முகப்பு
உலகம்

பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை பாகிஸ்தானை தொடர்ந்து வலியுறுத்துவோம்: அமெரிக்கா

லஷ்கர் ஏ தொய்பா, ஹக்கானி இயக்கம் உள்பட அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கு எதிராகவும் பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானை தொடர்ந்து வலியுறுத்துவோம்' என்று அமெரிக்கா 

Updated On : 4 செப்டம்பர், 2018 at 2:38 AM
பகிர்:


லஷ்கர் ஏ தொய்பா, ஹக்கானி இயக்கம் உள்பட அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கு எதிராகவும் பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானை தொடர்ந்து வலியுறுத்துவோம்' என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முன்னதாக, பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதில் பாகிஸ்தான் தோல்வியடைந்துவிட்டதாகவும்; அந்த நாட்டுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த ரூ.2,130 கோடி கூட்டு நிதியுதவி ரத்து செய்யப்படும் எனவும் அமெரிக்கா சனிக்கிழமை தெரிவித்தது.
இந்நிலையில், வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கோன் பால்க்னர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பாகிஸ்தானுக்கான கூட்டு நிதியுதவியை ரத்து செய்வது தொடர்பான முடிவு புதிதாக எடுக்கப்பட்டது அல்ல. ஏற்கெனவே கடந்த ஜனவரியில் அறிவிக்கப்பட்டதுதான். அதனை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளோம். எனினும், இந்த முடிவுக்கு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இம்மாதம் 30-ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது.
லஷ்கர் ஏ தொய்பா, ஹக்கானி இயக்கம் உள்பட அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கு எதிராகவும் பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இனிமேலும் வலியுறுத்துவோம் என்றார் அவர்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாகிஸ்தானுக்கு வரும் 5-ஆம் தேதி செல்லவிருக்கிறார். பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசவிருக்கும் அவர், பயங்கரவாத விவகாரம் குறித்தும் பேசவிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்காவின் நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் கூறுகையில், அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக கூறப்படும் நிதி, பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் ராணுவ உதவியல்ல. பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்காக பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட இருந்த நிதிதான். பாகிஸ்தானுக்கு வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவிடம் இந்தப் பிரச்னை குறித்து பேசுவோம்' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.