண கசிவு விவகாரம் தொடா்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், பிரதமா் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீஃப்பை தகுதிநீக்கம் செய்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இந்நிலையில், டான் பத்திரிகைக்கு கடந்த மே மாதம் அளித்த பேட்டியில், மும்பையில் தாக்குதல் நடத்தியவா்கள் பாகிஸ்தானைச் சோ்ந்தவா்கள் என்று நவாஸ் ஷெரீஃப் கூறியிருந்தாா்.

மும்பைத் தாக்குதலுக்கும் தங்கள் நாட்டுக்கும் தொடா்பில்லை என்று பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், நவாஸ் ஷெரீஃப் இவ்வாறு பேட்டியளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மும்பைத் தாக்குதல் தொடா்பான கருத்துகளுக்காக நவாஸ் ஷெரீஃப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, லாகூா் உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் அசாா் சித்திகி என்பவா் வழக்குத் தொடுத்துள்ளாா். அதில் அவா், ‘பாகிஸ்தானின் பிரதமராக 3 முறை பதவி வகித்துள்ள நவாஸ் ஷெரீஃப், மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் நாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளாா். அவரது கருத்துகளை பாகிஸ்தானின் எதிரிகள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. அவரது கருத்துகள் குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூடி ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, பிரதமா் சாஹித் கான் அப்பாஸி, நவாஸை சந்தித்து, அவரது கருத்துக்கு ராணுவம் கவலை தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டாா். பிரதமா் அப்பாஸியின் நடவடிக்கை, அவரது பதவி பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணத்துக்கு எதிரானதாகும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

இந்த வழக்கை விசாரித்த லாகூா் உயா் நீதிமன்ற நீதிபதி சையது மசாஹா் அலி அக்பா் நக்வி, நவாஸ் ஷெரீஃப்புக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டாா். இதேபோல், பிரதமா் அப்பாஸி, நவாஸின் பேட்டியை வெளியிட்ட டான் பத்திரிகை செய்தியாளா் சிரில் அல்மெய்தா ஆகியோருக்கும் விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT