பிரிட்டன் வெடி விபத்து: மூவர் கைது
பிரிட்டன் கட்டட வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழப்புக்கு காரணமாக கருதப்படும் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரிட்டன் கட்டட வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழப்புக்கு காரணமாக கருதப்படும் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
லீசெஸ்டர் நகரின் ஹிங்லே சாலையில் உள்ள கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பல்பொருள் அங்காடி மற்றும் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், வெடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு காரணமாக சந்தேகிக்கப்படும் 30 வயது மதிக்கத்தக்க மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கிழக்கு அங்லியா பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சம்பவம் நடந்த இடத்தில் காணப்பட்ட சூழ்நிலையை வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது விசாரணை முழுமையடையாத நிலையில் அவர்கள் குறித்து மேலும் தகவல்களை வெளியிட முடியாது. அந்த வெடிவிபத்து சம்பவம் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் சிக்கவில்லை. எனவே, அது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.
கைதான மூன்று பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதையடுத்து, வெடி விபத்துக்கான உண்மையான காரணம் விரைவில் தெரியவரும் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.