முகப்பு
உலகம்

இந்தோனேசியாவில் மேலும் ஒரு குடும்பம் தற்கொலைத் தாக்குதல்

இந்தோனேசியாவின் சுராபாயா நகர காவல்துறை தலைமையகத்தில் மேலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் திங்கள்கிழமை தற்கொலை தாக்குதல் நடத்தினர்.

Updated On : 15 மே, 2018 at 12:18 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

இந்தோனேசியாவின் சுராபாயா நகர காவல்துறை தலைமையகத்தில் மேலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் திங்கள்கிழமை தற்கொலை தாக்குதல் நடத்தினர்.
8 வயது சிறுமியுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் நடத்திய இந்தத் தாக்குதலில், 10 பேர் காயமடைந்தனர்; அந்தச் சிறுமியும் காயங்களுடன் உயிர் தப்பியதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, இதே நகரின் 3 கிறிஸ்துவ தேவாலயங்களில் இரு சிறுவர்களை அழைத்து வந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 14 பேர் பலியான நிலையில், மறுநாளே அதே போன்று மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தேசிய காவல்துறை தலைவர் டிதோ கர்ணாவியன் கூறியதாவது:
இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான சுராபாயா நகரிலுள்ள காவல்துறை தலைமையகத்துக்கு இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள், தலைமையக வாயிலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை அடுத்தடுத்து வெடிக்கச் செய்தனர்.
அந்த மோட்டார் சைக்கிள்களில் 8 வயது சிறுமி உள்பட 5 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
குண்டுவெடிப்பில் அந்தச் சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனினும், அவரது தாய், தந்தை, இரு சகோதரர்கள் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில், போலீஸார் உள்பட 10 பேர் காயமடைந்தனர் என்றார் அவர்.
முன்னதாக, சுராபாயா நகரிலுள்ள சாண்டா மரியா ரோமன் கத்தோலிக்க தேவாலயத்துக்கு தனது 9 மற்றும் 12 வயதுடைய இரு மகள்களை ஞாயிற்றுக்கிழமை அழைத்து வந்த ஒரு பெண் பயங்கரவாதி, மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
அடுத்த சில நிமிடங்களில், டிபோனெகோரோ கிறிஸ்துவ தேவாலயத்திலும், அதனைத் தொடர்ந்து மூன்றாவதாக சுராபாயா நகரின் பெந்தெகொஸ்தே சபையிலும் அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் 16, 18 வயதுடைய இரு மகன்களும் தற்கொலை தாக்குதல் நடத்தினர்.
10 நிமிட இடைவெளிக்குள் நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்புகளில் 14 பேர் பலியாகினர்.
அந்த பயங்கரவாதிகள், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் இந்தோனேசியக் கிளையாகச் செயல்படும் ஜெமா அன்ஸாருத் தெளலா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்தோனேசியாவில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவாகும். அந்த நாட்டின் பாலி தீவில் கடந்த 2002-ஆம் ஆண்டு அல்-காய்தா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 202 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு 2005-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இரு வேறு தாக்குதல்களில் 42 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, அந்த நாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதவாத வன்முறை கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு மோசமான தாக்குதல்கள் நடத்தப்படுவது, இந்தோனேசியாவில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.